Tuesday, February 9, 2010

செங்கொடியின் புதல்வி

கண் பார்வை இல்லாதவர். காது கேட்க இயலாதவர். எனினும், பார்வை இழந்தவர்களும் காது கேளாதவர்களும் படித்துப் பட்டம் பெற முடியும்; ஞான ஒளியை ஏந்தி நிற்க முடியும் என்பதை உலகிலேயே முதன் முதலாக சாதித்துக் காட்டியவர். முன்னேற்றத்திற்கு ஊனம் ஒரு தடை அல்ல என்பதை உலகத்துக்கு உணர்த்திய முன்னோடி. பார்க்க இயலாதவர்களின் கண்களில் நம்பிக்கைச் சுடரொளி ஏற்றியவர். கேட்க முடியாதவர்களின் செவிகளில் உத்வேக கீதம் இசைத்தவர்.  ஆம். அவர்தான் அமெரிக்காவின் வீர மங்கை ஹெலன் கெல்லர்.

1880 ஜூன் 27-இல் அமெரிக்காவில் பிறந்து 19 மாதக் குழந்தையாக இருக்கும்போதே மெனிஞ்சைடிஸ் நோயால் பார்வையை இழந்து, காது கேளாமல், மொழி அறியாமல், பிறருடன் தொடர்பு கொள்ள முடியாமல் சின்னஞ் சிறுமியாக வாடி வதங்கிய ஹெலன் கெல்லரின் தனிமைச் சிறையை உடைத்து, அவருக்கு படிக்கச் சொல்லிக் கொடுத்து வளர்த்து ஆளாக்கிய, அதற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த ஆன்னி சல்லிவன் (திருமதி மேசி) ஓர் இலட்சிய ஆசிரியைக்கு சரியான எடுத்துக்காட்டு.
அவர் இலட்சிய ஆசிரியை என்றால் ஹெலன் கெல்லர் ஓர் இலட்சிய மாணவி. இவை ஹெலன் கெல்லரைப் பற்றி பலரும் அறிந்த பக்கம்.

போருக்கு எதிராகவும், பெண்கள் வாக்குரிமை பெறுவதற்காகவும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், சோஷலிசத்துக்காகவும் பிற முற்போக்கு லட்சியங்களுக்காகவும் குரல் கொடுத்தவர். அமெரிக்க மக்கள் உரிமைக் கழகத்தைத் தோற்றுவிக்க உதவி செய்தவர். குரோவர் கிளீவ்லாண்டில் இருந்து லிண்டன் பி.ஜான்சன் வரையில் ஒவ்வொரு அமெரிக்க அதிபரையும் சந்தித்து உரையாடியவர். சார்லி சாப்ளின், அலெக்சாண்டர் கிரகாம் பெல், மார்க் ட்வெய்ன் ஆகிய புகழ்பெற்ற மனிதர்கள் அவரின் நண்பர்கள். அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அவர். அதிபர் தேர்தல்களில் சோஷலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக யூஜின் வி.டெப்ஸ் போட்டியிட்ட ஒவ்வொரு முறையும் அவரை ஆதரித்துப் பிரசாரம் செய்திருக்கிறார். இது ஹெலன் கெல்லரைப் பற்றி நாம் அதிகம் அறிந்திராத இன்னொரு பக்கம். அந்த மறுபக்க வரலாற்றில் இருந்து இங்கே ஓர் ஏடு விரிகிறது....நான் எவ்வாறு சோஷலிஸ்ட் ஆனேன்?
ஹெலன் கெல்லர்

 பல மாதங்களாகவே என்னுடைய பெயரும் சோஷலிசமும் செய்தித் தாள்களில் அடிக்கடி இணைந்து வெளியாகி வருகின்றன. பேஸ்பால் விளையாட்டுப் போட்டி, அதிபர் ரூஸ்வெல்ட், நியூயார்க் காவல்துறை முறைகேடு ஆகிய செய்திகளுடன் நானும் முதல்பக்க செய்திகளில் இடம்பெறுவதாக என் நண்பர் ஒருவர் சொல்கிறார். இந்தச் செய்திகளுடன் சேர்ந்து இடம்பெறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றாலும், என் மீதும், என் ஆசிரியர் திருமதி மேசியின் (ஆன்னி சல்லிவன்) கல்விச் சாதனைகள் மீதும் பலரும் ஆர்வம் காட்டிவருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நகைப்புக்குரிய விளம்பரத்தையும் நல்ல பயன்பாடுகளாக மாற்ற முடியும் என்பதை எடுத்துக்காட்டுவதுபோல், என்னுடைய செயல்பாடுகளைப் பதிவு செய்யும் செய்தித் தாள்கள், அவற்றின் பத்திகளில் அடிக்கடி சோஷலிசம் என்ற வார்த்தையைக் கொண்டுவர இதுபோன்ற செயல்கள் வழிவகுக்கும் எனில் அது எனக்கு மகிழ்ச்சி தரும். எதிர்காலத்தில் சோஷலிசத்தைப் பற்றி நான் எழுதுவேன் என்று நம்புகிறேன்; அவ்வாறு செய்வதன்மூலம், எனக்கும் என் எண்ணங்களுக்கும் பெரிய அளவுக்கு அளிக்கப்படும் விளம்பரத்தை ஓரளவுக்கு நியாயப்படுத்த முடியும் என்றும் நம்புகிறேன்.

இதுவரையில் இந்த விஷயம் பற்றி நான் எழுதியது குறைவு, பேசியது குறைவு. நான் சில கடிதங்கள் எழுதியிருக்கிறேன். குறிப்பாகத் தோழர் ஃபிரெட் வாரனுக்கு எழுதிய ஒரு கடிதம். அவை, அப்பீல் டு ரீசன் இதழில் பிரசுரமாகி உள்ளன. சில செய்தியாளர்களுடன் பேசியிருக்கிறேன். அவர்களில் ஒருவரான நியுயார்க் வோர்ல்டு இதழின் செய்தியாளர் திருமிகு. அயர்லாண்ட் மிகவும் பெருமைப்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டிருக்கிறார். நான் என்ன சொன்னேனோ அதை முழுமையாகவும், நியாயமான முறையிலும் தந்திருக்கிறார். ஸ்னெக்டடிக்கு நான் ஒருபோதும் சென்றதில்லை. மேயர் லூனை நான் ஒருபோதும் சந்தித்ததில்லை. அவரிடம் இருந்து எனக்குக் கடிதம் எதுவும் வந்ததில்லை. ஆனால், திருமிகு. மேசி மூலமாக அவர் அன்பான செய்திகளை எனக்கு அனுப்பி இருக்கிறார். திருமதி மேசியின் உடல்நலக் குறைவு காரணமாக, ஸ்னெக்டடியில் உள்ள தொழிலாளர்களைச் சந்திப்பதற்கு நான் வைத்திருந்த திட்டங்கள் எல்லாம் கைவிடப்பட்டன.

முதலாளித்துவ ஏடுகள்

இதுபோன்ற எதிர்மறையான, ஒப்பீட்டளவில் முக்கியத்துவமற்ற விஷயங்களைப் பற்றி முதலாளித்துவப் பத்திரிகைகளிலும், சோஷலிசப் பத்திரிகைகளிலும் பல தலையங்கங்கள் எழுதப்பட்டுள்ளன. அது பற்றிய செய்தி நறுக்குகள் ஒரு மேசை அறை அளவுக்கு நிறைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் கால் பகுதியைக் கூட நான் படிக்கவில்லை. அவை எல்லாவற்றையும் இனி எப்போதேனும் படிப்பேனா என்பதும் சந்தேகமே. இந்த சிறிய அளவிலான விவரத்தின் மீது இவ்வளவு அதிக விமர்சனங்கள் எழும் என்றால், நான் முழுமனதோடு சோஷலிசத்திற்காக எழுதவும், பேசவும் செயல்படத் தொடங்கினால் செய்தித்தாள்கள் என்னவெல்லாம் செய்யுமோ? இப்போதைக்கு என் நிலை குறித்து அறிவிக்கவும், சில பொய்யான தகவல்களைத் திருத்தவும், நியாயமற்றவை என எனக்குத் தோன்றுகிற சில விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கவும் நான் விரும்புகிறேன்.

சோஷலிஸ்ட் ஆனது எப்படி?

முதலில் - நான் எவ்வாறு சோஷலிஸ்ட் ஆனேன்? படித்ததன் வாயிலாக. வெல்ஸ் எழுதிய ‘பழைய உலகத்துக்குப் பதிலாக புதிய உலகம்’ தான் நான் படித்த முதல் புத்தகம். திருமதி மேசியின் பரிந்துரையினால்தான் நான் அதைப் படித்தேன். கற்பனைத் திறம் மிக்க அந்த நூலின் தரத்தினால் அவர் கவரப்பட்டிருந்தார். மின்சாரம் பாய்ச்சும் அதன் நடை எனக்கு உற்சாகம் அளிக்கும், சுவையாக இருக்கும் என்று அவர் நம்பினார். அந்தப் புத்தகத்தை அவர் என்னிடம் கொடுத்தபோது, அவர் ஒரு சோஷலிஸ்ட் ஆக இல்லை. இப்போதும் அவர் சோஷலிஸ்ட் இல்லை. திருமிகு. மேசியும் நானும் அவருடன் வாதாடி சோஷலிஸ்ட் ஆவதற்கு முன்பு ஒருவேளை அவர் ஆகலாம்.

நான் படித்துக் கற்றதெல்லாம் கைமண் அளவுதான்; அதுவும் என்னால் மெதுவாகத்தான் படிக்க இயலும். பார்வை இழந்தவர்களுக்காக பிரெய்லி முறையில் அச்சிடப்பட்ட, ஜெர்மன் மொழியில் இருமாதத்துக்கு ஒருமுறை வெளியாகும் சோஷலிஸ்ட் இதழ்களை நான் படிப்பேன். (பல அம்சங்களில் நமது ஜெர்மன் தோழர்கள் நம்மை விடவும் முன்னணியில் உள்ளனர்). எர்பஃர்ட் திட்டம் ஜஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி 1891-இல் வெளியிட்ட கட்சித் திட்டம்ஸ குறித்து காவுட்ஸ்கி நடத்திய விவாதம் ஜெர்மன் பிரெய்லியில் என்னிடம் உண்டு.

படிப்பதற்கு நான் தேர்ந்தெடுத்தவற்றை எனக்குப் படித்துக் காட்டுவதற்காக வாரத்துக்கு மூன்று முறை வரும் ஒரு தோழியின் மூலம் என் கைகளுக்கு எழுத்துக்கூட்டி சொல்லித் தரப்பட்டதுதான் நான் படித்த மற்ற சோஷலிஸ்ட் இலக்கியங்கள். ஆர்வத் துடிப்பு கொண்ட என் விரல்களுக்கு படித்துச் சொல்லுமாறு அந்தத் தோழியின் உயிர்த்துடிப்பு மிக்க விரல்களை நான் அடிக்கடி கேட்டுக் கொண்டது தேசிய சோஷலிஸ்ட் இதழைத்தான். கட்டுரைகளின் தலைப்புகளை அவர் தருவார். எப்போது படிக்க வேண்டும், எப்போது விட்டுவிட வேண்டும் என்பதை அவருக்கு நான் சொல்லுவேன். ‘இன்டர்நேஷனல் சோஷலிஸ்ட் ரெவ்யூ’ இதழில் இருந்து நம்பிக்கையுடன் ஒலிக்கும் தலைப்புகளுடன் கூடிய கட்டுரைகளையும் அவரைப் படித்துக் காட்டச் சொல்லுவேன். விரல்கள் மூலம் எழுத்துக் கூட்டிப் படிப்பதற்கு நேரம் ஆகும். பொருளாதாரம் பற்றிய 50,000 வார்த்தைகள் கொண்ட ஒரு புத்தகத்தை, ஒருவரின் விரல்கள் மூலம் கிரகிப்பது என்பது எளிதான ஒன்றோ, விரைவான விஷயமோ அல்ல. எனினும் அது மகிழ்ச்சி அளிக்கும் ஒன்று. மேதைகளான அனைத்து சோஷலிஸ்ட் எழுத்தாளர்களையும் எனக்கு நானே நன்கு அறிமுகம் செய்து கொள்ளும் வரையில், அதை மீண்டும் மீண்டும் நான் அனுபவித்து மகிழ்ந்திருக்கிறேன்.

அவதூறுகள் அனந்தம்

இந்த வெளிச்சத்தில். என்னைப் பற்றி இரண்டு சோஷலிஸ்ட் எதிர்ப்பு இதழ்களான ‘காமன் காஸ்’ இதழில் அச்சாகி, ‘லைவ் இஷ்யூ'  இதழில் மறுபிரசுரம் செய்யப்பட்டிருந்த ஒரு சிறிய செய்திபற்றி விளக்கம் அளிக்க விரும்புகிறேன்: “இருபத்தி ஐந்து ஆண்டுகளாக ஹெலன் கெல்லரின் ஆசிரியையாகவும் நிரந்தரத் தோழியாகவும் இருப்பவர், முன்பு ரென்தாமைச் சேர்ந்தவரான திருமதி ஜான் மேசி. திருமிகு மேசி, திருமதி மேசி ஆகிய இருவருமே உற்சாகம் மிக்க மார்க்சிய கொள்கை பரப்பாளர்கள். வாழ்க்கையின் மிக உள்ளார்ந்த ஞானத்துக்காக, இந்த வாழ்நாள் தோழியை நம்பியிருக்கும் ஹெலன் கெல்லர் இத்தகைய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை’’ என்கிறது அந்தப் பத்திரிகை செய்தி.

திருமிகு மேசி உற்சாகம் மிக்க மார்க்சிய கொள்கைப் பிரசாரகராக இருக்கலாம். எனினும், என்னுடைய விரல்கள் மூலமாக அவருடைய மார்க்சியத்தைப் பரப்புவதற்கு அவர் அதிக உற்சாகம் காட்டியதில்லை என்பதை வருத்தத்துடன் கூற விரும்புகிறேன். திருமதி மேசி ஒரு மார்க்சிஸ்ட்டோ, சோஷலிஸ்ட்டோ அல்ல. எனவே அவரைப் பற்றி ‘காமன் காஸ்’ கூறியிருப்பது உண்மை அல்ல. அது, அந்தப் பத்திரிகை ஆசிரியரின் புனைசுருட்டுதான். இந்த வழியில்தான் அவரது மனம் செயல்படும் என்றால், சோஷலிசத்தை அவர் எதிர்ப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஒரு சோஷலிஸ்ட் ஆக இருப்பதற்கான உணர்வோ அல்லது அறிவாற்றல் ரீதியில் மதிக்கத்தக்க வேறு எதுவுமோ அவருக்கு இல்லை.

அதே கட்டுரையில் இருந்து இன்னொரு மேற்கோளைப் பார்ப்போம். அதன் தலைப்பு “ஸ்னெக்டாடி நகர் கம்யூனிஸ்ட்டுகள் விளம்பரம் செய்கிறார்கள்; பிரபலம் அடைவதற்காகப் பார்வையிழந்த பெண் ஹெலன் கெல்லரைப் பயன்படுத்துகிறார்கள்” என்பதாகும்.

 “பாவப்பட்ட ஹெலன் கெல்லர், ஸ்கெனக்டாடி நகர சோஷலிஸ்ட்டுகளால் இப்போது சுரண்டப்படுவதை விடவும் அதிகம் பரிதாபத்துக்குரிய வேறு எதையும் கற்பனை செய்வது கடினம். அவர் ஒரு சோஷலிஸ்ட் என்பதையும் ஸ்னெக்டாடி நகரின் புதிய மக்கள் நலக் குழுவின் உறுப்பினர் ஆகப் போகிறார் என்பதையும் கட்சியின் செய்தி அமைப்புகள் தொடர்ந்து பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன..” என்று இப்படியாகத்தானே அந்தக் கட்டுரை தொடங்குகிறது.
“பாவப்பட்ட ஹெலன் கெல்லர் இப்போது சுரண்டப்படுவதைக் காட்டிலும்” என்ற சொற்றொடர் குறித்து எள்ளி நகையாடல்லாம். ஆனால் அதை நான் தவிர்க்க விரும்புகிறேன். ‘காமன் காஸ்’ போன்ற ஒரு பத்திரிகையின் போலித்தனமான அனுதாபத்தை நான் விரும்பவில்லை என்று மட்டும் சொல்கிறேன். ஆனால் ‘சுரண்டல்’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பது அந்தப் பத்திரிகைக்குத் தெரியுமானால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

இப்போது நாம் உண்மை விவரங்களுக்கு வருவோம். ஸ்னெக்டாடி நகருக்கு நான் போகக்கூடும் என்பதை மேயர் லூன் கேள்விப்பட்டபோது, மக்கள் நலக் குழுவில் எனக்காக ஓர் இடம் வைத்திருக்க வேண்டும் என்று அந்தக் குழுவுக்கு முன்மொழிந்திருக்கிறார். மேயர் லூனின் ‘தி சிட்டிசன்’ பத்திரிகையில் இதுபற்றி எதுவும் வெளியிடப்படவில்லை. உண்மையில் ஸ்கெனக்டாடி நகருக்கு நான் இடம்பெயரும் வரையில் இந்த விவரம் பற்றி எதுவும் சொல்லக் கூடாது என்பதுதான் குழுவினுடைய எண்ணமாக இருந்தது. ஆனால் இத்திட்டம் பற்றி முதலாளித்துவப் பத்திரிகைகளின் செய்தியாளர்கள் தெரிந்து கொண்டுவிட்டனர். ஸ்னெக்டாடி நகரில் மேயர் லூன் இல்லாத நேரம் பார்த்து, அல்பேனியின் ‘நிக்கர் பாக்கர்’ பத்திரிகை அந்த அறிவிப்பை வெளியிட்டு விட்டது. இது நாடு முழுவதும் தந்தி மூலம் பரப்பப்பட்டது. இதன் பிறகுதான் பத்திரிகைகளின் செய்திச் சுரண்டல் தொடங்கியது.

 இதை யார் செய்தது? சோஷலிஸ்ட் பத்திரிகைகளா? இல்லை, முதலாளித்துவப் பத்திரிகைகள். சோஷலிஸ்ட் பத்திரிகைகள் செய்தியை வெளியிட்டன. அவற்றுள் சில வரவேற்றுத் தலையங்கங்களும் எழுதின. எனினும், மேயர் லூனின் பத்திரிகையான ‘தி சிட்டிசன்’ மௌனம் காத்தது. பேட்டிகளுக்காக நிருபர்கள் தொலைபேசி மூலமும், தந்தி மூலமும் முயன்று கொண்டிருந்த அனைத்து வாரங்களிலும் அது என் பெயரைக் குறிப்பிடவே இல்லை.

முதலாளித்துவப் பத்திரிகைகள்தான் தங்களது ஆதாயத்துக்கு அந்த செய்தியைப் பயன்படுத்திக் கொண்டன. ஏனெனில், இந்த சராசரிப் பத்திரிகைகளுக்கு சோஷலிசத்தைப் பற்றி அக்கறை எதுவும் இல்லை; சோஷலிசத்தை அவை வெறுக்கத்தான் செய்கின்றன. ஆனால் வருந்தத்தக்க வகையில் பத்திரிகைகளின் வெட்டி வம்பளப்புகளுக்கு நான் பொருளாகிப் போனேன். நான் ஸ்கெனக்டாடி நகரில் இல்லை என்பதை மறுக்க முயன்று நாங்கள் களைத்துப் போனோம். அந்தச் ‘செய்தி’யை முதலில் வெளியிட்ட நிருபரை நான் வெறுக்கத் தொடங்கினேன்.

முதலாளித்துவப் பத்திரிகைகள் “நான் ஒரு சோஷலிஸ்ட் என்ற உண்மையை அறிவித்த” பிறகு சோஷலிஸ்ட் பத்திரிகைகள் என்னைப் பற்றி பெருமளவு எழுதின என்பது உண்மைதான். ஆனால் என்னைச் சந்திக்க வந்த நிருபர்கள் எல்லோரும் சராசரி வணிக நோக்கில் செயல்படும் பத்திரிகைகளைச் சேர்ந்தவர்களே. எந்த சோஷலிஸ்ட் பத்திரிகையும், ‘தி கால்’ ஆனாலும் சரி, ‘நேஷனல் சோஷலிஸ்ட்’ ஆனாலும் சரி என்னிடம் ஒரு கட்டுரைகூட கேட்டதில்லை. ஒரு கட்டுரை பெற விரும்புவதாக திருமிகு மேசியிடம் ‘தி சிட்டிசன்’ ஆசிரியர் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். ஆனால் அதை நேரடியாகக் கேட்காத அளவுக்கு அவர் பிறர் உணர்வுகளை மதிக்கும் பண்பாளராக இருந்தார்.

 ‘தி நியூயார்க் டைம்ஸ்’ என்னிடம் ஒரு கட்டுரை கேட்டது. மக்களைச் சென்றடைவதற்கு தன்னுடைய பத்திரிகை ஒரு மதிப்பு மிக்க ஊடகம் என்று எனக்கு உறுதி அளித்தும், என்னிடம் இருந்து ஒரு கட்டுரை வேண்டும் என்று கேட்டும் அந்தப் பத்திரிகை ஆசிரியர் எனக்கு எழுதி இருந்தார். ஸ்னெக்டாடி நகர மக்கள் நலக் குழுவின் உறுப்பினர் என்ற முறையில் எனது கடமைகள் பற்றிய கருத்துக்களையும், எனது திட்டங்களையும் அனுப்புமாறு கேட்டு அவர் எனக்கு தந்தியும் அனுப்பி இருந்தார். அந்த வேண்டுகோளை நான் ஏற்கவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சில நாட்கள் கழித்து, அதனுடைய நியாயமான அனுதாப எல்லைகளுக்கும் அப்பால், சமுதாயத்தினால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருத்தியாக என்னை ‘தி நியூயார்க் டைம்ஸ்’ ஆக்கிவிட்டது. “வெறுக்கத் தக்க செங்கொடி” என்ற தலைப்பில் செப்டம்பர் 21-இல் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ ஏட்டில் ஒரு தலையங்கம் வெளியானது. அதில் இருந்து இரண்டு பத்திகளை இங்கே எடுத்துக் காட்ட விரும்புகிறேன்:

"இந்தக் கொடி சும்மாதான் கிடக்கிறது. ஆனாலும் அது வெறுக்கத்தக்கது. உலகம் முழுவதும் சட்டம் ஒழுங்குச் சீர்குலைவின், அராஜகத்தின் அடையாளச் சின்னமாக இருக்கிறது. அதனால்தான் நியாய உள்ளம் படைத்த அனைத்து மனிதர்களாலும் இது வெறுக்கப்படுகிறது.”

“செங்கொடி நியாயப் படுத்துகிற சில செயல்களைச் செய்யும் வரையில், அந்தக் கொடியை  ஏந்தியவர் காவல் துறையினரின் தாக்குதலுக்கு ஆளாவதில்லை. எப்போதுமே சந்தேகக் கண்ணுடன் பார்க்கப்படுவதற்கு அந்த நபர் தகுதியானவர்தான். சட்டம் ஒழுங்குச் சீர்குலைவின் அடையாளச் சின்னத்தை ஏந்தி நிற்பதன் மூலம், மதிப்புக்கும் அனுதாபத்துக்குமான அனைத்து உரிமைகளையும் அவர் இழந்துவிடுகிறார்” என்று அதில் எழுதப்பட்டுள்ளது.

'செங்கொடி என் கொடி'

எந்த நிறம் கொண்ட துணியையும் நான் வழிபடுபவள் அல்ல. ஆனால் செங்கொடியை நான் நேசிக்கிறேன். எனக்கும், பிற சோஷலிஸ்ட்டுகளுக்கும் அது எதை அடையாளப்படுத்துகிறதோ அதை நான் நேசிக்கிறேன். என் வீட்டு நூலக அறையில், செங்கொடி ஒன்று தவழ்ந்துகொண்டிருக்கிறது. என்னால் முடியும் எனில், அந்தச் செங்கொடியுடன் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ அலுவலகத்தின் முன்னே மகிழ்ச்சியுடன் அணிவகுத்து நடைபோட்டுச் செல்வேன். அந்தக் கண்கொள்ளாக் காட்சியைச் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் அனைவரும் காணட்டும். மதிப்புக்கும் அனுதாபத்துக்குமான அனைத்து உரிமையையும் நான் இழந்துவிட்டதாகவும், சந்தேகக் கண்ணுடன் நான் பார்க்கப்பட வேண்டும் என்றும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ ஏட்டில் வெளியான கண்டனத்தில் கூறப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும்கூட, நான் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ ஆசிரியர் விரும்புகிறார்! சந்தேகத்துக்குரிய தன்மை உள்ளவளாக நான் இருக்கிறேன் என்றால், அவருக்காக நான் எழுத வேண்டும் என்று எப்படி அவர் என்னை நம்புகிறார்?

பணக்காரர்களின் நலனுக்கு எதிரான இயக்கத்தைக் கண்டிக்க முயலும்போது, ஒரு முதலாளித்துவப் பத்திரிகை ஆசிரியர் எப்படி ஒரு மோசமான ஒழுக்க நெறியில், மோசமான தர்க்கத்தில், மோசமான நடத்தையில் வீழ்கிறார் என்பதை என்னைப் போலவே நீங்களும் உணர்ந்து அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறேன். அனுதாபத்துக்கு நாம் உரிமை உடையவர்கள் அல்ல என்றாலும், அவருடைய பத்திரிகை பணம் பண்ண உதவுகிற வகையில் நம்மில் சிலர் கட்டுரைகள் எழுதலாமாம்! ஒரு வேளை நமது கருத்துக்களில் ஒரு கொலையாளியின் ஒப்புதல் வாக்குமூலத்தில் காண்கிற அதே மதிப்பை அவர் காணக்கூடும்.

சோஷலிசம் எட்டிக்காயாம்!

பத்திரிகையாளர்களை எனக்குப் பிடிக்கும். அவர்களில் பலரை நான் அறிவேன். எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் இரண்டு, மூன்று பத்திரிகை ஆசிரியர்களும் உண்டு. மேலும், பார்வை இழந்தவர்களுக்காக நாங்கள் செய்ய முயன்று வரும் பணிகளுக்குப் பத்திரிகைகள் பெரும் உதவியாக இருந்து வந்துள்ளன. பார்வை இழந்தவர்களுக்காகப் பணியாற்றுவதற்கும், பிற மேலோட்டமான அறக்கட்டளைகளுக்கும் அவர்கள் உதவி செய்வதால் அவர்களுக்கு எந்தச் செலவும் இல்லை. ஆனால் சோஷலிசம் - ஐயய்யோ, அது வேறு விஷயம்! அது வறுமை அனைத்தின், அறச்செயல்கள் அனைத்தின் வேருக்கே அல்லவா செல்கிறது! பத்திரிகைகளுக்குப் பின்னால் இருக்கும் பணபலம் சோஷலிசத்துக்கு எதிரானது. தங்களுக்குச் சோறுபோடும் கரங்களுக்குக் கீழ்ப்படிந்து நிற்கும் பத்திரிகை ஆசிரியர்கள் சோஷலிசத்தை ஒடுக்குவதற்கும், சோஷலிஸ்ட்டுகளின் செல்வாக்கைச் சீர்குலைப்பதற்கும் எந்த எல்லைக்கும் செல்வார்களல்லவா?.

தோழர் ஃபிரெட் வாரனுக்கு நான் எழுதிய கடிதம் ‘அப்பீல் டு ரீசன்’ இதழில் வெளியானபோது ‘பாஸ்டன் டிரான்ஸ்கிரிப்ட்’ இதழில் சிறப்புப் பகுதி எழுதி வரும் என் நண்பர் ஒருவர் அது பற்றி கட்டுரையொன்று எழுதி இருந்தார். ஆனால் அந்தப் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் அதை வெட்டிவிட்டார்.

“அவரது வளர்ச்சிக்கு சில வரம்புகள் இருக்கின்றன என்பதன் வெளிப்பாடுதான் ஹெலன் கெல்லரின் தவறுகள்” என்று என்னைப் பற்றியும்இ சோஷலிசத்தைப் பற்றியும் ‘புரூக்ளின் ஈகிள்’ இதழ் கூறுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு பெரிய மனிதரை சந்தித்தேன். அவர் தன்னை ‘புரூக்ளின் ஈகிள்’ பத்திரிகை ஆசிரியர் மெக்கெல்வே என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பார்வையற்றவர்களின் சார்பில் நியூயார்க் நகரில் நாங்கள் நடத்திய கூட்டத்தையடுத்து அந்த சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது அவர் என்னைத் தாரளமாகப் புகழ்ந்து தள்ளியதை நினைக்கும்போது எனக்கு வெட்கத்தில் முகம் சிவக்கிறது. நான் இப்போது சோஷலிசத்தை ஆதரித்து நிற்பதால், குறிப்பாக நான் பார்வை அற்றவளாகவும், காது கேட்க முடியாதவளாகவும் இருப்பதால் தவறு இழைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று எனக்கும் மக்களுக்கும் அவர் உபதேசம் செய்கிறார். அவரை நான் சந்தித்ததற்குப் பிந்தைய ஆண்டுகளில் என் அறிவாற்றல் சுருங்கி இருக்கக் கூடும்! இந்த முறை வெட்கத்தில் முகம் சிவக்க வேண்டியது அவர்தான்.

பார்வை இல்லாமையும், காது கேளாமையும் என்னை சோஷலிசத்தின்பால் திருப்பி இருக்கலாம். ஒருவேளை மார்க்ஸ் காது கேளாதவராகவும், வில்லியம் மாரிஸ் பார்வை அற்றவராகவும் இருக்கலாம். மாரிஸ் அவரது சித்திரங்களை தொடு உணர்ச்சி மூலம் தீட்டியிருக்கிறார். சுவர்தாள்களை நுகர் உணர்ச்சியால் வடிவமைத்திருக்கிறார்.

அட ஏளனத்துக்குரிய ‘புரூக்ளின் ஈகிள்' ஏடே! எந்த அளவுக்கு நீ வலிமையற்ற பறவையாக இருக்கிறாய்! சமூகரீதியாகக் கருத்துக் குருடாகவும், செவிடாகவும் இருக்கிற அந்தப் பத்திரிகையானது, உடல் ரீதியான பார்வையின்மைக்கும், காது கேளாமைக்கும் பெரிதும் காரணமான ஓர் அமைப்பை, சகித்துக் கொள்ள முடியாத ஓர் அமைப்பைக் காப்பாற்ற வரிந்துகட்டுகிறது. அந்தப் பத்திரிகையைத் தாங்கிப் பிடிக்கிற, அதன் காதுகளைக் கேட்கவிடாமல் தடுக்கிற, அதன் பார்வையை மூடி மறைக்கிற முதலாளித்துவத்தின் கொடுங்கோன்மையை நாங்கள் தாக்கவில்லை என்றால், துன்பங்களைத் தடுப்பதற்கு எங்களுக்கு எப்போதும் உதவிக் கரம் நீட்ட 'புரூக்ளின் ஈகிள்’ தயாராக இருக்கிறது!

எனவேதான், அந்தக் கழுகும் நானும் மோதிக் கொண்டிருக்கிறோம். அது பிரதிநிதித்துவப்படுத்துகிற, நியாயப்படுத்திகிற, உயர்த்திப் பிடிக்கிற அமைப்பை நான் வெறுக்கிறேன். எதிர்த்துப் போரிடும்போது அது நியாயமான முறையில் போரிட வேண்டும். எனது கருத்துகளை அது தாக்கட்டும், சோஷலிசத்தின் நோக்கங்களையும், நியாயங்களையும் எதிர்க்கட்டும். என்னால் பார்க்க முடியவில்லை அல்லது கேட்க முடியவில்லை என்பதை எனக்கும் மற்றவர்களுக்கும் நினைவுபடுத்துவது நியாயமான போராட்டமோ, நல்ல வாதமோ அல்ல. என்னால் படிக்க முடியும்: ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளில் உள்ள சோஷலிசம் பற்றிய அனைத்து நூல்களையும் என்னால் படிக்க முடியும். அவற்றில் சிலவற்றை ‘புரூக்ளின் ஈகிள்’ பத்திரிகை ஆசிரியர் படித்திருப்பார் எனில், அவர் விவேகமுள்ள மனிதராக ஆகியிருப்பார், சிறப்பான பத்திரிகையை உருவாக்கி இருப்பார். சோஷலிஸ்ட் இயக்கத்துக்கு எப்போதேனும் நான் பங்களிப்பு செலுத்த முடியும் எனில், ஒரு நூல் எழுத வேண்டும் என்று சிறிது காலமாகவே கனவு கண்டு வருகிறேன். அதற்கு என்ன பெயரிட வேண்டும் என்று எனக்குத் தெரியும் - ‘முதலாளித்துவக் குருட்டுத் தன்மையும், அதன் சமூக செவிட்டுத் தன்மையும்’ என்பதுதான் அது!
தமிழில்: ஜெயநடராஜன்
நன்றி: sanchikai.blogspot.com

1 comment:

Trek Pay said...

இலகு வழியில் இணையத்தினூடு பணம் தேட இங்கே அழுத்துங்கள்:
http://www.clixofchange.com/index.php?ref=kaviyan