Wednesday, February 3, 2010

காலத்தை வென்ற காவிய நாயகன் கமல்

லக சினிமாவில் ஒரு காலத்தில் தலைசிறந்த நடிகர் என்று போற்றப்பட்ட மார்லன் பிராண்டோ, ஹிந்தி திரை உலகில் திலீப்குமார், தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு நிகராக நடித்து பெருமை தேடித்தந்தவர் கமல்ஹாசன்.

களத்தூர் கண்ணமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, படம் பார்த்தவர்களை எல்லாம் கண்ணீரில் மிதக்கவிட்ட கமல்ஹாசன் வளர்ந்து மாபெரும் நடிகனாகி 'இந்தியன்' ஆக அக்கிரமக்காரர்களை வேரறுத்த போது இந்த மண்ணில் ஆயிரக்கணக்கான 'இந்தியன்' கள் தோன்றினார்கள். 'வறுமையின் நிறம் சிவப்பு' என்பதை சமூக அக்கறை கொண்ட ஒரு புரட்சிகர இளைஞனாக நடித்த கமல் வெளிபடுத்திய விதம், அந்தத் தார்மிகக் கோபம் படம் பார்த்த அனைவரையுமே பற்றிக் கொண்டது என்பது தான், அவர் கே. பாலச்சந்தரின் கவின்மிகு வார்ப்பு என்பதற்கான நிரூபணம்.
'16 வயதினிலே' பார்த்தவர்கள் 'சகல கலா வல்லவன்' பார்த்து விட்டு அதிசயித்துப் போனார்கள். 'அபூர்வ சகோதரர்கள்' பார்த்துவிட்டு 'அன்பே சிவம்' பார்த்தவர்கள் கமலின் நடிப்பை மட்டும் வியக்கவில்லை. அவரது குணச்சித்திரத் தோற்றங்களின் வேறுபாடுகளையும் கண்டு வியந்துபோனார்கள்.

நூற்றுக்கணக்கான வேடங்களில் நடித்து மனித குணாதிசயங்களை, உணர்வுகளை, மொழிநடையை, உருவங்களை விதம் விதமாக வெளிப்படுத்திய கமல்ஹாசனுக்கு இணையாகச் சொல்ல இன்று உலகின் எந்த மூலையிலும் வேறு எந்த நடிகரும் இல்லை என்பது நிச்சயம்.

கமல்ஹாசன் வெறும் நடிகர் மட்டுமல்ல சினிமாவின் அனைத்து நுட்பங்களையும் கற்றறிந்த மேதை. புதிய நுட்பங்களைக் கண்டறிந்து வெற்றிக் கண்ட விஞ்ஞானி. பல பரிசோதனைகளை முதன் முதலாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய வித்தகர், கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட இளைஞனாக நடித்து காதலும், சண்டையும் செய்பவனே 'கதாநாயகன்' என்ற இலக்கணத்தை சிவாஜிக்குப் பிறகு மாற்றியமைத்த இன்னொரு கலைஞன் கமல்ஹாசன்.

'சினிமா என்பதே கேவலம், கலாச்சாரத்தைச் சீரழிப்பது என்ற கருத்தை மாற்றி, சினிமா நிஜமான கலையின் வெளிப்பாடு - தரமான கற்பனைகளின் வடிவம், ரசிக்கத்தக்கது என்பதை மெய்பித்த ஒரு உண்மையான கலைஞன். இந்திய திரையுலகின் தரத்தை உயர்த்திய மிகச்சிலரின் தலைமகன் கமல் எனப் பறைசாற்றலாம். அவர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வரம்.

தமிழ் சினிமாவில் துவக்க காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பெரும்புகழ் பெறுவதற்கு குரல் வளமும், தோற்றப் பொலிவும், பி.யூ.சின்னப்பாவிற்கு வாள் சண்டையும், எம்.ஜி.ஆருக்கு அரசியலும், சிவாஜிக்கு நடிப்பும் துணை நின்றது. அவர்கள் எல்லாம் இன்றுவரை பேசப்படுகிறார்கள்.
இன்றைய அறிவியல் யுகத்தில், தொழில்நுட்ப வேகத்தில் புதுமைகளைத் தேடும் ரசிகத் தன்மையில் உலகமய - வர்த்தகமயச் சூழலில் திரை உலகில் நிலைத்து நிற்கவும், மக்களின் இதயங்களைத் தொடவும் வெற்றிகளை ஈட்டவும் வழக்கமான திறமைகளும் 'ஹீரோ' தனங்களும் மட்டுமே போதாது. அதையும் தாண்டி, எவரும் எதிர்பாராத அற்புதங்களை நிகழ்த்தும் ஆற்றல் தேவை. அந்த அபார ஆற்றல் கமல்ஹாசனிடம் இருப்பதால் தான் இந்த 50 ஆண்டுகளில் சிறிதும் மங்காமல் ஒளிவீசிக் கொண்டிருக்கிறார்.
விமர்சனகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கலைஞனாக, தமிழ் சினிமாவைத் திசை மாற்றிப் புதுமைகள் செய்த ஒரு சிற்பியாக, சமூகத்திற்கு ஒரு சேவகனாக, ஆடம்பரமற்ற - தன்னடக்கம் மிகுந்த ஒரு மனிதனாக ஒளிவு மறைவற்ற வெளிப்படையான செயல்பாடுகளும், பேச்சும் கொண்ட ஒரு துணிச்சல்காரராக தமிழக, இந்திய மக்களின் இதயங்களைக் கவர்ந்திருக்கும் கமல்ஹாசன், திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்து பொன் விழாகாணும் இந்த தருணத்தில் தமிழகமே அவர் மீது வாழ்த்து மலர்களைத் தூவி பெருமைப்படுத்துகிறது.
நன்றி : பாலம்
பொன் விழா நாயகனுக்கு எங்கள் வாழ்த்துக்களும்.

No comments: