Wednesday, February 3, 2010

அண்ணாவின் இறுதி நாட்கள் பற்றி கருணாநிதி உருக்கம்


ழைகளை கரையேற்றிடப் புறப்பட்ட கருணைக் கப்பல் கவிழ்ந்துவிட்டது என்று அண்ணாவின் இறுதி நாட்கள் பற்றி கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என் நினைவு 1969-ம் ஆண்டு பிப்ரவரி திங்களுக்குச் செல்கிறது. அதற்கு முன்பே 1968-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் தொடக்கத்திலேயே அண்ணாவுக்கு அடிக்கடி வயிற்று வலி.

உதிராத மலர் இல்லை;
உலராத பனி இல்லை;
புதிரான வாழ்க்கை யிதில்
புதையாத பொருள் இல்லை;
உடையாத சங்கில்லை;
ஒடுங்காத மூச்சில்லை;
இயற்கை நியதிகளில் இறப்பும் ஒரு கூறு அன்றோ?

ஆனால் அந்த இறப்பு - எளிதாகவே வந்து மனிதரை ஏந்திச் சென்றால் எத்துணை நல்லதாக இருக்குமென்று நான் அடிக்கடி எண்ணிக் கொள்வதுண்டு. வாழும் நாட்களிலே தான் வடிக்கின்றான் கண்ணீர் என்றால், சாகும்போதாவது நிம்மதியாக கண்களை மூடக்கூடாதா? அண்ணாவைக் கொடுமைப் படுத்திய அந்த நோயை இப்போது நினைத்தாலும் என் கண்களிலே கண்ணீர் பொங்குகின்றது!

முதலில் வயிற்று வலிதான்! டாக்டர் ரத்தினவேல் சுப்பிரமணியம் தான் அண்ணாவைப் பார்த்து மருந்துகளை அளித்து வந்தார். அந்த நேரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினர் அண்ணாவிற்கு டாக்டர் பட்டம் அளிக்கப்போவதாக அறிவித்திருந்தனர். அண்ணாவிற்கோ கடுமையான வலி - டாக்டர் பட்டத்தினை தானே நேரில் சென்று பெற்றுக் கொள்வதுதான் மரபு என்று அண்ணா எண்ணினார். அவருக்கிருந்த வலியோடு பயணம் செய்வது நல்லதல்ல என்று டாக்டர் கூறினார். அண்ணியார் ஒரு நாள் என்னை அழைத்து "நான் எவ்வளவோ சொல்லியும் உங்க அண்ணன் பிடிவாதமா போய்த்தான் ஆவேன் என்கிறாங்க - நீங்க சொன்னாதான் கேட்பாங்கன்னு'' சொன்னவுடன், நான் நேராக அண்ணாவிடம் சென்றேன்.

"அண்ணா! இப்போது நீங்க அண்ணாமலை நகருக்குப் போக வேண்டாம் அண்ணா! பயணம் செய்தால் வலி அதிகமாகும் என்கிறார்கள். உங்கள் சார்பில் வேறு யாராவது போய் பட்டத்தைப் பெற்று வரலாம்'' என்றேன்.

"அப்படியா சொல்கிறாய்! உம்'' என்று புன்னகையோடு அண்ணா என்னைப் பார்த்து முனகுகிறார். என் வேண்டுகோளை அண்ணா ஏற்றார் என்ற பெருமூச்சு என்னிடமிருந்து வெளிப்பட்டது. அண்ணா தொடர்ந்தார் - "அது சரி - நாம் எல்லோரும் சென்னையிலேயே தங்கிவிட்டால் எப்படி? நானும் சுற்றுப்பயணம் போகாமல், நீயும் சுற்றுப்பயணம் போகாமல் இருக்கலாமா? கூடாது! நீ உடனே முதலில் தேதி கொடுத்தபடி சுற்றுப்பயணம் போய் வா!'' என்றார்.

அவரது ஆணையை ஏற்று - திருநெல்வேலி மாவட்டம், தென்காசி தொகுதியில் - குற்றாலத்தில் கட்டப்பட்டிருந்த கலையரங்கத் திறப்பு விழாவில் கலந்து கொண்டேன். 3-9-1968 அன்று அந்தக் கலையரங்கிற்கு கலைவாணர் பெயர் சூட்டி, அதனைத் திறந்து வைத்த நான் வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவிட்டு, அடுத்த நிகழ்ச்சிக்காக காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தேன்.

மதுரை அருகே சென்று கொண்டிருந்தபோது சென்னையிலிருந்து டாக்டர் ராமமூர்த்தி தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசினார். "அண்ணாவைப் பரிசோதனை செய்து பார்த்தோம், புற்று நோய்க்கான அறிகுறிகள் தெரிகின்றன'' என்றார். என் கண் முன்னால் உலகமே இருண்டு விட்டது. தொலைபேசிக் கருவியில் என்னால் தொடர்ந்து பேச முடியவில்லை. வாய்விட்டு என்னால் முடிந்த அளவிற்கு தனியாக அமர்ந்து அழுதேன். மற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் உடனடியாக ரத்து செய்துவிட்டு, அன்று இரவே நானும், மதுரை முத்து, அரங்கண்ணல் ஆகியோரும் சென்னை திரும்பினோம்.

சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அண்ணாவைக் கண்டதும் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. மருத்துவர்கள் அண்ணாவின் உணவுக் குழாயில் சதை வளர்ந்திருப்பதாகவும், அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்ற வேண்டுமென்றும் தெரிவித்தார்கள். அறுவை சிகிச்சைக்காக அண்ணா அமெரிக்கா சென்று வருவதே நல்லதென முடிவெடுக்கப்பட்டது.

10-9-1968 அன்று அண்ணா அமெரிக்கா புறப்பட்டார். விமான நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று, அண்ணா உடல் நலம் பெற்றுத் திரும்ப வேண்டுமென்று வாழ்த்தினர். அன்றைய கவர்னர் உஜ்ஜல்சிங், அமைச்சர்கள், அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, தள்ளு வண்டியிலே அமர்ந்தவாறு பெரியாரே கலங்கிய கண்களோடு அங்கே வந்து அமர்ந்திருந்த காட்சி அனைவரையும் நெகிழச் செய்தது.

நானும், வேறு சிலரும் அந்த விமானத்திலேயே மும்பை வரை சென்று அண்ணாவை வழியனுப்பி வைத்தோம். அண்ணாவுடன் அண்ணியார், டாக்டர் பரிமளம், .ராஜாராம், இரா.செழியன், டாக்டர் சதாசிவம் ஆகியோர் அமெரிக்கா சென்றனர்.

அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் நாளுக்கு அடுத்த நாள் நிïயார்க் மெமோரியல் மருத்துவமனையிலே அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதே நாளில் தஞ்சை நகரிலே அண்ணாவின் சிலையினை நாவலர் தலைமையிலே திறந்து வைத்த நான் உரையாற்றும்போது, "...........அமெரிக்க நாட்டிலே ஆப்ரகாம் லிங்கன் பிறந்தார் - கென்னடி இருந்தார் - ஆனால் ஓர் அண்ணா பிறக்கவில்லையே என்று அமெரிக்கர்கள் ஏங்கினார்கள் போல் இருக்கிறது. அவர்களின் ஏக்கத்தைப் போக்கும் விதத்தில் இன்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ள அண்ணாவைத் தமிழ்த் தாய் மீண்டும் அங்கே பிரசவித்திருக்கிறாள்'' என்று குறிப்பிட்டேன்.

உலகப் புகழ் பெற்ற டாக்டர் மில்லரின் திறமையான சிகிச்சை காரணமாகத் தேறித் திரும்பி வந்த அண்ணாவுக்கு சென்னை விமான நிலையத்தில் 6-11-1968 அன்று வரவேற்பு அளிக்கப்பட்டது. குடை பொருத்தப்பட்ட திறந்த "ஜீப்'' வண்டி ஒன்றினை தயார் செய்திருந்தோம். அண்ணா அதிலே ஏறிக் கொண்டார். நானும், நாவலர், என்.வி.என்., மதியழகன் ஆகியோரும், மற்றவர்களும் உடன் இருக்க ஊர்வலமாக அந்த ஊர்தி புறப்பட்டது. ஊர்வலம் வீடு வந்து சேர்ந்ததும், அண்ணா மாடிக்குச் சென்றார். சில நிமிடங்களில் சிதம்பரம் பொன்.சொக்கலிங்கம் கீழே வந்து அண்ணா என்னை மேலே வரச் சொன்னதாகக் கூறினார். நான் மாடிக்குச் சென்றதும், என்னை அமரச் சொன்ன அண்ணா தன் சட்டையை மேலே தூக்கிக்கொண்டு அறுவை சிகிச்சை நடைபெற்ற இடத்தைக் காட்டினார். அண்ணாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறினேன். அண்ணாவாலும் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. பின்னர் நாட்டு நிலை, கட்சி நிலை பற்றியெல்லாம் உரையாடினோம்.

தமிழகச் சட்டமன்றத்தில் "தமிழ்நாடு'' என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை டெல்லி நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டதையொட்டி, அதற்கான விழா கொண்டாட முடிவெடுத்து, சென்னையில் 2-12-1968 அன்று அந்த விழா நடத்த முடிவாயிற்று. அமெரிக்க சிகிச்சைக்குப் பிறகு எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்த அண்ணா, மருத்துவர்கள் தடுத்தும் கேளாமல், அந்த விழாவிலே கலந்து கொண்டார். நானும், சிலம்புச் செல்வர் .பொ.சி.யும், சி.பா.ஆதித்தனாரும் அந்த விழாவிலே அண்ணாவுடன் கலந்து கொண்டோம்.

அந்த விழாவிலே பேசும்போது அண்ணா, ".........நான் இந்த மகிழ்ச்சி விழாவில் கலந்து கொள்ள முடிவெடுத்த நேரத்தில், நீங்கள் இந்தக் கூட்டத்தில் பேசக் கூடாது; அதிக நேரம் பேசினால் உடலுக்கு ஊறு நேரிடும் என்று டாக்டர்களும், நண்பர்களும் தடை விதித்தனர். "தமிழ்நாடு'' பெயர் மாற்ற மகிழ்ச்சி விழா நடைபெறும் இன்றைய தினம் நான் பேசுவதாலேயே இந்த உடலுக்கு ஊறு நேரும் என்றால், இந்த உடல் இருந்தே பயனில்லை என்று கூறி, எனது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மருத்துவர்களிடமும் நண்பர்களிடமும் கேட்டுக் கொண்டேன். இத்தகைய வாய்ப்பு ஒருவரது வாழ்க்கையில் ஒரு முறைதான் வரும், பலமுறை வருவதில்லை'' என்று குறிப்பிட்ட போது, அங்கே குழுமியிருந்தோர் அனைவரது விழிகளுமே குளமாயின.

அதுபோலவே 1969, ஜனவரி திங்களில் பொங்கல் திருநாளில் கலைவாணர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியிலும் அண்ணா கலந்து கொண்டார். எங்கள் மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அண்ணா விற்கு மீண்டும் தாங்க முடியாத வலி. மருத்துவர்கள் அதனை "செகண்டரி'' என்றனர். வேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆவன செய்து கொண்டிருந்தோம். அப்போது குளியலறைக்குச் சென்ற அண்ணா, அங்கே கீழே விழுந்து மயக்கமடைந்தார். சென்னை, அடையாறு புற்று நோய் மருத்துவ நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். டாக்டர் சி.எஸ்.சதாசிவம் தலைமையில் மருத்துவ வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்து மில்லரை வரவழைக்க முடிவு செய்தோம். 21-1-1969 அன்று சென்னை வந்து சிகிச்சையை மேற்கொண்டார்.

1969 பிப்ரவரி திங்கள் இரண்டாம் நாள் நள்ளிரவு. சென்னை மாநகரே அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாலும், அடையாறு மருத்துவமனையை சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். 12 மணியும் தாண்டி பிப்ரவரி 3ம் நாள் தொடங்குகிறது.

மணி 0.22 - திடீரென்று ஒரு பேரதிர்ச்சி - அதிர்ச்சி அல்ல, பிரளயம்.

இறப்புக்கு இரக்கம் எங்கே வரப் போகிறது?

எத்தனை எத்தனையோ ஏழையெளிய உயிர்களைக் கரையேற்றிடப் புறப்பட்ட ஒரு மாபெரும் கருணைக் கப்பல் அந்த நள்ளிரவில் கவிழ்ந்துவிட்டது!

எத்தனை எத்தனையோ இருண்ட மனங்களில் ஒளிக் கதிர்களை எழுப்பிய ஒரு அணையா விளக்கு, அன்றிரவு அணைந்து விட்டது!

"அண்ணா இறந்து விட்டார்'' என்ற சொற்களைக் கேட்ட நேரத்திலேயே சிலர் தங்கள் உயிருக்கு விடை கொடுத்து அனுப்பினர்.

அண்ணாவை இறுதியாக தரிசிக்கப் புறப்பட்ட லட்சக்கணக்கானோருக்கு உள்ளே இடம் கிடைக்காமல், ரெயிலின் மேற்கூரையிலே அமர்ந்து வந்த போது சிதம்பரம் அருகே முப்பதுக்கு மேற்பட்டோர் தங்கள் உயிரை காவு கொடுத்தனர்.

அண்ணாவுக்கு காலத்திற்கும் அழிக்க முடியாத ஒரு நிலையான நினைவுச் சின்னத்தை எழுப்புவது நமது கடமை என்ற முடிவுக்கு வந்தோம். அதற்காகவே அவருக்கு கல்லறை எழுப்புவதுதான் சரியென்று தீர்மானித்தோம்.

வங்கக் கடற்கரையோரத்தில் அதற்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அண்ணியாரிடமும், குடும்பத்தாரிடமும் அனுமதி பெறப்பட்டது.

சென்னைக்கு வருபவர்கள் அண்ணாவின் அந்த நினைவிடத்தைப் பார்க்காமல் திரும்ப மாட்டார்கள் என்கிற அளவிற்கு அந்த நினைவிடம் இப்போது விளங்குகின்றது. அது மட்டுமா? அண்ணா அறிவாலயம் தொடங்கி, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் வரை - பாலங்கள் - சாலைகள் - பல்கலைக் கழகங்கள் - நகர்தோறும் ஊர்தோறும் சிலைகள் என அண்ணாவின் புகழை தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கிறோம். அண்ணாவிற்கு இறுதி மரியாதை செலுத்த மத்திய அரசின் சார்பில் அமைச்சர் ஒய்.பி.சவான் வந்திருந்தார். அண்ணாவின் உருவம் பொதித்த நாணயங்கள் - அஞ்சல் தலைகள் என இப்படி எத்தனையோ எண்ணிலடங்கா நினைவுச் சின்னங்கள்!

என் துயரத்தைத் தணித்துக் கொள்ள - அண்ணாவிற்கு கவிதாஞ்சலி ஒன்றினை எழுதி வானொலியின் மூலம் அஞ்சலி செலுத்தினேன்.

"இரவலாக உன் இதயத்தைத் தந்திடு அண்ணா'' என்ற கவிதை வரியினை மறந்திருக்க மாட்டாய்!

அந்த ஆண்டு முதல் இன்று வரை - ஏன் கடந்த ஆண்டு நான் ராமச்சந்திரா மருத்துவமனையிலே உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும் - ஒவ்வொரு ஆண்டும் அண்ணாவின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திடத் தவறியதில்லை.

அதே முறையில் இந்த ஆண்டும் இந்த நாளில் அந்த இடத்திற்கு வந்து என் அஞ்சலியை அண்ணாவின் பாத மலர்களிலே குவிக்கின்றேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

இன்று அண்ணாவின் 41வது நினைவு நாள்.

No comments: