Sunday, January 3, 2010

வாழ்க்கை வண்டி குடைசாயாமல் இருக்க...

பெரியவர்களின் ஆலோசனை அதிகமாகக் கிடைக்காத நிலையில் இன்று இளந்தம்பதியர் வாழ்வின் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். தங்களுக்குள் முட்டி மோதி, திருமண வாழ்வை மேலும் சிக்கலாக்கிக் கொள்கின்றனர். எனவேதான் 'திருமணத்துக்கு முந்தைய ஆலோசனை' என்பது தற்போது பிரபலமாகி வருகிறது.


இதில், ஆணும் பெண்ணும் முக்கியமான விஷயங்களை திருமண ஆலோசகரிடம் விவாதித்துத் தெளிவடைய முடிகிறது.

திருமண ஆலோசனையில் அடிக்கடி விவாதிக்கப்படும் விஷயங்கள்:

* திருமணத்தை ஒரு பொருளாகக் கொண்டு, அதைப் பற்றிய ஆண், பெண் இருவரின் அறிவு விவாதிக்கப்படுகிறது.

* இருவரின் குடும்ப அமைப்புகள்.

* இருவரின் எதிர்பார்ப்புகள்.

* ஆண்கள், பெண்களுக்கான வேலைகள்.

* இருவரின் லட்சியங்கள், கனவுகள் பற்றி விவாதிக்கலாம்.

* எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள்.

* பொருளாதாரம் ஒரு முக்கிய விஷயமாக விவாதிக்கப்படுகிறது.

* வேலையைப் பகிர்ந்து கொள்வது, யார் பணத்தைக் கையாளுவது என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

* ஆவணப் பணிகள், வங்கி விஷயங்கள் ஆகியவற்றை யார் கவனித்துக்கொள்வது என்பது குறித்துப் பேசப்படுகிறது.

* வீட்டுவேலைகள் குறித்துப் பேசப்படுகிறது.

* நண்பர்கள், குடும்பம் பற்றிய விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன.

* மதம் மற்றும் பண்டிகைக் கொண்டாட்ட பாரம்பரியங்கள் குறித்துப் பேசப்படுகிறது.

பிரச்சினையைத் தவிர்க்க ஆண் அவரது சொந்த வீட்டு விஷயங்களையும், பெண் அவரது பிறந்தக விஷயங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை இருவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதன் மூலம், தவறான புரிதல்களுக்கு இடமில்லாது போகும். திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்கிக்கொள்வது எப்படி என்பது பற்றியும், பிரச்சினைகள் எழும்போது அவற்றை எப்படிச் சரிசெய்வது என்பது பற்றியும் ஆலோசகர் ஆலோசனை வழங்கலாம்.

இது திருமணத்துக்கு முந்தைய ஆலோசனைதான் என்றபோதும், புதிதாகத் திருமணமானவர்களும் இந்த ஆலோசனையைப் பெறலாம். விவாகரத்து எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, திருமண வாழ்க்கை விஷயங்களை அலசலாம். விவாகரத்து அதிகரிப்பதற்கு, பொறுப்பைத் தட்டிக் கழிப்பது, விட்டுக் கொடுப்பதற்கு மாறாக அதீதமான சுதந்திர உணர்வு போன்றவை காரணமாக அமைகின்றன.

திருமண வாழ்வைக் காப்பாற்றுவதற்கான ஆலோசனைகள்:

* பிரச்சினை எழும்போது அதைத் தீர்ப்பதற்கான விதிகளை அறிந்துகொள்ளுங்கள். பரஸ்பர அன்புத் தேவைகளை அறியுங்கள்.

* வாழ்வில் அலுப்பு ஏற்படும்போதெல்லாம் உறவில் ஒரு
மறுமலர்ச்சி கொடுப்பதற்கான வழிகளை அறியுங்கள். எதிர்பாராத சந்தோஷங்களை ஒருவருக்கொருவர் அளித்துத் திருமணத்தை உயிர்ப்போடு வைத்திருங்கள்.

* வாழ்க்கைத் துணைக்கு மதிப்பு அளிப்பது என்பது, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு மதிப்பு அளிப்பதும்தான்.

* திருமண வாழ்வின் உரிமையையும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அக்கறை தானே வரும்.

* திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படும்போது சரியான நபர்களின் அல்லது தொழில்முறை ஆலோசகர்களின் ஆலோசனையை நாடுங்கள்.

***

No comments: