Tuesday, January 5, 2010

திருமணங்கள் பலவிதம்...


திருமணத்தில் அதிகமாகக் கவனிக்கப்படுபவர் மணப்பெண் தான். கவனிக்கப்படுவது மட்டுமல்ல, பல்வேறு சமுதாயத் திருமணங்களில் அதிகமாக முக்கியத்துவம் அளிக்கப்படுவதும் மணப்பெண்ணுக்குத்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? பல்வேறு இன, சமுதாய திருமணங்களை சுறுசுறுவென்று சுற்றி வந்து, அவற்றில் மணப்பெண்ணுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைப் பார்க்கலாமா..

மலையாளி நாயர் திருமணம்
'பெண்ணே அரசி'

"திருமணம் முடிந்ததும் மணப்பெண் யார் காலிலும் விழத் தேவையில்லை. அது கணவனாக இருந்தாலும்" மாமனார் - மாமியாராக இருந்தாலும்" என்கிறார், கடந்த பிப்ரவரி மாதம் திருமணமான 24 வயது நேகா நாயர் ரோகேரா. "திருமணத்தின் போது நாங்கள் பெரியவர்கள் காலில் மட்டும் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெறுவோம்" என்று தெரிவிக்கிறார் நேகா. இது, பெண்ணானவள் யார் காலிலும் விழத் தேவையில்லை, அவளால் சொந்தமாக முடிவுகளை எடுக்க முடியும் என்று காட்டுவதாக உள்ளது.

ராஜஸ்தான் திருமணம்
'திருப்பித் தாக்கும் மணமகள்'

திருமணச் சடங்கு முடிந்ததும், ராஜஸ்தானி மணமகளை சிறு கிளைகளைக் கொண்டு செல்லமாகத் தாக்குகிறார்கள். அவ்வாறு 'அடிப்பவர்களை' மணமகள் 'திருப்பித் தாக்க' வேண்டும். "தன்னை மோசமாக நடத்துபவர்களை திருப்பித் தாக்க மணமகளுக்கு உரிமை உண்டு என்பதைக் குறிக்கும் வகையில் இது நடைபெறுகிறது" என்கிறார், 'விவாகா - கொண்டாட்டம்' என்ற நூலின் ஆசிரியரான பகவதி மிட்டல்.

சீக்கியர் திருமணம்
'முதலில் வலப்புறம் அமரும் பெண்'

திருமணத்துக்கு முன்பு, மணமகள் பாரம்பரிய முறைப்படி மணமகனுக்கு வலப்புறமாக அமர்கிறாள். பின்னர் நடைபெறும் நான்கு சடங்குகள் (பெராக்கள்), கணவன் தனது மனைவிக்குப் பாதுகாப்பு, பராமரிப்பை அளிப்பதையும், நலத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டிய கடமையையும் உணர்த்துவதாக உள்ளது. கணவன், மனைவிக்கு உணவு, உடை, உறைவிடம் அளித்து பாதுகாப்புக்காக தனது வருமானத்தின் ஒரு பகுதியை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. "நான்கு சடங்குகளும் முடிந்து, பெண்ணும், ஆணும் நிபந்தனைகளுக்கு ஒத்துகொண்டபின்தான், மணமகனின் இடப்புறமாக மணமகள் அமர்வாள்" என்கிறார், 72 வயது மூதாட்டியான சுக்விந்தர் கவுர். அப்படி மணமகள் இடப்புறம் அமரும்போது, மணமகன் அவள் வாழ்வுக்கு உத்தரவாதம் அளிப்பதாகக் கூறுவது உள்ளிட்ட மற்ற நிபந்தனைகளை அவள் ஏற்றதாகக் கருதப்படுகிறது.


வங்காளத் திருமணம்

'மனமகளே மருமகளே வா வா...'


பிற இந்து திருமணங்களைப் போல, மணப்பெண் கணவர் வீட்டில் காலடி வைத்ததும் நடக்கும் சடங்குகள் அவளுக்கு அதிகாரம் அளிப்பாதாக உள்ளன. "ஒட்டுமொத்த புகுந்தவீட்டாரும் மணமகளை சிறப்பாக வரவேற்பார்கள்" என்கிறார், 32 வயது இல்லத்தரசியான ஜாமூர் மித்தார்.


"இது வங்காளத்தில் 'போரான் சடங்கு என்று அழைக்கப்படுகிறது. வடஇந்தியாவில் நடக்கும் 'கிருகப் பிரவேசம் ' போன்றது இது. இந்தச் சடங்குகள் மூலம், கணவர் வீட்டைச் செழுமையூட்ட வந்திருக்கும் மகாலட்சுமியாக மணமகள் கருதப்படுகிறாள்.


மார்வாடி திருமணம்

'மணப்பெண்ணுக்கு உரிமை'


மார்வாடி திருமணம் குறித்து மும்பை கோவில் குருக்கள் பண்டிட் சுகேது மிஸ்ரா கூறுகையில் , "திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு வரும் மணமகள் முன் ஒரு பை நிறைய பணத்தை வைத்தபடி நிற்பார் மாமனார். அதில் மணமகள் கையை வைத்து தன்னால் முடிந்த அளவு பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மாமனார் வீட்டுப் பணத்தில் மருமகளுக்கு உரிமை உண்டு என்று காட்டும் வகையில் இந்தச் சடங்கு அமைந்துள்ளது" என்கிறார். மாமியார் வைத்திருக்கும் தட்டில் நெய், பாலிலும் மணமகள் கையை நனைக்க வேண்டும். புகுந்த வீட்டின்செல்வ வளம், உயர்ந்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் மணப்பெண்ணுக்கு உரிமை உண்டு என்பதைக் குறிக்கும் விதமாகவே இந்தச் சடங்கு அமைகிறது.


தென்னிந்திய பிராமண திருமணம்

'பெண்ணுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை'


தென்னிந்திய பிராமண திருமணங்களில் 'கங்கண தாரணம்' என்பது ஒரு முக்கியமான சம்பிரதாயம். மஞ்சள் கட்டப்பட்ட 'கங்கணம்' என்ற கயிறாய் மணமகனின் இடுப்பைச் கட்டுவார் மணமகள். "மணப்பெண், மணமகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் காட்டுவதாக இந்தச் சம்பிரதாயம் உள்ளது" என்று 64 வயது சாந்தா கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்.


இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பெண்ணுக்கான பாதுகாப்பு விஷயங்கள் ஒவ்வொரு மத திருமணச் சடங்குகளுடன் இணைந்தே இருக்கின்றன. இதைத்தான் அத்தனை திருமண சம்பிரதாயங்களும் நமக்கு உணர்த்துகின்றன.


இந்து திருமணம்

'பெண்ணின் சுதந்திரத்துக்கு உத்தரவாதம்'


பொதுவாக இந்துத் திருமணங்களில் 'ஸ்திரீ தானம்' என்பது காணப்படுகிறது. அப்போது பெண்ணுக்குக் கணவர் வீட்டாரால் கொடுக்கப்படும் நகை, புடவை, பணம், எல்லாம் பெண்ணுக்குத் தான் சொந்தம் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. ஏதாவது துரதிருஷ்டவசமாக நடந்தாலோ, பிரிவு, விவாகரத்து நேர்ந்தாலோ பெண்ணுக்கு அவை கைகொடுக்கும். சட்டத்தின்படியும் பெண்ணுக்கு இந்த உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


"இந்து திருமணத்தில் மணப்பெண்ணானவள் சக்தி வாய்ந்தவளாக, வலிமையானவளாக ஒரு பெண் தெய்வத்தைப் போலவே கருதப்படுகிறாள்" என்று பண்டிட் மிஸ்ராகூறுகிறார்.

No comments: