Monday, January 11, 2010

மனதின் அமைதி


லக மக்கள் என்றும் மிக ஆவலாய் எதிர்பார்ப்பதும், அரசியல் தலைவர்கள் வார்த்தை வடிவில் அடிக்கடி உச்சரிப்பதுமான 'சமாதானம்' எனும் கருத்தாக்கம், உறுதியுடன் நினைவுகூரப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.

அமைதியற்ற, நிம்மதி இழந்த, போர் உருவாக்கிய வடுக்கள் மத்தியில் அவலப்படும் மக்களின் இன்றைய அவசர அவசியத் தேடலின் தேவையே 'சமாதானம்'.

யதார்த்தமாக உலகை நோக்கும்போது, எங்கே சமாதானம் எங்கே சமாதானம் என்று தேடுவதோடு மட்டுமல்லாது, எது சமாதானம் என்று தீர்மானிக்க வேண்டியதும் அவசியமாகும்.

நாடுகளிடையே யுத்தங்கள் நிகழாதிருப்பது மட்டும்தான் சமாதான நிலையா? அல்லது நாடுகளெல்லாம் ஓரிடத்தில் ஒன்று கூடிப் பேசுவது மட்டும்தான் சமாதானமா?

சமாதானம் குறித்து பொழுதெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் இன்றைய நாளில் சமாதானம் என்றால் என்ன என்பது குறித்துச் சிந்திப்பதும் அவசியமாகும்.

இன்று நாடுகளிடையே பல பிரச்சனைகள், யுத்தங்கள், அட்டூழியங்கள், இனங்களுக்கிடையே, மதங்களுக்கிடையே வேறுபாடுகள், கொலை, கொள்ளை, குண்டெறிதல், சொத்துகளை அழித்தல், நிம்மதியாக வாழ்ந்த மக்களை அகதிகளாக்குதல், பட்டினி போடுதல், மத, மொழி உரிமைகளைப் பறித்தல்... இவ்வாறு பல தீமைகளின் இருப்பிடமாக உள்ள நாடுகளில் சமாதானத்தை எதிர்பார்க்க முடியுமா? இவற்றை இல்லாமல் செய்யும்வரை அமைதியையோ, நிம்மதியையோ உலகில் ஏற்படுத்த முடியாது.

"போர்கள் மூள்வது மனித உள்ளங்களில் என்பதால் சமாதானத்தின் அரண்கள் எழுப்பப்பட வேண்டியதும் மனித உள்ளங்களில்தான்"


என்பது 'UNESCO' அமைப்பின் அறிவுறுத்தலாகும். இன்று சமாதானத்தின் தேவை உணரப்பட்டாலும், அரசு யந்திரங்கள் முரண்படுவதைப் பேசிக் கொள்வதிலேயே காலத்தைப் போக்காது, மக்களாகிய நாம் நமது மனதுக்குள் சமாதானம் என்னும் விதையை விதைக்க வேண்டும். இவை விதைக்கப்படும்போது பல தியாகங்கள், விட்டுக் கொடுப்புகள், ஏற்றுக் கொள்ளலுக்கான பக்குவ மனநிலை போன்றவை உருவாவது மிகவும் அவசியம். ஆனால் அது சுலபமானதல்ல.


'நிலங்களை உழுவதுபோல் மனங்களை உழுங்கள்!'


என்று இயேசு பிரான் கூறியதுபோல, மனங்களை உழுது அமைதியை விதைத்தாக வேண்டும்.

"நண்பர்களிடையே அல்ல; பகைவர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துங்கள்"


என்று யதார்த்தவாதியாக வாழ்ந்து காட்டிய தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் வாழ்வு நமக்கு ஒரு நல்ல உதாரணமாகும்.

பகைவருக்குள் ஏற்படும் சண்டையில் சமரசம் செய்து வைப்பதே நல்லது. இரு நண்பர்களிடையே ஏற்படும் பிரச்சனைகளில் சமரசம் செய்து வைத்தால் இருவரில் ஒருவர் நமக்கு எதிரியாவார். பெரும்பாலும் இரு எதிரிகளிடையே சமரசம் செய்து வைத்தால், அவர்களில் ஒருவர் அநேகமாக நமக்கு நண்பர் ஆவார் . இவை நமது வாழ்வில் காணும் முரண்பாடுகளைத் தீர்த்து பகைமைகளைக் குறைப்பதற்கும் வழிகோலுகிறது

"அச்சத்தின் அடிப்படையில் சமாதானப் பேச்சு ஒருபோதும் நடத்தக் கூடாது. ஆனால் சமாதானப் பேச்சு நடத்த ஒருபோதும் அஞ்சக்கூடாது"


என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான். எஃப்.கென்னடி கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது.

சமாதானம் என்பது கோட்பாடு மட்டுமல்ல, அது ஒரு செயல்பாடு. செயல்பட்டால்தான் சமாதானம் அர்த்தமுள்ளதாகும். 'வாழு வாழ விடு' என்ற நெறிமுறையைப் பின்பற்றினால் மட்டுமே உலகில் அமைதி நிலவும்.

'சமாதான சக வாழ்வு' என்ற அடிப்படையில், உலக மக்கள் யாவரும் அடுத்தவர் நிம்மதியைக் கெடுக்காமல், வார்த்தைகளால் மட்டும் சமாதானத்தை உச்சரிக்காமல், வாழ்க்கையில் ஒளி ஏற்றும் மனித உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வோம். நாம் சமாதான வேட்கை உள்ளவர்களாக மாறும்போது, அடுத்த சந்ததியினரின் எதிர்காலம் வன்முறையற்ற, பகை உணர்வுகளற்ற, பய உணர்வுகளற்ற, நல்லுறவை, சமாதானத்தை உணரும் மனங்களாக மகிழ்வை அனுபவிக்கும்; அன்பைப் பகிர்ந்து கொள்ளும். உலகமும் அமைதி நிரம்பியதாக இருக்கும்.


அனிதா காயத்ரி

நன்றி இஸ்கஃப் மாநாட்டு மலர்


1 comment:

நிலாமதி said...

உங்கள் பதிவுக்கு நன்றி.....ஒவ்வொரு உள்ளமும் குறிப்பாக் ஈழத்து மக்கள் ஒவ்வொருவருக்கும்
இன்றைய தேவை சமாதானம் ....அமைதி ...அன்றாட வாழ்வு... பிறந்திருக்கும் புது வருடமும் ....பிறக்க போகும் பொங்கல் பண்டிகையிலும் எல்லோரும் வேண்டி நிற்போம். நன்றி. .