Monday, January 11, 2010

புத்தகம் பேசுது...


கிரேக்கத்தின் புகழ்பெற்ற இரு மருத்துவர்கள்
ஹரோபிலோஸ் (Herophilos) எரோசிஸ்ரரோஸ் (Erasistratos)

நாடித்துடிப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு நோயை இனங்கண்டு கொள்கின்ற அறிவை முதன்முதலில் எடுத்துரைத்தவர் கிரேக்கத்தைச் சேர்ந்த பிரக்ஸோகோரஸ் (Praxogarus) எனினும் நாடித்துடிப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்களை முதன்முதலில் விரிவாக விளக்கியவர் இவரது மாணவரான ஹீரோபிலோஸ் (Herophilos 335-380 B.C) என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவர் நாடித்துடிப்பை இசை நுணுக்கங்களோடு ஒப்பிட்டு விளக்கியதால் இசை புலமை இல்லாத மருத்துவர்களால் இவரது விளக்கத்தைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதேசமயம் மனித உடல்களைக் கீறி ஆராய்ந்து உள்ளமைப்பு பற்றி (human antomy) முதன்முதலில் விளக்கிய ஐரோப்பிய மருத்துவர் என்ற கௌரவத்தையும் இவர் பெற்றுள்ளார். (உண்மையில் எகிப்தியருக்கு உடல் உள்ளுறுப்புக்கள் பற்றிய அறிவு கி.மு.2500 ஆம் ஆண்டுகளில் இருந்திருக்க வேண்டும். இவர்கள் இறந்த அரசர்களின் உடல்களைப் பதப்படுத்திப் பாதுகாப்பதற்கு அவர்களின் உடல்களைக் கீறி சில விசேடமான தைலங்களால் பாதுகாத்தனர் என்பது உலகறிந்த விடயம்.)

நோயின் காரணமாக உடலின் தொழிற்பாடுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களை நாடித்துடிப்பு பிரதிபலிப்பதால் நோயை இனங்கண்டு கொள்வதற்கு நாடித்துடிப்பு பரிசோதனை உதவும் என்பதே ஹீரோபிலோஸ் போன்ற அறிஞர்களின் கருத்து. இதற்கு ஒரு படி மேலே போய் உடலில் ஏற்படும் மாற்றங்களை மட்டுமல்ல உள்ளத்தில் (நரம்புத்தொகுதியில்) ஏற்படக்கூடிய மாற்றங்களையும் நாடித்துடிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்பதை முதன் முதலில் எடுத்துரைத்தவர் எராசிஸ்ரோஸ் (Erasistratos). அலெக்ஸாண்ட்ரியாப் பல்கலைக்கழகத்தில் ஹீரோபிலோஸ் கூடவே ஆய்வுகளை நடாத்திய போதும் இவர் ஹீரோபிலோஸின் எதிரியாகவே கருதப்பட்டார்.

எராசிஸ்ரோஸ் வாழ்ந்த காலத்தில் தற்போது சிரியா என்றழைக்கப்படும் நாட்டை ஆண்டவரும், கிரேக்கப் பெருமன்னன் அலெக்ஸாண்டரின் தளபதிகளில் ஒருவருமான முதலாம் செலுக்கஸ் (Selecus I) என்பவரின் மகன் அன்ரியோகஸ் (Antious) கடுமையான நோய் ஒன்றுக்கு ஆளானான். மருத்துவர்கள் பலராலும் கைவிடப்பட்ட நிலையில் எராசிஸ்ரரோஸ் அழைக்கப்பட்டார். இவர் அன்ரியோகஸை பரிசோதித்துக் கொண்டிருந்தபோது அந்த அறைக்குள் ஓர் அழகிய இளம் பெண் நுழைந்தாள். அவளைக் கண்டதும் அன்ரியோகஸின் நாடித்துடிப்பு அதிகரித்ததை எராசிஸ்ரரோஸ் அவதானித்தார். இளவரசனுக்கு ஏற்பட்டுள்ள நோய் உடல் சம்பந்தப்பட்டதல்ல அது உணர்வு (உள்ளம்) சம்பந்தப்பட்டது என்பதை மருத்துவரான எராசிஸ்ரரோஸ் உணர்ந்து கொண்டார். அந்த இளம் பெண் வேறுயாரும் அல்ல. இளவரசனின் வயது முதிர்ந்த தந்தையின் இளம் மனைவியே அவள். சிறிய தாயின் மீது கொண்ட நிறைவேற முடியாத காதலே இளவரசனின் நோய்க்கு காரணம் என்ற உண்மையை அரசனுக்கு பக்குவமாக எடுத்துக் கூறினார் மருத்துவர். அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக இவளை மணம் முடிக்கும் தேவைக்குள்ளானவன் இந்த அரசன். மருத்துவர் மூலம் தன் மகனின் உள்ளத்தை அறிந்து கொண்ட அரசன் தன் இளம் மனைவியை மகனுக்கே மணம் முடித்துக் கொடுத்ததாக வரலாறு கூறுகின்றது.

இது போன்ற புதிய தகவல்களுடன் தமிழர் மருத்துவம் சார்ந்த பல்வேறு தகவல்களும் இப்புத்தகத்தில் நிறைந்துள்ளது.

நன்றி : தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்

No comments: