Saturday, January 23, 2010

வெப்பத்தால் குளிரும் உலகம்! பரவும் புதிய வியாதிகள்?

நிஜம்தான். உலகம் வெப்பத்தால் குளிர்ந்து கொண்டிருக்கிறது. காலை எட்டரை மணி வரைக்கு போர்வையை விட்டு வெளிவராதவர்கள் அதிகம். பனிக்குல்லா இல்லாமல் நடமாடுவோர் எண்ணிக்கை குறைவு. இவையெல்லாம் உலகம் குளிர்ந்து விட்டதற்கான அடையாளங்கள்தான்.

ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பது நிïட்டன் விதி. நாம் தேவை என்ற பெயரில் இயற்கையை அழித்து வந்ததால், சமீப காலமாக இயற்கை எதிர்க்கரம் நீட்டத் தொடங்கி இருக்கிறது. இதை ஒளிப்படமாக 2012 திரைக்காட்சியில் பார்த்து ரசித்து இருப்பீர்களே! இன்னும் நாம் கண்டு கொள்ளாமல் இருந்தால் அந்த படத்தில் வரும் காட்சிகள் நிஜமாகும் வாய்ப்புகள் உண்டு.

புவி வெப்பமாகி வருகிறது என்பதன் எதிரொலிதான் தற்போது வாட்டி வதைக்கும் குளிர். இந்த குளிருக்கு காரணம் துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகி வருவதுதான்.

இதனால் உலகம் முழுவதும் தற்போது அதிக குளிர் நிலவுகிறது. வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா பகுதிகளில் நம்ப முடியாத அளவுக்கு குளிர் வாட்டி எடுக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், ப்ளா நகரங்களில் 28 டிகிரி வெப்பநிலைதான் உள்ளது. இது மனிதனின் சராசரி வெப்பநிலையைவிட குறைவாகும்.

ஆர்ட்டிக் கடல் பகுதியில் பனிப்பாறைகள் எதிர்த்திசையில் நகர்ந்து வேகமாக உருகி வருகின்றன. இதுதான் தற்போதைய கடுங்குளிருக்கும் காரணம். ஒவ்வொரு ஆண்டும் கணிக்க முடியாத அளவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுக்குழு கூறுகிறது.

கொலரோடா பகுதியில் 15 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு குளிர் நிலவுகிறது. இதற்கு முன்பாக 1899ம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில் 0 டிகிரிக்கும் கீழாக வெப்பநிலை சென்றிருக்கிறது என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இதே புவி வெப்பமாதல் பிரச்சினையால் வேறு ஒரு பூதமும் கிளம்பி வருகிறது. அதாவது திடீர் திடீரென்று புதிய வியாதிகள் பரவும் என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள் விஞ்ஞானிகள். சமீபத்தில் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் மற்றும் திடீர் வைரஸ் காய்ச்சல்கள் இந்த பருவமாற்றத்தால் ஏற்பட்டவைதான் என்கிறார்கள்.

உலகம் வெப்பமாகி வருவதால் நம்மைப்போலவே மற்ற ஜீவராசிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதனால் புதிய புதிய கிருமிகள் உற்பத்தியாகின்றன. இதனால் கணிக்க முடியாத புதிய புதிய வியாதிகள் விலங்கில் இருந்து மனிதனுக்குப் பரவுகின்றன.

கடந்த நூற்றாண்டில் இதுபோன்ற காலமாற்றத்தால்தான் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் பரவியது. மேற்கு ஆப்பிரிக்காவில் சிம்பன்சி குரங்குகளில் இருந்து எச்..வி. கிருமி மனிதர்களுக்கு பரவி இருப்பதாக அறிய முடிகிறது. இதனால் இதுவரை இரண்டரைக் கோடி மக்கள் எய்ட்ஸ் தாக்கி இறந்துள்ளனர் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

அதேபோல கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் பன்றிகளில் இருந்து `ஸ்வைன் புளு' எனப்படும் பன்றிக் காய்ச்சல் பரவியது. பறவைகளில் இருந்தும் வித்தியாசமான பாதிப்புகளை உருவாக்கும் வியாதிகள் பரவின. 1960-ல் இருந்து சுமார் 300 வியாதிகள் புதிதாக இனம் காணப்பட்டு உள்ளன. இவற்றில் 60 சதவீத வியாதிகள் விலங்குகளில் இருந்து மனிதனுக்குப் பரவியவை.

தற்போது வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, இன்னும் பல வியாதிகள் மனிதனுக்கு பரவும் என்று தெரிகிறது. குறிப்பாக மலேரியா, லைம் டிசீஸ், எலிகளில் இருந்து ஹான்டா வைரஸ், கொசுக்கள் மூலம் வெஸ்ட் நைல் டிசீஸ், நன்னீர் நத்தைகள் மூலம் ஸிஸ்டோசோமைசிஸ் எனும் வியாதிகள் பரவ வாய்ப்புகள் இருக்கின்றன. இவை எதிர்பார்க்கப்படும் வியாதிகளாக பட்டியலிடப்பட்டு உள்ளன. இவையின்றி இன்னும் வினோதமான நோய்களும் பரவக்கூடும் என்று அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments: