Saturday, January 23, 2010

நம் கடன்


'வரவு எட்டணா; செலவு பத்தணா

அதிகம் ரெண்டணா; கடைசியில் துந்தனா'

இந்தப் பாட்டு கவியரசரால் நகைச்சுவைக்காக மட்டும் எழுதப்பட்டதா? இல்லை! சிக்கனத்தின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துக்காட்ட எழுதப்பெற்றது.


"வீண் செலவு செய்யாதே; கையை கெட்டியாகக் கழுத்தில் கட்டிக் கொண்டும் இராதே! கையில் கிடைத்ததையெல்லாம் வீணே வீசி எறிந்து கொண்டும் இராதே. வீணில் பொருளை வாரி இறைப்பவர்கள் சைத்தானின் உடன் பிறந்தவர்கள்!" என்று நபிகள் நாயகம் அழகாக உபதேசித்துள்ளார்!


"வறுமையைவிடச் சிக்கனமின்மை கொடியது!" என்றார் கன்பூஷியஸ்.

சிக்கனம் தெரியாதவர்கள், அகலக்கால் வைத்துக் கடன் வாங்குகிறார்கள். 'வட்டி குட்டி போடும்' என்ற பழமொழி உண்மைதான்.

"வட்டிக்குப் பணம் கொடுப்பதும் பாவம். வட்டிக்குக் கடன் வாங்குவதும் பாவம்!" என்று நபிகள் நாயகம் எச்சரிக்கிறார்!
அதிகமான வட்டிக்கு கடன் வாங்கிய பல குடும்பங்கள் அதோ கதியானத்தை நேரிலும், பத்திரிக்கையிலும் பார்த்திருப்பீர்கள்!

கூச்மாண்ட ஹோமத்தில் ஒரு பிரார்த்தனை உண்டு அதன் பொருள் "நான் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியிருக்கக் கூடும். அந்தக் கடனானது எமலோகத்தில் என்னைக் கடன்காரனாக நிறுத்தும். அது பெரிய பாவம்! என்னைக் கடன் அற்றவனாக ஆக்கு!" - என்பதே பொருள்.

கடன் கொடுத்தால் அன்பு முறியும் என்கிறார்கள்; இது தவறு! கடனைத் திருப்பிக் கேட்டால்தான் அன்பு முறிகிறது. அரசாங்கம் தரும் கடன் ஆனாலும், நிறுவனங்கள் தரும் கடன் ஆனாலும், தனி நபர் கடன் அனாலும் பெறுவது கடன்தான்! அதைத் திருப்பித்தருவது நம் கடன்.

"என் வாழ்விலே நான் செய்யாத காரியமும், காணப் பயப்பட்ட செயலும் கடன்தான்!" என்று காந்தி தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்.

கடனோடு காலையில் எழுவதைவிடப் பட்டினியோடு இரவில் படுப்பதே மேல். கடன் வாங்கியவரை விட கடன் கொடுத்தவருக்குதான் ஞாபகம் அதிகம்!

இரண்டு நண்பர்கள் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள். கோவிந்தன் ஏழை; கோபாலன் செல்வந்தன் கோவிந்தனுக்கு அடிக்கடி பணம் தந்து கோபாலன் உதவினான். காலச் சக்கரம் சுழன்றது. கோவிந்தன் மிக உயர்ந்த நிலையடைந்தான். கோபாலன் வறுமையடைந்தான். குறள் படித்த தமிழர்கள் அல்லவா! கோபாலன் அஞ்சலட்டை எடுத்து-

அன்பு நண்பா, கோவிந்தா!
'நன்றி மறப்பது நன்றன்று'-

அன்புடன்
கோபாலன்.


என்று எழுதி அஞ்சல் செய்தான். மறுதபாலில் மடல் வந்தது.


'அன்பான கோபாலா,
'நன்றல்லது அன்றே மறப்பது நன்று'

உன் கோவிந்தன்.

இதுதான் கடன் கொடுக்கல் வாங்கலின் அழகு!

வாங்கிய கடன் தலைக்குமேல் இருக்க எப்படி உறங்க முடியம்? 'கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்றார் கம்பன்.

பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்வதற்குக் கடன் தொல்லைதான் காரணம் என்று செய்தித்தாள்கள் கூறுகின்றனவே! ஏன்? வரவு தெரியாதா? செலவு எல்லை புரியாதா? கடன் வாங்கிக் குடும்பம் நடத்துவது, புல்லை வைத்து அடுப்பெரிப்பது போன்றது. கடன் வாங்குவதற்கு மேல் மற்றொரு தவறும் உள்ளது. அதுதான் ஜாமீன் கையெழுத்து போடுவது. நண்பர் என்று சொல்லி யாராவது ஜாமீன் போடச் சொன்னால் அவர் நண்பரே இல்லை; பகைவர். 'கடன் கொடுக்காதே; கடன் வாங்காதே' ஷேக்ஸ்பியரின் 'ஹாம்லெட்' நாடக வரிகள் இவை.

ஒரு கடையில் ஒரு அட்டையில் கடன் குறித்து எழுதப்பட்டிருந்த வாசகம் ரசிக்கும் படியாக இருந்தது.

நீ கடன் கேட்கிறாய். நான் தரவில்லை - நீ பைத்தியமாகிறாய்.
நான் கடன் தருகிறேன். நீ திருப்பித் தரவில்லை - நான் பைத்தியம் ஆகிறேன்!.

நீயே பைத்தியமாகு! (
You Go Mad ! )


அவசரத்திற்கென்று கடன் வாங்கி ஆயுள் முழுவதும் அவதிப்படாதீர்கள். வருவாய் அறிந்து செலவு செய்க! கடன் வாங்கி பாதாம் அல்வா சாப்பிடுவதைவிட, ரொக்கத்தில் கம்பங்கூழ் இனிமை! கடன் வாங்கிக் கட்டுகின்ற காஞ்சிபுரம் பட்டைவிட, ரொக்கத்தில் பெறும் கைத்தறி ஆடை நல்லது! நிம்மதியாக தூங்கலாம்; யாரிடமும் பல்லைக்காட்ட வேண்டாம்; தலைகுனிய வேண்டாம்!

கடன் கொடுப்பவர்களே! கடனைக் கொடுத்துவிட்டு வருமா? வராதா? கேட்கலாமா - என்றெல்லாம் தவிக்க வேண்டாம்! கொஞ்சம் முடிந்தால் இனாம் கொடுத்துவிட்டு, செல்லுங்கள்! இல்லையேல் கடன் கொடுப்பதை தவிருங்கள். கடன் வாங்குவதையும் தவிருங்கள்.


நன்றி : நிம்மதிக்கு எளிய வழிகள்


No comments: