Tuesday, January 5, 2010

உலகிலேயே உயரமான கட்டிடம்

800 மீட்டர் உயரம் கொண்ட, உலகிலேயே உயரமான 'புர்ஜ் துபாய்' கட்டிடம் நேற்று திறக்கப்பட்டது. இந்த கட்டிடம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.

அமெரிக்கா, ரஷியா, கனடா, மலேசியா, தைவான் என்று பல்வேறு நாடுகளிலும் உயரமான கட்டிடங்கள் உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் விட உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடம் துபாய் நாட்டில் கட்டப்பட்டு உள்ளது.

துபாய் அரசாங்கம் ரூ.1 லட்சம் கோடி செலவில் உருவாக்கியுள்ள வணிகக்கடல் மாநகரின் நடுவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. புர்ஜ் துபாய் (துபாய் கோபுரம்) என்ற இந்த பிரமாண்டமான கட்டிடத்தின் உயரம் 800 மீட்டர் ஆகும். அதாவது ஒரு கிலோ மீட்டர் உயரத்துக்கு 200 மீட்டர்தான் குறைவு.

8 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் 160 மாடிகள் உள்ளன.

கூம்பு வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த புர்ஜ் துபாய் கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. துபாய் மன்னர் ஷேக் முகமது இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார்.

திறப்பு விழாவை யொட்டி, புர்ஜ் துபாய் கட்டிடம் வண்ண விளக்குகளில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. இந்த கட்டிடத்தின் திறப்பால், துபாயின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும் என்று கருதப்படுகிறது.

இந்த கட்டிடம் உலக சாதனைகளை தொகுத்து வழங்கும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது.

விண்ணை முட்டும் உயரத்தில் கம்பீரமாக எழுந்து நிற்கும், 'புர்ஜ் துபாய்' கட்டிடத்தின் கட்டுமானப்பணி கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி தொடங்கியது. 192 கான்கிரீட் தூண்கள் நிறுவப்பட்டு அதன் மீது கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. கட்டிடத்தின் அடித்தரை 12 ஆயிரத்து 500 கன மீட்டர் கட்டிட தளத்துடனும், 3 மீட்டர் தடிப்புடனும் உள்ளது.

கடலுக்கு அருகில் இருப்பதால் இரும்பு கம்பிகள் துருப்பிடிக்காத வகையிலும், காற்றின் வேகம், பூமி அதிர்ச்சி ஆகியவற்றை தாங்கக்கூடிய வகையிலும் நவீன தொழில்நுட்பத்துடன் சிறந்த முறையில் கட்டப்பட்டு உள்ளது.

இந்த கட்டிடத்தில் மொத்தம் 57 'லிப்ட்'களும், 8 எஸ்கலேட்டர்களும் (நகரும் படிக்கட்டுகள்) உள்ளன. 57 'லிப்ட்'களில் 2 'லிப்ட்'கள் இரண்டு அடுக்குகளை கொண்டது ஆகும். உருண்டை வடிவிலான இந்த 2 'லிப்ட்'களும், தரை தளத்தில் இருந்து பார்க்கும் தளமாக விளங்கும் 124 மாடி வரை செல்லும். இங்குள்ள 'லிப்ட்'கள் அதிகபட்ச வேகமாக வினாடிக்கு 10 மீட்டர் உயரம் வரை செல்லும்.

பார்க்கும் தளமான 124 மாடியில் இருந்து சுற்றிலும் உள்ள கடல், பாலைவனத்தில் உள்ள பிற உயரமான கட்டிடங்கள், சோலைகள் ஆகியவற்றை கண்டு களிக்கலாம். இந்த தளத்தில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரம் வரை பார்க்கலாம். இங்கு தொலைநோக்கி வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இந்த பார்க்கும் தளத்துக்கு செல்வதற்கான கட்டணம் ரூ.1,200 ஆகும். அந்த தளத்தில் பரிசுப் பொருள் கடைகளும் உள்ளன.

கம்பீரமாக எழுந்து நிற்கும் இந்த கட்டிடத்தை கட்டியதில் இந்தியர்களின் உழைப்பு குறிப்பிடத்தக்கது ஆகும். இதன் கட்டுமான பணியில் ஈடுபட்ட கொத்தனார், கம்பி கட்டுபவர், லிப்ட், குளிர்சாதன வசதி செய்தவர்கள், மின்சார வேலை செய்தவர்கள் போன்ற வேலைகளை செய்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்த கட்டிடத்தின் உயரம் மிகவும் அதிமாக இருப்பதால், மேலே செல்லச் செல்ல வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த கட்டிடத்தின் 100-வது மாடி முழுவதையும் பி.ஆர்.ஷெட்டி இந்தியர் வாங்கி இருக்கிறார். பெங்களூரைச் சேர்ந்த இவர் அபுதாபியில் தொழில் அதிராக இருக்கிறார்.

No comments: