Wednesday, January 13, 2010

மதமும் கடவுளும் - மண்டேலா

தென்னாப்பிரிக்க விடுதலை இயக்கத்தின் தந்தை, தியாகத் திருஉருவம், மாமனிதர் நெல்சன் மண்டேலா ஆங்கில இதழொன்றுக்கு மனம் திறந்துஅளித்த பேட்டி இங்கே தமிழில்:

கேள்வி: பல்லாண்டுக் கால அடக்குமுறை. சிறைவாசத்தைத் தொடர்ந்து இறுதியில் அரசியல் சுதந்திரம் அடைந்தபோது, நீங்கள் இதயத்தில் பழிவாங்கும் உணர்ச்சி மிக்க ஒரு தலைவராக இருப்பீர்கள் என மக்கள் கருதியிருக்கக் கூடும். எனினும், நீங்கள் சமரசப் பாதையைத் தேர்ந்தெடுத்தீர்கள். அந்தப் பாதை எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை உணர்ந்து நீங்கள் ஆச்சரியம் அடைந்தீர்களா?

மண்டேலா: மக்களை நீங்கள் எந்த முறையில் அணுகுகிறீர்களே, அதற்கேற்பத்தான் அவர்களது பதில் அணுகுமுறையும் இருக்கும். நீங்கள் வன்முறை அடிப்படையில் அணுகினீர்கள் என்றால் பதிலுக்கு அவர்களது அணுகுமுறையும் அப்படித்தான் இருக்கும். எங்களுக்கு ஸ்திரத்தன்மை வேண்டும் என்று சொன்னால் நம்மால் நிறைய விஷயங்களைச் செய்ய முடியும். சமுதாய முன்னேற்றத்துக்கு அது சிறப்பான பங்களிப்பாக இருக்கும்.

கேள்வி: ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ் கட்டுரைகளில் இடம் பெற்ற, உங்களைப் போலவே சோதனைகளை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டு வென்ற மனிதர்களைப் பற்றி, தென்னாப்பிரிக்காவின் அதிபராக இருந்தபோது நீங்கள் மேற்கோள் காட்டிசிலவேளைகளில் பேசியிருக்கிறீர்கள். ராபன் தீவு சிறைச்சாலையில் நீங்கள் ரீடர்ஸ் டைஜஸ்ட் படிப்பது வழக்கமா?

மண்டேலா: ஆம். நீங்கள் சொல்வது சரிதான். மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் கட்டுரைகள் அதில் வெளிவருகின்றன. அதில் ஒரு கட்டுரை கனடா நாட்டு இளைஞர் ஒருவரைப் பற்றியது. அவருக்கு வலது காலில் புற்றுநோய் வந்து, அந்தக் காலையே அகற்ற வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறி இருந்தனர். அதன்படி அவரின் கால் அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. எனினும், அவர் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கவில்லை. அட்லாண்டிக் பகுதியில் இருந்து பசிபிக் பகுதிக்கு ஒற்றைக் காலில் நடந்து சென்று சாதனை படைக்க அவர் முடிவு செய்தார்.

இதுபோன்ற ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரைகள் மக்களுக்கு ஊக்கம் தருபவையாக இருந்தன. உயிர்க் கொல்லி நோய் வந்தாலும்கூட நீங்கள் இடிந்துபோய் உட்கார்ந்து மனம் தளர வேண்டியதில்லை. வாழ்க்கையை அனுபவியுங்கள். உங்களுக்கு வந்துள்ள நோயை எதிர்த்து சவால் விடுங்கள் என்று சொல்லுகிற கட்டுரைகளாக அவை இருந்தன. பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பலருக்கும் அவை உற்சாகம் அளிப்பவையாக இருந்தன.

கேள்வி: இளம் வயதில் மெதாடிஸ்ட் திருச்சபை சூழலில் வளர்க்கப்பட்டவர்தானே நீங்கள்...

மண்டேலா: ஆமாம்.

கேள்வி: அந்த மதம் அல்லது பொதுவாக மதம் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்திருக்கிறதா?

மண்டேலா: கிறிஸ்தவர்களாகவோ, முஸ்லிம்களாகவோ, இந்துக்களாகவோ சமுதாயத்தின் பெரும்பகுதியினர் எதைத் தழுவிக் கொண்டிருக்கிறார்களோ, அதை எதிர்த்து பகைமை கொள்ளாமல் இருப்பதே முக்கியமானது. ஏனெனில், எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவர் இருக்கிறார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, மனிதகுலம் நம்புகிறது.

அதற்கு மதிப்பு கொடுப்பது முக்கியம். நீங்கள் அதற்கு எதிராக இருப்பீர்கள் என்றால், அது உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்வது ஆகிவிடும். மக்களில் பலரும் சமுதாயத்துக்குத் தலைமை தாங்கக்கூடிய ஒருவராக உங்களைக் கருதமாட்டார்கள். மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான உறவு என்பது தனிப்பட்ட விஷயம். எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவர் இருக்கிறார் என்பது குறித்து நீங்கள் கேள்வி எழுப்ப முடியாது.

கேள்வி: உலக வரலாற்றில் அமைப்பு ரீதியான மதத்தின் பங்களிப்பு ஆக்கபூர்வமானதா? எதிர்மறையானதா?

மண்டேலா: பொதுவாகச் சொன்னால் மதம் சிறந்த பங்காற்றி இருக்கிறது. பல்வேறு மதக்குழுக்களுக்கு இடையிலான போட்டிதான் ஒரே வேறுபாடு. இந்தப் போட்டியை நான் ஆதரிக்கவில்லை. நமது விவகாரங்களைக் கண்காணிக்க, எல்லாவற்றுக்கும் மேலான ஒரு சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை மனிதகுலத்துக்கு நல்லதுதான்.

கேள்வி: எச்ஐவி/எய்ட்ஸ் தாக்குதல் இதுவரை கண்டிராத வகையில் மக்களின் உடல் நலத்துக்கு மாபெரும் பிரச்சினையாக இருக்கிறது என்று நீங்கள் கூறி இருக்கிறீர்கள். இது தொடர்பாக இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்று நீங்கள் நம்புவதால், எய்ட்ஸுக்கு எதிராக நீங்கள் தனிப்பட்ட முறையில் போர் நடத்தி வருவதாகத் தோன்றுகிறது. சரியா?

மண்டேலா: ஆமாம். எய்ட்ஸ் நோயால் துன்பப்படும் மனிதர்களை முற்றிலும் தள்ளி ஒதுக்கி வைக்கும் அருவருப்பு மனப்பான்மைதான், நாம் சமாளிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்று. அவர்களை அருவருப்பதற்குப் பதிலாக, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்று அவர்களது படுக்கையில் உட்கார்ந்து, இளவரசி டயானா அவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ந்ததை நினைத்துப் பாருங்கள். எய்ட்ஸ் நோய் வந்த மனிதர் ஒருவர் இருக்கும் அதே அறையில் ஒருவர் இருக்க முடியாது என்ற எண்ணத்தை டயானா தகர்த்தார். அவர் மிகவும நல்ல வேலை செய்தார்.

2001-இல் தென்னாப்பிரிக்காவின் வட பகுதியைச் சேர்ந்த லிம்போலா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்து வைப்பதற்காக நான் சென்றேன். அங்கிருந்த மக்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில், குழந்தைகளைத் தவிக்க விட்டு விட்டு பெற்றோர் இருவரும் இறந்துவிட்டதாகவும், மூத்த குழந்தைக்கு 8 வயதுதான் ஆகிறது என்றும் என்னிடம் சொன்னார்கள். “அவர்களைப் பார்க்கலாமா’’ என்று கேட்டேன். அவர்கள் எல்லோருக்கும் அதில் மகிழ்ச்சி. அந்த வீட்டுக்கு நாங்கள் போய்க் கொண்டிருந்த போது, என்னைப் புகழ்ந்து சில பாடல்களை அவர்கள் பாடிக் கொண்டு வந்தனர். நான் அந்த வீட்டுக்குள் சென்றேன். 25 நிமிடங்கள் அங்கு தங்கி இருந்தேன். நான் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, என்னைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்த அந்த கூட்டம் என்னை விட்டு விலகிச் செல்லத் தொடங்கியது. அவர்கள் என்னிடம் இருந்து தொலைவில் இருக்கும் வகையில் விலகிச் செல்கிறார்கள் என்பதை முதலில் நான் புரிந்து கொள்ளவில்லை. நான் வேகமாக அவர்களை நோக்கிச் சென்றபோது, அவர்களும் வேகமாக விலகிச் சென்றார்கள். என்னைக் கண்டுதான் அவர்கள் ஓடுகிறார்கள் என்பதை உணர்ந்தவுடன் நான் என்னுடைய காருக்குத் திரும்பிவிட்டேன்.

கேள்வி: அருவருப்புக்கு வழி வகுக்கும் இந்த அறியாமையை அகற்றுவதற்குத்தான் நீங்களும் உங்களைப் போன்ற தலைவர்களும் பங்காற்றி வருகிறீர்கள்...

மண்டேலா: முற்றிலும் சரி. தென்னாப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியான கேப் மாநிலத்தைச் சேர்ந்த சிங்கி பிராந்தியத்தில், எச்ஐவி கிருமி தாக்குதலால் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் துணிச்சலானவர். நான் கலந்துகொண்ட ஒரு கூட்டத்துக்கு வந்த அவர், தனக்கு எச்ஐவி கிருமி தாக்குதல் இருப்பதாக அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார். அவரை ஆரத் தழுவிக் கொண்ட நான் கூட்டத்தினரைப் பார்த்துச் சொன்னேன்: “உயிர்க்கொல்லி நோயால் அவதிப்படும் மனிதர்களைத் தள்ளி வைக்காதீர்கள். நோயைவிடவும் இதுதான் அவர்களை அதிகம் கொன்றுவிடும்’’ என்றேன். இனி நாம் மனிதர்களாகக் கருதப்பட மாட்டோம் என்று ஒருவருக்குத் தெரியவரும்போது, போராடுவதற்கான உறுதியை அவர் இழந்துவிடுகிறார். மாறாக, அவர்கள் நம்பியிருக்கிற நண்பர்களும் மற்றவர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தால் அவர்கள் நோயை எதிர்த்துப் போராடுவார்கள்.
சென்று பார்ப்பதாலும், பேசுவதாலும் மன தைரியம் அடைந்திருக்கிற எய்ட்ஸ் நோயாளிகள் பலரை எனக்குத் தெரியும்.

உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். எச்ஐவி கிருமித் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் மறைக்கத் தேவையில்லை. சிறையில் எனக்குக் காசநோய் வந்தபோது எனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவத்தைச் சொல்கிறேன். மருத்துவமனையில் இது எனக்குத் தெரிவிக்கப்பட்டதும், உடனே இதை என் நண்பர் வால்டர் சிஸ்லுவிடம் (ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் - ஏஎன்சி தலைவர்களில் ஒருவர், கம்யூனிஸ்ட், ராபன் தீவு சிறைச்சாலையில் அரசியல் கைதியாக மண்டேலாவுடன் இருந்தவர்) சென்று சொன்னேன். வால்டர் என்னை மிகவும் அருகில் அழைத்து, “மடிபா, இதையெல்லாம் நீங்கள் எங்களிடம் சொல்லக்கூடாது- இது தனிப்பட்ட விஷயம்என்றார். பதிலுக்கு நான்இதில் தனிப்பட்ட விஷயம் என்ன இருக்கிறது? மருத்துவமனை முழுவதுக்கும் இது தெரியுமேஎன்றேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு பிராஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் வந்தபோது, பத்திரிகையாளர்கள் கூட்டத்தைக் கூட்டி வேடிக்கையாக அதைத் தெரிவித்தேன். இதுபோன்ற விஷயத்தைப் பேசும்போது, கொஞ்சமும் கவலைப்படாமல் இந்த மாதிரி இருப்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.

கேள்வி: எய்ட்ஸுக்கு அப்பால், இன்று உலகை எதிர்நோக்கும் பிரச்சினை என்ன?

மண்டேலா: வறுமை, கல்வி அறிவு இல்லாமை - இந்த இரண்டும் சேர்ந்ததுதான் இன்றைய உலகின் பெரும் பிரச்சினை. எல்லோரும் கல்வி அறிவு பெறுவதை உறுதிப்படுத்த வேண்டியது முக்கியமானது.

கேள்வி: தொடர்ந்து பல ஆண்டுகளாகவே, குழந்தைகளுக்காக நீங்கள் நிறைய நேரத்தைச் செலவிடுகிறீர்கள். குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோர் மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கிய படிப்பினை என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

மண்டேலா: உண்மையில் கல்வி அறிவு இல்லாமல் உங்கள் குழந்தைகள் ஒருபோதும் சவால்களை எதிர்கொள்ள முடியாது. எனவே குழந்தைகளுக்குக் கல்வி கற்றுத் தர வேண்டியதும், நாட்டுக்கு பங்களிப்பு செய்ய வேணடும் என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டியதும் மிகவும் முக்கியமானது. என் குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் நான் அதைத்தான் செய்கிறேன். எனக்குத் தெரிந்ததைவிடவும் என் பேரக் குழந்தைகளுக்கு அதிகம் தெரிந்திருக்கிறது.

கேள்வி: குழந்தைகளிடம் இருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்?

மண்டேலா: உயரத்தில் மிதந்து கொண்டிருப்பதற்குப் பதிலாக குழந்தைகள் உங்களை பூமிக்கு இழுத்து வருகிறார்கள். அவர்களுடன் சேர்ந்திருப்பதால் கிடைக்கும் ஆதாயங்களில் இது ஒன்று. குழந்தைகள் மிகவும் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். கடந்த காலத்தில் நீங்கள் செய்த தவறுகளை அவர்கள் சரிப்படுத்துகிறார்கள். நீங்கள் செய்த தவறுகளை அவர்களால் உங்களுக்கு நினைவுபடுத்த முடிகிறது.

கேள்வி: .நா. அனுமதி இல்லாமல் இராக் மீது நடவடிக்கை எடுத்ததற்காக, அமெரிக்க, பிரிட்டிஷ் அரசுகளை நீங்கள் கண்டனம் செய்திருக்கிறீர்கள். சூடான் நாட்டின் தர்பூர் மாநிலத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக .நா. நடவடிக்கை எடுக்கும் என்று உலக மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் .நா. அவ்வாறு செய்ய விரும்பவில்லை அல்லது முடியவில்லை. இது .நா.வின் பலவீனத்தைக் காட்டவில்லையா?

மண்டேலா: உலகில் பலவீனம் இல்லாத அமைப்பு என்று எதுவும் இல்லை. நாம் செய்ய வேண்டியது எல்லாம், எந்த நோக்கத்துக்காக அந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டனவோ, அந்த நோக்கத்தை அவை அடைவதை உறுதிப்படுத்துவதற்கு முயற்சி செய்வதுதான். அந்த அமைப்புகளுக்கு உள்ளே இருந்து நாம் போராட வேண்டும். நமக்கு உலகம் முழுவதையும் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு ஒன்று இருக்கும்போது, அதை விட்டுவிட்டு ஒரு நாடு ஒருதலைப்பட்சமாக செயல்படுவது சரியல்ல.

கேள்வி: இராக் போன்ற நாடுகள் மீது, .நா.வைப் பொருட்படுத்தாமல் ஒருதரப்பாக நடவடிக்கை எடுப்பது தவறு என்று சொல்கிறீர்கள். ஆனால் இராக்கில் இப்போது வெளிநாட்டுப் படைகள் இருப்பது யதார்த்த நிலவரம் ஆகிவிட்டது. அங்கு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சிறந்த வழி என்ன?

மண்டேலா: இராக்கில் சில நாடுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மீதான எனது கண்டனம் என்பது, பலதரப்பு செயல்பாடு என்பதன் மீது - இந்த விஷயத்தில் .நா. மீது - எனக்கு இருக்கும் ஆழ்ந்த உறுதியை அடிப்படையாகக் கொண்டது. சதாம் ஹுசைன் மீது நடவடிக்கையை எதிர்க்கிறேன் என்று சொல்லவில்லை. மாறாக, அமெரிக்கப் படைகளின் நடவடிக்கைகள் விளைவாக, இராக்கில் நடந்து கொண்டிருப்பது குறித்து நான் பெரிதும் கவலைப்படுகிறேன். எத்தனைப் பேர் இறந்திருக்கிறார்கள் என்று கணக்கிட முடியவில்லை. இதிலிருந்து விடுபட்டு முன்னேறும் வழியாக, பலதரப்பு செயல்பாடு என்ற கோட்பாட்டை, .நா.வின் பங்களிப்பை வலுப்படுத்த வேண்டும்.

கேள்வி: ஒரு வலுவான .நா. அமைப்பு வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?

மண்டேலா: .நா. போதிய அளவுக்கு வலுவாக இல்லை என்று சொல்ல முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. அது நடவடிக்கை எடுக்காத, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

கேள்வி: தென்னப்பிரிக்காவில் வன்முறை அற்ற அகிம்சைப் போராட்டம் மட்டுமே அடக்குமுறைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது என நீங்களும் மற்ற ஏன்என்சி தலைவர்களும் முடிவு செய்த பிறகு ஏஎன்சியின் ராணுவப் பிரிவுக்கு நீங்கள் தலைவர் ஆனீர்கள். ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தக்கூடிய இடங்கள் உலகில் இன்றும் இருக்கின்றனவா?

மண்டேலா: எங்களுடன் எந்த வகையிலும் பேசத் தயாராக இல்லாத, இனஒதுக்கல் அரசின் மூர்க்கத்தனம் காரணமாகத்தான் ஏஎன்சியின் ராணுவப் பிரிவை நாங்கள் உருவாக்க வேண்டி இருந்தது. எங்கள் உணர்ச்சிகளுக்கு இடம்தர அவர்கள் தயாராக இல்லை. எனவே அவர்களை நிர்பந்தப்படுத்தி இணங்க வைப்பதற்கான வழிமுறைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்தது. அதில் நாங்கள் வெற்றி பெற்றோம். நீங்கள் எடுக்கும் முடிவு நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையைப் பொறுத்தது.

கேள்வி: பயங்கரவாதத்துக்கும் நியாயமான சுதந்திரப் போராட்டத்துக்கும் இடையில், எங்கே நீங்கள் எல்லைக் கோடு வகுப்பீர்கள்?

மண்டேலா: மோதல் நிலவரங்களுக்கு விவேகமான தீர்வு காணும் கோட்பாட்டுக்கு நான் கட்டுப்பட்டுள்ளேன். மனித சமூகத்திடம் அதற்கான ஆற்றல் இருக்கிறது என்று நம்புகிறேன்.

கேள்வி: தென்னாப்பிரிக்காவின் அதிபராக ஒரேயொரு பதவிக்காலம்தான் நீங்கள் பதவி வகித்தீர்கள். “சில தலைவர்கள் எப்போது பதவியை விட்டு விலக வேண்டும் எனத் தெரியாமல் இருக்கிறார்கள்என்று நீங்கள் ஒருமுறை குறிப்பிட்டது மிகவும் புகழ் பெற்றுவிட்டது. ஜிம்பாப்வே நாட்டில் அதிபர் ராபர்ட் முகாபே 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார். ஜிம்பாப்வேயில் மக்கள் மீது அடக்குமுறை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு சுதந்திரம் குறைந்து கொண்டிருக்கிறது. அவர் பதவி விலகுவதற்கு இது உரிய தருணம் அல்லவா?

மண்டேலா: எந்த ஒரு ஜனநாயகத்துக்கும் அதன் தலைவர் நீண்ட காலம் ஆட்சியில் இருப்பது நல்லதல்ல. எனினும், சம்பந்தப்பட்ட அந்தந்த நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம் இது.

கேள்வி: நீங்கள் சந்திக்க வேண்டும் என்று விரும்பி சந்திக்க முடியாமல் போன சர்வதேசப் பிரமுகர்கள் யாரும் உண்டா?

மண்டேலா: குறிப்பிடத் தக்க பொறுப்புகள் எதுவும் வகிக்காதவர்களாகவும், அதே வேளையில் சமுதாய வளர்ச்சிக்கு அளவிட முடியாத பங்காற்றியவர்களாகவும் விளங்கும் ஏராளமான ஆண்களும், பெண்களும் இருக்கிறார்கள். அவர்களில் சிலரை அவர்களது சொந்த நாட்டினருக்குக் கூட தெரிந்திருக்காது. ஆனால் அவர்களைப் பற்றி அறியநேரும்போது மிகவும் ஈர்க்கப்படுவீர்கள். அவர்கள்தான் நாம் ஒருபோதும் மறக்கக்கூடாத வீரர்களும் வீராங்கனைகளும் ஆவர். அவர்களது சமுதாய சேவை நம்மை வியக்க வைக்கிறது.

கேள்வி: எனவே, யார் சொல்கிறார்கள் என்பதல்ல. சொல்லப்படும் செய்திதான் குறிப்பிடத் தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது...

மண்டேலா: ஆம். ஒருவரது பின்னணி எப்படி இருந்தபோதிலும், அவர் சமுதாய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புதான் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கேள்வி: ராபன் தீவிலும் வேறு இடங்களிலும் நீங்கள் சிறையில் இருந்த அந்த நெடிய ஆண்டுகளில், உங்கள் மனதில் அடிக்கடி நிழலாடிக் கொண்டிருந்த ஒரு செய்தி, ஒரு புத்தகத்தின் வாசகம், ஒரு பாடல் என, உங்கள் உணர்வுகளைத் தளரவிடாமல் உறுதியுடன் வைத்துக் கொள்வதற்கு உதவிய விஷயம் ஏதேனும் உண்டா?

மண்டேலா: என் மனதில் அப்படி நிழலாடிக் கொண்டிருந்தவை ஆங்கிலக் கவிஞர் டபிள்யூ.. ஹென்லே எழுதியஇன்விக்டஸ்என்ற கவிதையின் கடைசி வரிகள்தான்.

கேள்வி: உங்களுக்கு இருக்கும் பெரிய பலம், பெரிய பலவீனம் என்று நீங்கள் எவற்றைச் சொல்வீர்கள்?

மண்டேலா: என்னிடம் நிறைய பலவீனங்கள் இருக்கின்றன. எனக்கு பலம் எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

கேள்வி: விடுதலைப் போராட்டம் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் நீங்கள் சிறந்த குத்துச் சண்டை வீரர் ஆகியிருப்பீர்கள் என்று சிலர் கருதுகிறார்கள். உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வேறு வேலைகள் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

மண்டேலா: சாதாரண மண்வெட்டும் தொழிலாளியாக இருக்கவே நான் விரும்பி இருப்பேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த ஒன்று குத்துச் சண்டை. ஆனால் ஒரு தொழில் என்ற முறையில் அது கடினமாக இருந்திருக்கும். நான் பெரிதும் வியக்கும் குத்துச் சண்டை வீரர்களில் ஒருவரு முகமது அலி. ஒரு குத்துச் சண்டை வீரர் என்ற முறையில், திருப்பித் தாக்காமல் - தாங்கிக் கொள், தாங்கிக் கொள் என - தாக்குதல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டார். 1974-இல் ஜெயிரே நாட்டில் ஜார்ஜ் போர்மேனுக்கும் அவருக்கும் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியின்போது, பல சுற்றுகளுக்குப் பிறகு முகமது அலி சொன்னார்: “நாங்கள் இவ்வளவு சுற்று சண்டை போட்டிருக்கிறோம். ஆனால் நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லைஎன்று. திருப்பித் தாக்குவதற்கு முன் நீங்கள் நிறையவே தாங்கிக் கொள்ள வேண்டி இருக்கும்.

கேள்வி: வரலாற்றில் நீங்கள் எப்படி நினைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

மண்டேலா: ஒரு தெய்வத்தைப் போல முன்னிறுத்தப்படுவதை நான் விரும்பவில்லை. நல்ல குணங்களும், குறைகளும் கொண்ட ஒரு சாதாரண மனிதனாக நினைக்கப்படுவதையே நான் விரும்புகிறேன்.

தமிழில் : ஜெயநடராஜன்
நன்றி : sanchikai.blogspot.com

No comments: