Wednesday, January 20, 2010

உண்மைகள் முடிவதில்லை

லகம் உருண்டை என்று சொன்ன கலிலியோவுக்கு பரிகாசமும், தண்டனையும் கிட்டிற்று. மதத்தைப் பழிப்பதாக அவன் மீது பழி சுமத்தப்பட்டது. பொய்யுரைத்த மதமோ, அல்லது அதை கண்மூடித்தனமாகப் பின்பற்றிய மனிதர்களோ கலிலியோவின் உண்மைக்கு எதிரிகள் ஆனார்கள். காலம் அவர்களுக்கு ஒத்துழைத்தது. ஆனால் அந்தக் காலம் முடிந்து மடிந்து போயிற்று. உண்மை இன்றைக்கும் பிரகாசமாக ஒளிர்கிறது.


உண்மைகள் எப்போதும் பரிகாசத்திற்கும், இகழ்ச்சிக்கும் ஆளாகின்றன காலத்திற்கேற்றார்போல. ஆனால் காலம்தான் மடிகிறது. உண்மைகள் மடிந்து விடுவதில்லை.

காந்தியின் சத்திய நெறிக்கு இன்றைக்கும் மரியாதை இருக்கிறது. ஆனால் அதற்கு சமூகத்தில் மதிப்புக் கிடைப்பதில்லை. ஹரிச்சந்திரனைப் போல் உண்மையை மட்டுமே பேசுவேன் என்கிறவனின் வாழ்க்கை எள்ளலுக்கும், நகைபுக்குமே ஆளாகிறது. அதனால் அது புரிந்து கொள்ளப்படவில்லை என்று கருதலாகாது அதைப் புரிந்து கொண்டதனால் ஏற்படுகின்ற அச்சமே - அதை மேற்கொள்ள முடியாத இயலாமையே - இகழ்ச்சிக்குத் தூண்டுகிறது.

வரலாற்றில் எவ்வளவோ பொய்கள் - அரசாண்ட பொய்கள் - காலத்தின் போக்கில் தூக்கிலிடப்பட்டிருக்கின்றன. ஆனால் ஓர் உண்மையையாவது சமூகத்தால் காலத்தால் கொல்ல முடிந்ததா என்றால் இல்லவே இல்லை. ஏனெனில் உண்மை என்பதே உண்மையாக இருக்கிறது .


பாரதி எழுத்திற்கும் செயலுக்கும் உண்மையானவன். எனவே நடைமுறை வாழ்க்கை அவனைப் பித்தன் என்றது. அவன் பிறந்த சமூகம் அவனைத் தள்ளி வைத்து எள்ளி நகையாடியது. அவனது ஒளியை தடுக்க முடியாத சூன்யங்கள் அவனைப் புறந்தள்ளின. ஆனால் காலத்தை வென்று இன்றும் பாரதி வாழ்வது அவனது உண்மையின் சாகவரம்தான்!

உண்மைக்குக் கட்டுப்பட்டு - சத்தியத்துக்கு உடன்பட்டு வாழ்வது மிகப் பெரிய போராட்டம்தான். அதனால்தான் அதை 'சத்திய சோதனை' என்று வருணித்து எழுதினார் காந்தி. ஆனால் நெருப்பில் குளித்துப் பழகினால் நீர் எம்மாத்திரம்?

பொய்யால் ஒரு சாம்ராஜ்யத்தையே தகர்க்க முடியலாம். ஆனால் எந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தாலும் உண்மையைத் தகர்க்கவே முடியாது! அதை உணர்ந்து பார்க்க வேண்டுமென்றால், வாழ்ந்து பார்க்க வேண்டும்.

சிரமம்தான். சமரசங்களைத் தவிர்த்து உண்மைக்கு வாழ்க்கைப்பட்டுப் பாருங்கள்! உங்களை நீங்கள் உணர்வீர்கள்! உங்களிலிருந்தும் நீங்கள் உயர்வீர்கள்! அப்போது மிளிரும் பாருங்கள் உங்கள் முகத்தில் ஒரு பெருமை! அது மகத்தானது! அது உயர்வு மனப்பான்மையைத் தராது! உயர்ந்த மனப்பான்மையாக அமையும்!

எந்தக் கேலியையும், இகழ்ச்சியையும் உண்மை பொருட்படுத்துவதில்லை. அதன் மந்தகாசப் புன்னகை ஏளனங்களை அலட்சியப்படுத்துகிறது. சத்தியத்தின் வலிமை கேலி செய்யும் இயலாமைகளைப் புறந்தள்ளிவிடுகிறது. அதனால்தான் இயேசு பிரானால் பிலாத்துகளை சகிக்க முடிந்தது. இதைவிட வேறென்ன வலிமை இருக்கிறது என்கிறீர்கள்?

பொய்கள் கோழைகள்! உண்மைகளோ நெஞ்சுரம் மிக்கவை. அவை பொய்களிடமும், பொய்யர்களிடமும் சமரசம் செய்துகொள்வதில்லை. எனவேதான் உண்மையின் அலட்சியத்தில் பொய்கள் பொசுங்கிப் போய்விடுகின்றன!

இதை மறுக்கிற - ஓர் உதாரணமானது வரலாற்றின் இடுக்குகளில் எங்காவது தென்பட்டால் எனக்குச் சொல்லுங்கள்.

ஷாந்தலா

No comments: