Wednesday, January 6, 2010

வெயில்


வெட்டியகற்றப்பட்ட மரம்
விட்டு சென்ற வெளியில்
அதிரடியாக இறங்கிக் கொண்டிருக்கிறது வெயில்

சாவகாசமாய் நிலத்தில் அமர்ந்து
தாடைகளை அசைத்தவாறிருக்கும்
கிழட்டுப் பிராணியை
காலையில் ஒரு திசையிலும்
மாலையில் பிறிதொரு திசையிலும்
இடம் மாற்றி இருத்துகிறது ஏதோவொரு நிழல்

வேனிற்காலப் பறவைகளை
ஒரு தேசத்திலிருந்து இன்னொரு தேசத்திற்குக்
கூட்டிப் போகும் வெயில்
ஆகாயம் பத்திரப்படுத்தி வைத்திருக்கும்
பயணப் பாதைகளின்
வரைபடங்களைக் குழப்பாதவாறு
மீள அவற்றை அழைத்து வருகிறது

மாளிகை வாசல்களுக்கு வெளியே
தயங்கி நிற்கும் வெயில்
எளியவர் முற்றங்களுக்குச்
சிடுசிடுப்புடன் திரும்புகிறது

தாய்த்தேசத்தில் அனாதையாக்கப்பட்ட மகள்
புகலிடம் ஒன்றைத் தேடி போகிறாள்
நிழல்களை விரட்டும் பிறிதொரு வெயில்
அவள் பின்னே போகிறது

கண்ணீர் வற்றாத இத்தீவையும்
குறுகுறுக்கும் மனதுடன் கடக்கிறது வெயில்
ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு
இரத்தக் கறைகளை அப்படியே விட்டுவிட்டு

வெயில் மறைந்ததும்
அந்தப் பெருவனம்
கூந்தலை அவிழ்த்துப் போட்டவாறு
தெருவெங்கும் அலையத் தொடங்குகிறது
பதுங்கியிருந்த மிருகங்களையெல்லாம்
தன்னோடு அழைத்துக் கொண்டு

ஃபஹூமா

No comments: