Saturday, January 30, 2010

எல்லாம் இன்ப மயம்!

ன்னும் இரண்டு நாட்களில் சித்தர் விடைபெறப் போகிறார் என்றவுடன் எனக்கும், என் நண்பர்களுக்கும் மிகுந்த கவலையாகப் போய்விட்டது. சித்தர்பெருமானோடு பழகிய சில நாட்களில் நாங்கள் அவரை மிகவும் நேசிக்கத் தொடங்கி இருந்தோம்.

விடுமுறை முடிந்து நாளைக்குப் பள்ளிக்கூடம் என்று கேள்விப்பட்ட வுடன் எப்படிக் கவலையாகவும், பயமாகவும் இருக்குமோ அப்படி இருந்தது, அவர் இந்த ஊரை விட்டுப் புறப்படப் போகிறார் என்ற செய்தி.

கூட்டம் முடிந்தவுடன் சித்தர் பெருமானிடத்தில் ஆசி பெறுவதற்கும், திருநீறு பெற்றுக் கொள்வதற்குமாக மக்கள் அனைவரும் வரிசையாக வந்து கொண்டிருந்தனர். திருக்குறள் குமரேசனார் அருகில் நின்றுகொண்டு நாங்களும், வந்திருந்த எல்லோருக்கும் திருக்குறள் புத்தகத்தை கொடுத்துக் கொண்டிருந்தோம்.

எங்களை அடுத்து அண்டாக்களிலும், குண்டாக்களிலும் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, சுண்டல் போன்ற பிரசாதங்களை அன்போடு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

செவிக்கு விருந்து, சிந்தனைக்கு மருந்து, வாசிக்கத் திருக்குறள், ஆசி கூறச் சித்தர்பெருமான் என மேடைக்கு படியேறி வந்தவர்கள் பயன்பாட்டோடு இறங்கிச் செல்லும் காட்சி, கண்கொள்ளாக் காட்சியாக விளங்கியது.

எல்லாம் இனிமையாக முடிந்த பிறகு சித்தர்பெருமான் கோவிலை வலம்வரத் தொடங்கினார். 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்த பழைய சிவன் கோவில் ஆதலால் பெரிய கோட்டைச் சுவரும் உள்ளே பெரிய தெப்பக் குளமும், மிகப்பெரிய நந்தவனமும், செங்கல்தளம் பதிக்கப்பட்ட நடை பாதையுமாக அக்கோவிலின் சுற்றுப் பிரகாரம் விளங்கியது.

எங்களுக்கு முன்னே ஒருவர் தீவட்டி பிடித்து வர, மெல்லிய நாதஸ்வர ஓசை முழங்கியது. கீழைக்காற்று அங்கிருந்த முல்லை, மல்லிகை, இருவாச்சி, சம்பங்கி, பவளமல்லி, நந்தியாவட்டை எனப் பூக்களைத் தழுவி, துளசி, மரிக்கொழுந்து இவற்றின் இடைபுகுந்து நுழைந்து எங்களையும் தழுவிச் சென்றபோது மேனி சிலிர்த்தது.

"ஆகா, இறைவனின் படைப்பில் இயற்கைக்கு ஈடான ஒன்று எங்கேனும் நாம் பார்த்ததுண்டா! இந்த மலர்களைத் தழுவி வரும் குளிர் காற்றும், வண்டுகளின் ஓசையும் எத்தனை இனிமை பார்த்தீர்களா? இந்தத் தென்றல் காற்றுத்தான் எத்தனை மலர்களைத் தேடித்தேடி மணம் நுகர்ந்து, நூல் களைப் படித்துப் படித்து புதிய செய்திகளை ஆராய்ந்து மகிழும் ஆராய்ச்சி மாணவனைப்போல் செல்கிறது பாருங்கள்'' என்று ஒரு குழந்தைக்குரிய குதூகலத்துடன் சித்தர் மகிழ்வோடு கூறினார்.

உடனே என் தந்தை அதே மகிழ்வோடு, "சாமி தாங்கள் உண்மையிலேயே எல்லாம் வல்ல சித்தர் பெருமான்தான். பக்திச் சித்திரமான திருவிளையாடல் புராணத்தில் எழுதிய பரஞ்சோதி முனிவர் தம் நூலில் தென்றல் காற்றைப் பற்றி எப்படிக் கூறியிருந்தாரோ, அதையே சுவாமி தாங்கள் அனுபவித்து எங்களுக்குக் கூறிவிட்டீர்கள். நீங்கள் அனைத்தும் கற்றிருந்தாலும் இப்போது நீங்கள் கூறிய சொற்கள் தெய்வீகச் சொற்களே!'' எனக்கூற,

"புலவர் ஐயா, தங்களின் தமிழ் வாழ்த்திற்கு என் நன்றி. பரஞ்சோதி முனிவர் கூறிய செய்தியைக் கூறுங்கள் கேட்போம்'' என்று ஆர்வமாகக் கேட்டார் சித்தர்.

"பொங்கரில் நுழைந்து வாவிபங்கயம் துழாவி
பைங்கடி
மயிலைமுல்லை மல்லிகைப் பந்தர்தாவி
கொந்தலர்
மணம் கூட்டுண்டு குளிர்ந்து
மெல்லென்று
தென்றல் அங்கங்கே கலைகள்தேரும்
அறிவன்போல்
இயங்கும் அன்றே''

என்று பாடலைப் பாடிய என் தந்தை, "இப் பாடலின் கருத்து என்னவென்றால், தென்றல் காற்றானது, ஆராய்ச்சி செய்யும் மாணவன் பல்வேறு துறைகளில் நுழைந்து அரிய கருத்துக்களைத் தேடித்தேடி கண்டுபிடித்து உலகிற்குத் தருவதுபோல, பூந்தோட்டத்தில் நுழைந்து குளத்து நீரின் ஆழத்தில் குளிர்ச்சியை ஆராய்ந்து, வாசனை பொருந்திய முல்லை, மல்லிகைப் பந்தல்களில் தாவி அத்தனை நறுமணங்களையும் ஒன்று சேர்த்து ஆராய்ந்து நம் மேனியைத் தழுவிச் செல்கிறது. எனவே இத்தென்றல் காற்றும், ஆராய்ச்சி செய்யும் மாணவனும் ஒன்றுதான் எனக் கூறுகிறார் நம் பரஞ்சோதியார்'' என்று என் தந்தை கூறவும் எங்களுக்கெல்லாம் வியப்பாக இருந்தது.

அப்போது சித்தர் பெருமான் "குழந்தைகளே! நம் புலவர் ஐயா கூறிய பாடல் பாடப்பெற்று ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும். இந்தக் கோவில் கட்டப்பெற்று எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலிருக்கும். நாம் இப்போது இருப்பதோ இருபதாம் நூற்றாண்டு ஆயினும் சிந்தனைகள் எப்போதும் ஒன்றாக இருக்க காரணம் தெரியுமா?'' என்று கேட்ட சித்தர், சற்று நிறுத்திவிட்டு மேலும் தொடர்ந்தார்...

"தாமஸ் ஆல்வா எடிசனைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள் இல்லையா?'' என்று எங்களிடம் கேட்டார்.

"ஆமாம் சாமி. அவர்தான் மின்சார பல்பைக் கண்டுபிடித்தார்'' என்றான் குச்சிராசு.

"சரியாகச் சொன்னீர்கள். தன் வாழ்நாளில் 1500-க்கும் மேற்பட்ட புதிய அறிவியல் கருவிகளைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. ஒரு பேட்டியின்போது பத்திரிகையாளர் ஒருவர் எடிசனிடம் கேட்டாராம், `மிஸ்டர் எடிசன் இத்தனை கருவிகளையும் கண்டு பிடிக்கும் ஆற்றலை எங்கிருந்து பெற்றீர்கள்?' என்று கேட்க, எடிசன் அடக்கத்தோடு `இதோ இந்தப் பிரபஞ்சத்திலிருந்துதான் பெற்றேன். எல்லாச் செய்திகளும் எங்கும் நிறைந்திருக்கின்றன. நாம்தான் நம் அறிவு எனும் ஏரியல் ஆண்டனாவை அதனை நோக்கித் திருப்பிக் காந்தம் இரும்பைக் கவர்வதுபோலக் கவர்ந்து புதியன பெற வேண்டும்' என்று கூறினாராம்.

அதேபோல எத்தனையோ நூற்றாண்டுகளாக நம் தேசத்து ஞானிகளும், முனிவர்களும், நாயன்மார்களும் ஆழ்வார்களும் வந்துபோன இடங்களுக்கு வருகிறபோது அப்பெருமக்களின் சிந்தனைச் சிதறலை நாமும் பெறுகிறோம்'' என்று அற்புதமாக எடுத்துரைத்தார்.

அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டே வந்த நாங்கள் அவர் 'ஏரியல் ஆண்டனா' என்று கூறிய ஆங்கில வார்த்தையால் சற்றே மயங்கி நின்றோம். உடனே திருக்குறள் குமரேசனார், "குழந்தைகளே உங்கள் வீட்டில் வானொலிப் பெட்டியாகிய ரேடியோ இருக்கிறதல்லவா?'' என்று கேட்டார்.

"ஆமாம். எங்கள் வீட்டில் பெரிய ரேடியோ இருக்கிறது'' என்றான் குண்டுக்கருப்பையா.

"உங்கள் வீட்டு மொட்டைமாடியில் ஒரு கம்பை நட்டு அதிலிருந்து ஒரு வயர் போலவந்து ரேடியோவில் சேரும் இல்லையா? அந்த மொட்டைமாடிக் கம்புதான் ஏரியல் ஆண்டனா'' என்றார் குமரேசனார்.

"ஆமாடா மழை பெய்யறப்போ, காத்தடிக்கிறப்போ அந்தக்கம்பு ஆடினாக்கூட ரேடியோ கர், புர் என்று கத்துமே, நாம மழைவிட்டதும்போய் அதச்சரி செஞ்சதும் சரியாகப் பாடுமே, அதுதாண்டா ஏரியல்'' என்று கிரி விளக்கம் கொடுத்தான்.

நடந்து கொண்டிருந்த சித்தர், இதைக் கேட்டதும் கைதட்டி மகிழ்ந்து, "ஆகா இப்படித்தான் உங்கள் பாடங்களை நீங்கள் படித்து முடித்துவிட்டு ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிப் புரிந்து கொண்டால் ஒருபோதும் பாடம் மறக்காது'' என்றார்.

பின்னர், நாங்கள் கோவிலுக்குள் சென்றோம். அமைதியான அந்தச் சூழலில், அர்ச்சகர் அடுக்கு தீபத்தைக் காட்ட எம்பெருமானாகிய சிவனையும் பிராட்டியாகிய அகிலாண்டேசுவரியையும் நாங்கள் மெய்மறந்து கண்டு வணங்கினோம். அப்போது அங்கிருந்த ஓதுவார் கணீரென்ற குரலில் திருவிளையாடற் புராணத்தில் இருந்து ஒரு பாடலை இசையுடன் பாடத் தொடங்கினார்.

"கண்ணுதற் பெருங் கடவுள் கழகமோடு அமரந்து
பண்ணுளத்
தெரிந்த இப்பசுந்தமிழ்- ஏனை
மண்ணிடைச்
சில இலக்கண வரம்பிலா
மொழிபோல்

எண்ணிடைப்
படிக்கிடந்ததா?
எண்ணவும்
படுமோ?''

எனும் பாடல், இசையோடு அந்தக் கோவிலின் கருங்கற் சுவர்களில் மோதி எங்கும் நாதமாய் தவழ்ந்தது.

மீண்டும் அனைவரும் கோவிலுக்கு முன்புறம் வந்தோம். சித்தர்பெருமானை ஏற்றிச் செல்ல பெரிய கார் வந்து நின்றது. அதைத் தொடர்ந்து சீடர்கள் செல்லும் வாகனமும் வந்து நின்றது.

சித்தர் எல்லோரிடத்திலும் விடைபெற்றுத் தயாரானார். நாங்கள் கலக்கத்தோடு அவரது பாதங்களில் வணங்கி எழுந்தோம். அனைவருக்கும் திருநீறு பூசி ஆசீர்வதித்த அவர், திருக்குறள் குமரேசனாரையும் என் தந்தையாரையும் பார்த்துக் கை கூப்பினார்.

"உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே
புலவர் தொழில்''

எனும் குறட்பாவைச் சொன்ன குமரேசனாரும் என் தந்தையும் கண்கலங்க நின்றனர்.

கோபுரத்தையும் சுற்றி நின்ற மக்களையும் வணங்கிய சித்தர் காரில் ஏறிப் புலித்தோல் ஆசனத்தில் அமர, காருக்குள் இருந்த விளக்கு வெளிச்சத்தில் அவர் எங்களுக்கு தேவர்களில் ஒருவர் போலக் காட்சி தந்தார்.

கார் மெல்ல நகர்ந்தது. கிழக்குத் திசை நோக்கி விரைந்தது. நாங்களும் கரங்கூப்பி வணங்கினோம். விடைபெற்றோம்.

கு.ஞானசபந்தன்

2 comments:

சிங்கக்குட்டி said...

//சித்தர்பெருமானை ஏற்றிச் செல்ல பெரிய கார்//

????

Vishwa said...

அருமை!