Friday, January 29, 2010

பத்திரிக்கைச் செய்தி

'தமிழர் உரிமைக்கான திட்டத்தை விரைவில் அறிவிப்பேன்' - ராஜபக்சே

இலங்கையில் தமிழர் உரிமைக்கான திட்டத்தை விரைவில் அறிவிக்கப்போவதாக அதிபர் ராஜபக்சே தெரிவித்தார்.

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு ஆதரவாக 58 சதவீத வாக்குகள் கிடைத்தன. எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு 40 சதவீத வாக்குகள் கிடைத்தன. இரண்டாவது முறையாக அதிபராகி இருக்கும் அவர், கொழும்பில் நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அதிபர் அலுவலகத்தில் நடந்த அந்த பேட்டியின்போது, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது ராஜபக்சே கூறியதாவது:-

இலங்கையில் உள்நாட்டு தொழில் வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் வேளாண்மை ஆகிய துறைகளின் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிப்பேன். தேசத்தின் தனித்துவத்தை மறு நிர்மானம் செய்வேன். நாட்டின் பிற பகுதிகளோடு, விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீண்டும் இணைக்கப்படும். தமிழர் பகுதிகளில் எனக்கு ஆதரவாக வாக்களிக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக ஓட்டுரிமை இல்லாமல் இருந்த அவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழர் உரிமைக்கான திட்டத்தை விரைவில் அறிவிப்பேன். இலங்கையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வாக, அந்த திட்டம் இருக்கும். இலங்கை பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழர் தலைவர்களுடன் அது குறித்து ஆலோசனை நடத்துவேன்.

என்னுடைய முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். எனது தேர்தல் அறிக்கையிலேயே இது பற்றி கூறியிருப்பதால், அது திட்டமிடப்பட்டு விட்டது. அதன்படி, செயல்படுவேன். இலங்கைக்கும் அதன் அரசியல் சட்டத்துக்கும் எப்போதுமே உதவிகரமாக இந்தியா இருந்து வருகிறது. எனவே, தமிழர் உரிமை திட்டத்துக்கும் ஆதரவு அளிக்கும்.

இந்தியா முன்வைத்த 13-வது சட்டத் திருத்தம் என்றால் என்ன? அது, அரசியல் சட்ட விதிகளில் இருக்கிறது. தற்போது, அதை விட அதிகமாக பெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

அதே நேரத்தில், இலங்கையின் பெரும்பான்மை இன மக்கள் (சிங்களர்கள்) ஒப்புதல் அளித்தால் மட்டுமே தமிழர்களுக்கு எந்தவொரு தீர்வும் அளிக்க முடியும். இல்லாவிட்டால், அதை செயல்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அரசியல் சட்ட திருத்தம், என்பது இலங்கையின் உள் விவகாரம் என்பது இந்தியாவுக்கு நன்றாக தெரியும். எனவே, இந்தியா உதவியாகவே இருக்கும். அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று எங்களுக்கும் தெரியும்.

இவ்வாறு அதிபர் ராஜபக்சே தெரிவித்தார்.

இதற்கிடையே, இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த ராஜபக்சே திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம், ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது.

இது குறித்து அதிபரின் செய்தி தொடர்பாளர் லுசியன் ராஜகருணா நாயகே கூறுகையில், "பாராளுமன்றத்தை அதிபர் விரைவில் கலைப்பார். பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும். ஆனால், எப்போது நடைபெறும் என சரியாக என்னால் கூற முடியாது'' என்றார்.

அமெரிக்கா வாழ்த்து

மீண்டும் அதிபராக வெற்றி பெற்றுள்ள ராஜபக்சேவுக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. இலங்கை தேர்தல் நடைபெற்ற விதத்தையும் பாராட்டி இருக்கிறது. இது தொடர்பாக, அமெரிக்க தூதரகம் வாயிலாக அறிக்கை வெளியாகி உள்ளது.

அந்த அறிக்கையில், 'இலங்கை அதிபராக மீண்டும் வெற்றி பெற்றதற்காக அதிபர் ராஜபக்சேவுக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவிக்கிறது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு தொடர வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. அமைதியான, ஒளிமயமான இலங்கை உருவாவதற்கு அமெரிக்க அரசும், அமெரிக்க மக்களும் இணைந்து பணியாற்றுவார்கள்' என கூறப்பட்டுள்ளது.


No comments: