Thursday, January 28, 2010

அமெரிக்காவில் ஒரு மாவட்டத்துக்கு காந்தி பெயர்

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் மாவட்டத்தின் தென் மேற்கு பகுதியில் உள்ள ஹில் கிராப்ட் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் தவிர பாகிஸ்தானியர்களும், வங்காளதேசத்தினரும் அதிக அளவில் வசிக்கிறார்கள். இந்த பகுதி லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படுகிறது.

இந்த பகுதியில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு மகாத்மா காந்தி பெயர் சூட்டப்பட வேண்டும் என்று கடந்த 7 ஆண்டுகளாக கோரி வந்தனர்

7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகரின் மேயராக பில் ஒயிட் இருந்தபோது ஹில் கிராப்ட் அவென்யூ தெருவுக்கு மகாத்மா காந்தி அவென்யூ என்று பெயர் சூட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கு தெற்காசிய நாடுகளை சேராதவர்களிடம் இருந்து போதுமான ஆதரவு கிடைக்காததால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இப்போது அந்த ஆதரவு கிடைத்து உள்ளது.

அந்த நாட்டு சட்டப்படி, அந்த தெருவில் வர்த்தக கட்டிடங்கள் வைத்து இருப்பவர்களில் 75 சதவீதம் பேர் பெயர் மாற்றத்துக்கு ஆதரவாக மனு கொடுத்தால் மட்டுமே நகரசபை பெயர் மாற்றம் குறித்து பரிசீலனை செய்யும்.

பெயர் மாற்றத்துக்கு 75 சதவீத சொத்து உடைமையாளர்கள் ஆதரவு கிடைத்ததை தொடர்ந்து இப்போது மகாத்மா காந்தி மாவட்டம் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இப்போது பெயர் மாற்றம் அதிகாரப்பூர்வமாக செய்யப்பட்டு உள்ளது. ஹூஸ்டன் நகர மேயர் அன்னீஸ் பார்க்கர் இதை அறிவித்தார். அப்போது ஹூஸ்டனில் உள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் சஞ்சீவ் அரோராவும் உடன் இருந்தார்.

காந்தியின் 141-வது பிறந்த நாளையொட்டி அவரை கவுரவிப்பதற்காக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.


No comments: