Saturday, January 23, 2010

தெய்வம் பற்றி 'தெய்வப் புலவர்'!

"ல்லாம் கடவுள் செயல் என்றால் இந்த உலகத்தில் இறைவன் ஏழைகளை ஏன் படைக்க வேண்டும்? மனிதர்களுக்குத் துன்பங்களை எதற்காகத் தர வேண்டும்'' என்று ஒருவர் கூட்டத்தில் இருந்து ஆவேசமாகச் சித்தரை நோக்கிக் கேட்க, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

என் தந்தையார் ஒலிபெருக்கி அருகில் விரைந்து வந்து, "அமைதி அமைதி'' என்று கூறிவிட்டுக் கேள்வி கேட்டவரைப் பார்த்து, "ஐயா, சற்று மன அமைதி அடையுங்கள். உங்கள் கேள்விக்குச் சித்தர்பெருமான் தக்க விடையளிப்பார்'' எனக் கூறினார்.

கூட்டம் அமைதியானது, சித்தர் மென்மையான புன்னகையோடு மீண்டும் பேசத் தொடங்கினார், "மெய்யன்பர்களே, நம் நண்பர் ஒருவர் சற்றுக் கோபமாக ஒரு கேள்வியை நம் முன் வைத்துள்ளார். கோபம் உங்கள் மீதோ, என் மீதோ இல்லை. இந்த உலகத்தின் மீது, அதனைப் படைத்த இறைவன் மீது. ஏற்றத் தாழ்வுகளோடு இறைவன் மனிதர்களைப் படைத்திருப்பானா என்பதுதான் என் கேள்வி. ஏழை, பணக்காரன், நல்லவன் கெட்டவன், இன்பம் துன்பம் இப்படிப்பட்ட முரண்பாடுகளுக்கான காரணம்தான் என்ன? யோசித்துப் பார்க்கிறோம். எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் இதற்கும் விடை சொல்லி இருக்கிறாரா?'' என்று சித்தர் திருக்குறள் குமரேசனாரைப் பார்க்க, அவர் மகிழ்வோடு எழுந்து ஒலி பெருக்கி முன்வந்து நின்றார்.

"எல்லோருக்கும் வணக்கம். உலகத்தையே தன் அறிவால், தவ ஆற்றலால் புரிந்து கொண்ட சித்தர்பெருமான், திருக்குறள், திருவள்ளுவர் என்ற பெயர்கள் வந்தவுடன் என்னை முன்னிலைப்படுத்தி நினைத்துக் கொண்டது நான் பெற்றபேறு. சாமி, நம்முடைய நண்பர் கேட்ட கேள்வி கடுமையானதுபோல எல்லோருக்கும் தோன்றியிருக்கும். ஆனால் நம் திருவள்ளுவர் தம் குறட்பா ஒன்றில் இறைவன் அலைந்து திரிந்து அழிந்து போகட்டும் என்று கோப மாகப் பாடியிருக்கிறார்'' என்று கூற, சித்தர் வியப்போடு, "என்ன திருவள்ளுவரா இறைவன் கெட்டுப் போகட்டும் என்று கூறியிருக்கிறார்?'' என வியப்போடு கேட்டார்.

"ஆம் சித்தர்பெருமானே, இந்த உலகத்தைப் படைத்த இறைவன், இதில் வாழும் மக்களுக்கு உழைத்து உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு இல்லாமல் பிச்சை எடுத்து உயிர்வாழும் நிலையை ஏற்படுத்தி இருந்தால் அந்தக் கடவுளும் தான் படைத்துப் பிச்சை எடுக்கும் தன் மக்களைப் போலவே அலைந்து திரிந்து கெட்டு அழியட்டும் என்பதை

'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்'


எனக் கம்பீரமாக வள்ளுவரே பாடியுள்ளார். இதன் சுருக்கமான பொருள், உழைக்கக் கூடியவர்கள் மானம் இழந்து பிச்சை எடுத்து உண்ணமாட்டார்கள் என்பதுதான்'' என்று அவர் கூறி முடிக்கவும் கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது சித்தர் தம் இரு கைகளையும் கூட்டத்தை நோக்கி நீட்டி, "மெய்யன்பர்களே, அமைதியாக இருங்கள். நம் வள்ளுவர் எவ்வளவு தீர்க்கமாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள். இறைவன் ஏழைகளாக யாரையும் படைக்கவில்லை. உழைக்கத் துணியாதவர்களே பிச்சை எடுத்துண்ணுகிறார்கள் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.''

"சரி, நான் இப்போது ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள். உலகப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் எழுதிய கதை

இது.கவனமாக கேளுங்கள். எல்லாச் செல்வங்களையும் உடைய செல்வந்தர் ஒருவர், ஆயிரக்கணக்கான பேர் வந்து தங்கக்கூடிய மிகப்பெரிய சத்திரம் ஒன்றை மக்களுக்காக கட்டினாராம். அதில் இலவசமாகத் தங்கலாம். எல்லோருக்கும் இலவச உணவுக்கும் ஏற்பாடு செய்து வைத்தாராம்.உலகெங்கும் இருந்து மக்கள் வரத்தொடங்கினார்கள். சத்திரத்தில் நல்ல உணவு. அருமையான தங்குமிடம். சத்திரத்தைக் கட்டிய புண்ணியவானைப் போன்றோர் யாரும் இல்லை என்று பலரும் பாராட்டினார்கள்.

நாளாக நாளாக மக்களின் வருகை அதிகமானது. எல்லோருக்குமான உணவைச் சிலர் ஒதுக்கவும், பதுக்கவும் தொடங்கினர். இருப்பிடங்களில் சிலர் ஆக்கிரமிப்பு

செய்துகொண்டு பலரைத் தெருவில் படுக்க வைத்தனர். உள்ளம் கொதிக்க வைத்தனர்.

இப்போது சத்திரத்தில் இடம் இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமானது. உணவு கிடைக்காதவர்கள், இருக்க இடம் கிடைக்காதவர்கள் உணவைச் சுரண்டியவர்களையும் இடத்தைப் பிடித்தவர்களையும் எதிர்க்கத் துணிவில்லாமல், போராடத் துணிவில்லாமல் சத்திரம் கட்டிய செல்வந்தரை வெளியில் நின்று திட்டத் தொடங்கினார்களாம். "இன்னும் பெரிய சத்திரமாக அவர் கட்டி இருக்க வேண்டும். தங்கும் இடம் போதாது. உணவை அதிகமாகத் தர வேண்டும்' என்று சத்தம் போட்டபடி இருந்தார்களாம்'' என்று கதையை முடித்தார் சித்தர்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த உலகம்தான் அந்தச் சத்திரம். அதைக் கட்டிய செல்வந்தர்தான் இறைவன். வலிமை மிக்கவர்கள் எல்லாவற்றையும் சுருட்டிக் கொள்ள, எளிய மக்கள் ஏழ்மைக்கு ஆளானார்கள், பிறகு கடவுளைத் திட்டவும் தொடங்கினர்.

நண்பர்களே, வேட்டையாடிய மனித சமூகத்தில் பிச்சைக்காரர்கள் என்றும், ஏழைகள் என்றும் யாரும் இல்லை. மாடுகளை மேய்த்து வாழ்ந்த கால்நடைச் சமுதாயத்தில் ஏழைகள் இல்லை. நிலவுடைமைச் சமுதாயம் வந்தபிறகு பொருளாசை கொண்ட மனிதர்களே இந்த நிலமையை உண்டாக்கி உள்ளார்கள்.

எனவே இறைவன் மனிதர்களை மனிதர்களாகத்தான் படைக்கிறான். பிறக்கும் மனித உயிருக்குக் குழந்தை என்ற பொதுப் பெயரைச் சூட்டுகிறோம். இறந்த மனிதர் யாராயினும் 'பிணம்' என்றுதான் குறிப்பிடுகிறோம்.

எனவே இடையில் ஏற்படும் மாற்றங்களுக்கு இறைவனே பொறுப்பாவான் என்று எப்படி அவன் மீது குற்றம் சாட்டலாம்?'' என்று சித்தர் கேட்டுவிட்டு, நாம் இறைவனிடத்தில் கேட்டுக் கொண்டு வருவதில்லை. இங்கே யாரிடத்திலும் சொல்லிக் கொண்டும் இறப்பதில்லை'' என முடித்தார்.உடனே என் தந்தை எழுந்து, "ஆம் நம் சித்தர் பெருமான் சொன்னதுபோல நாலடியார் என்ற நூலில் சமண முனிவர்களும்

"கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்காள்''


எனக்கூறி உள்ளனர்'' எனக் கூறிவிட்டு அடுத்த கேள்வியை வாசிக்கத் தொடங்கினார்.

"சித்தர் சாமிகளுக்கு வணக்கம். என் பெயர் கிருஷ்ணவேணி. கீழத்தெருவில் என் வீடு. தெய்வங்களில் பாகுபாடு உண்டா? இத்தனை தெய்வங்கள் எதற்கு? இத்தனை பெயர்கள்தான் கடவுளுக்கு எதற்கு? ஒரே கடவுள் போதாதா? பல கடவுளர்கள் இருப்பதனால் தானே மதச்சண்டைகளும், வேறுபாடுகளும் வருகின்றன?''

இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் சித்தர் "அருமை, அருமை. பெண்கள் கூட்டத்தில் பங்கேற்பதும் கேள்விகள் கேட்பதும் அருமை. அம்மா கேளுங்கள். இறைவன் ஒருவன்தான். ஒரே நாமம் அதாவது ஒரு பெயர் கொண்டவன்தான். நாம்தான் வசதிக்கு வாய்ப்பிற்கு ஏற்ப இறை வடிவங்களை உருவாக்குகிறோம்'' என்று சொன்னவர் எங்களை நோக்கி, ``குழந்தைகளே மழைபெய்யும்போது நம்வீட்டு மாடிகளில் தேங்கியிருக்கும் தண்ணீர் எப்படி கீழே விழும் தெரியுமா?'' என்று கேட்டார்.

"குழாயில் இருந்து அருவிபோல் கொட்டும்'' என்றான் கிரி.

"ஜமீன்தார் வீட்டில் முதலைவாயிலிருந்து தண்ணீர் விழும். நாங்கள் அதுல குளிப்போம்'' என்றான் குச்சிராசு.

"எங்க வீட்டுக்குப் பக்கத்துவீட்ல யானை வாயில இருந்து தண்ணீ வரும்'' என்றான் குண்டுக் கருப்பையா.

"பார்த்தீர்களா அம்மா. தண்ணீர் ஒன்றுதான். அது வெளிவரும் வடிவம் குழாயாக, முதலையாக, யானையாக என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதுபோல இறைவனை எந்தப் பெயரிட்டு அழைத்தால் என்ன? அவன் வரத்தானே செய்வான்! பசியில் அழும் குழந்தையைப் தூக்கவரும் தாய்போல அவன் வருவான். எனவேதான் இத்தனை உருவங்கள், இத்தனை பெயர்கள்'' என்றார் சித்தர்.

கூட்டமே கைதட்டி மகிழ்ந்தது. உடனே குழந்தைகள் எழுந்து

"சூரியன் வருவது யாரால்? சந்திரன் திரிவது எதனாலே?
யார் இதற்கெல்லாம் அதிகாரி அதைநாம் எண்ணிட வேண்டாமோ?
அல்லா என்பார் சில பேர்கள், அரன்அரி என்பார் பலபேர்கள்''
என்று பாடப்பாட, கூட்டமும் சேர்ந்து பாடியது.

நிறைவாக என் தந்தை மேடைக்கு வந்து, "மெய்யன்பர்களே, நம் சித்தர்பெருமான் இன்னும் இரண்டு நாட்களில் நம்மிடம் இருந்து விடை பெறப் போகிறார். அதனால் அவரைச் சந்திக்க விரும்புவோர் அவர் தங்குமிடத்திற்கு வாருங்கள். அனைவருக்கும் வணக்கம்'' என்றார்.

கு.ஞானசம்பந்தன்

1 comment:

hamaragana said...

நண்பரே
தெய்வம் பற்றி கருத்து மிக அருமை சில பெரிய அறிவாளிகளுக்கு தர்க்க ரீதியான பதில்கள்
நன்றி .