Thursday, January 7, 2010

எண்சாண் உடம்பைக் கண்போல காப்போம்!


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

வருமுன் காப்பதே அறிவுடைமை

நலமும் வளமும் பெற்று வாழ

சிறுகுடும்பமே சிறப்பாகும்


எனவே தொடர்ந்து படியுங்கள்


தலை

எறும்பும் தன் கரத்தால் எட்டுச்சாண்
திறம்மிகு மனிதனும் எண்சாண் உயரம்
எண்சாண் உடம்பில் தலையே முதன்மை
எண்ணம் இயக்கம் யாவும் தலையே!
காளை வேகம் கணினியை மிஞ்சிடும்
மூளையின் செயல்திறம் மும்மடங்காகும்
இடப்புற உடலை வலப்புற மூளையும்
இடப்புற மூளை வலப்புற உறுப்பையும்
சீராய் நன்றே இயங்கிடச் செய்திடும்
கூராய் மதியினைப் புதுக்கிடச் செய்திடும்!
சாலையில் ஊர்தியை ஓட்டும் போதும்
ஆலையில் செய்யும் வேலைகளாலும்
தலைக்குக் காயம் நேரா வண்ணம்
தலைக் கவசத்தைப் பயன்படுத்துவீரே!

கூந்தல்

தலைமுடி அழகாய் இருந்திடவேண்டி
தலையைக் கெடுக்கும் திரவம் பூசி
உள்ள முடிகளை இழந்திட வேண்டா!
தெள்ளிய சிகைக்காய் தேங்காய் எண்ணெய்
நெல்லி, கறிவேப்பிலை, செம்பருத்தி,
நல்ல விதமாய்த் தலைமுடிக்குதவும்
சொண்டுகளுடனே சண்டை போட்டிடும்
இளநரை போக்கிடும் வழுவழுப்பாக்கும்
இளைஞர்கள் இதனைக் கருத்தில் கொள்வீர்!
அழகு நிலையத் தலைமுடிக் கழுவல்
அழகாய்த் தோன்றிடும் சிலநாள் வரையில்
தொடர்ந்து செய்தால் துட்டும் விரயம்
இடர்ப்பாடாகும் ஏற்றிடா உடலால்!
துளசி இலைகளைத் தலையணையாக்கினால்
வெளியேறிடுமே ஈரும் பேனும்!
வெதுவெதுப்பான நீரில் குளித்தால்
அதுவே சுகமென உரைப்பார் வள்ளலார்
குளிக்கும் போதே உடலைத் தேய்த்து
எளிதாய் அழுக்கைப் போக்கிட வேண்டும்!
புளித்த தயிரும் பயத்தம் பொடியும்
எளிதாய்ச் சிகையைக் கழுவிடச் சிறந்தவை!
குளித்தபின் தலையை உலர்த்த துணியால்
அழுத்தமாய்த் தேய்த்தே உலர விடுக!
மின் உலர்த்தியினால் ஈர முடிகள்
தன்னிலை இழந்தே வேர்க்கால் தளரும்
மெல்ல மெல்ல முடிகள் உதிர்ந்திடும்
நல்ல கூந்தல் நார் போலாகும்!
நரை திரை என்பது மூப்பின் அறிகுறி
நரைத்த தலைக்கு நன்மதிப்பு உண்டு
கருப்பு மையைத் தலையில் பூசி
இருப்பதை இழந்து வருத்தப் படற்க!
ஒவ்வாமை நோய் தோலில் கண்ணில்
எவ்விடந்தனிலும் எரிச்சலை அளிக்கும்!

நெற்றி

சிறிய நெற்றி பெண்டிர்க்கு அழகு
அறிவார் நெற்றியில் அகலம் காணலாம்!
நெற்றியில் பொட்டு மகளிர்க்கு எழிலாம்
நெற்றியோ கறுத்திடும் இரசாயனப் போட்டால்!
உடைகளுக்கு ஏற்ற நிறத்தில் வடிவில்
கடைகளில் விற்கும் பொட்டும் கெடுதி
முகத்தைக் கழுவிடும் போதில் பொட்டு
நகர்ந்தே கண்ணுள் மாட்டிக்கொள்ளும்!

கண்

ஒளி இல்லையெனில் உலகு இருட்கோளம்
ஒளி வழியாக உலகைப் பார்த்திடக்

கண்கள் என்னும் உறுப்புகள் நமக்கு

எண்ணிலாப் பணிகளைச் செய்திடும் நாளும்!

கண்கள் மீன்போல் கவர்ச்சியாய்த் தோன்றிட

பெண்கள் தீட்டும் மையினில் கவனம்!

வண்ண வண்ணக் கண்ணாடிகளைக்

கண்ணில் அணிந்தால் எரிச்சல் கொடுக்கும்

பார்வைக் கோளாறு இருப்பதை மருத்துவர்

கூர்மையாய் அறிந்து தரும் கண்ணாடியை

அணிதல் நல்லது அதனால் குறைகள்

தணிந்திடும் பார்வை சீராய் அமையும்!

கண்புரை என்றால் கவலை வேண்டாம்

நுண்ணிய கருவிகள் பார்வைக்கு உதவிடும்!

மின்னல் வெட்டையும் தகிக்கும் கதிரையும்

துன்னிடும் சூரிய கிரகணம் இவற்றை

வெறும் கண்களினால் பார்ப்பது கெடுதி

மறவாமல் கருங்கண்ணாடி அணிக!

சென்னைக் கண்நோய் சிவந்திடும் விழிகள்

ஒன்றொன்றாகத் தொற்றிக் கொள்ளும்!

திரைப்படம் தொலைக்காட்சிகளை மிகவும்

அருகில் பார்த்தால் தலைவலி! கண்வலி!

வீட்டில் இருந்தே மருத்துவம் பார்த்தால்

வாட்டம் குறையும் கண்சீராகும்!

கண்களை தானம் செய்திட விரும்பல்

புண்ணியச் செயலாம் போற்றப்படுவீர்!


மூக்கு


மூக்கும் முழியும் இருந்தால் பெண்ணைத்

தூக்கிச் செல்லப் போட்டியில் நிற்பார்!

எடுப்பாய் நாசி இருந்திடில் பெண்ணைக்

கொடுக்க, கொள்ள, ஆசைப்படுவர்!

சின்னப் பிள்ளையாய் இருக்கும்போதே

உன்னிப்பாக உடலைப் பேணினால்

சளித் தொல்லைகள் இருமல் தும்மல்

விளைந்து விடாமல் காத்திட முடியும்!

பொது இடங்களிலே சிந்தல், துப்பல்

அதுவே குற்றம்! கிருமிகள் பெருகிடும்!

தும்மல் வந்தால் மூக்கைப் பொத்துக

விம்மி வெடித்தால் அடுத்தவர் வெறுப்பர்!

பீரங்கிக்குள் கரிமருந்ததனை

தாராளமாகச் செலுத்தல் போன்று

மூக்குப் பொடியை மூக்குத் துளைகளுள்

தாக்குதல் போன்றே திணித்திடுவார்கள்

ஊக்கம் வந்திடும் உற்சாகம் வரும்

தூக்கம் வராதெனச் செப்பிவிடுவார்கள்!

வாய்க்குள் விரலால் பற்களின் மீது

தேய்த்திடுவார்கள் மூக்குப் பொடியை

எப்படிப் பொடியைப் பயன்படுத்திடினும்

தப்பாமல் உடல் சீர்கேடடையும்!

விடியற் காலையில் மூக்கின் வழியாய்

நெடிய மூச்சும் சிறிய மூச்சும்

இழுத்தும் விட்டும் பயிற்சிகள் செய்தால்

பழுத்த வயதிலும் மூச்சு இறைக்காது!


காது


காதுகள் இன்றேல் கேட்கும் திறனிலை

காதணி விழாவால் செவிக்கும் பெருமை!

கண்டதை எல்லாம் காதில்விட்டுக்

கண்டபடியாய்க் குடைந்திட வேண்டா

காதில் தண்ணீர் புகுந்திடா வண்ணம்

தோதாய்க் குளித்துத் துண்டின் துணியைத்

திரியாய்ச் சுருட்டிக் காதினுள் விட்டால்

உறிஞ்சிடும் நீரை செவிக்கும் நல்லது!

ஒலிப்பெருக்கியின் ஒலியைக் குறைப்பீர்

செல்லிட பேசியில் தொடர்ந்து பேசற்க!


வாய்

வாயைச் சுத்தமாய் வைத்திடாவிட்டால்
நோயை அளிக்கும் கிருமிகள் பலவும்
உள்ளே தங்கிடும்; உறங்கி எழுந்ததும்
சுள்ளெனத் தேநீர் பருகிட வேண்டா
வாய் கொப்பளித்துப் பற்களைத் துலக்கி
நோய் வரா வண்ணம் எதையும் பருகுக!
புதினாக் கீரை வாய் நாற்றத்தை
இதமாய்ப் போக்கி மணத்திடச் செய்திடும்!

பற்கள்

செங்கல் தூளும் சாம்பலும் மணலும்
உங்கள் பற்களை உடைத்துப் போட்டிடும்
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
போலி விளம்பரம் பற்பொடி கெடுதி!
மிகச் சூடாக உண்டிட வேண்டா
மிகக் குளிர்வாகவும் பருகிட வேண்டா
முத்துப் போன்ற பற்களே உங்கள்
சொத்தெனக் கொள்வீர். ஈறுகள் வீங்கி
சொத்தைப் பற்கள் வருவதைத் தடுப்பீர்!
நித்தமும் இருமுறை பல்துலக்கிடுவீர்
பல்போனாலே சொல்போச்சு என்ற
சொல்லை மனதில் இருத்திடவேண்டும்!

உதடுகள்

சிவந்த இதழ்கள் சிந்திடும் புன்னகை
உவப்பை அளிக்கும் உள்ளம் கழிக்கும்
உதட்டுச் சாயம் அழகைக் கூட்டும்
அதுவே பெண்களின் பகையாய் மாறும்!
சீராய் நாளும் சாயம் பூசிடில்
நேராய் வந்திடும் மார்பகப் புற்றுநோய்!
வெண்குழல், சுருட்டு, பீடிகள் புகைத்தும்
புண்படுத்தாதீர் உதடுகள் தம்மை
கருப்பாய் உதடும் ஈரலும் மாறிடும்
இருமலும் சளியும் எளிதில் சேர்ந்திடும்
எலும்புருக்கி எனும் நோயது வந்தால்
பலவீனமாக உடல் இளைத்து உழலும்
புகையே பகையாம்; உடனிருப்போரும்
புகையால் துன்பம் அடைந்திடுவார்கள்!

நாக்கு

நாவைச் சுத்தமாய் வைத்திட வேண்டும்
பூவைப் போன்று வழித்திட வேண்டும்
நாக்கில் வசம்பைத் தேய்த்தால் குழந்தை
சீக்கிரமாகப் பேசிடும் என்பர்!
பொத்துப் போகும் சூடாய் உண்டால்
செத்துப் போகும் நாவின் சுவைத்திறன்!
சுவையே பெரிதெனச் சப்புக் கொட்டி
கவளம் கவளமாய் உள்ளே தள்ளினால்
பருத்திடும் தொந்தி சிறுத்திடும் உயரம்
விருப்புடன் நோய் வயிற்றுள்ளே விளைந்திடும்!
வேகா உணவை விழுங்கிட வேண்டா
நாகாக் கவென வள்ளுவர் உரைத்தார்
நல்லவை தீயவை என்றே பிரித்து
நல்ல உணவை நலமாய் உண்க!

நாளையும் தொடரும்...

கவிஞர் அரிமா.இளங்கண்ணன்

1 comment:

hayyram said...

gud post

regards
www.hayyram.blogspot.com