Monday, January 18, 2010

நீதான் நாட்டின் சொத்து!

'நம் இந்தியாவின் உண்மையான சொத்து எது?' என்ற கேள்வியை என் தந்தையார் வாசிக்க, சற்றே யோசித்த சித்தர், பின்னர் மெல்லிய புன்னகையோடு பேசத் தொடங்கினார்.

'இந்தக் கேள்வியைக் கேட்ட அன்பர் இந்தச் சபையில் இருப்பார் என்று நினைக்கிறேன்' என்றபோது 'ஆம் சாமி, நான் நாட்டரசன். இதோ இங்கே இருக்கிறேன்' என்று மகிழ்வோடு எழுந்து தன்னைச் சபைக்கு அறிமுகம் செய்து கொண்டார்.

சித்தர் பேசத் தொடங்கினார்...

"நம் இந்தியாவின் உண்மையான சொத்து செல்வம் எவை?. இயற்கை வளங்கள், ஜீவ நதிகள், பசுமைக்காடுகள், மக்கள்... எனச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனாலும் தேசபக்திதான் ஒரு நாட்டின் உண்மையான செல்வம் எனலாம்.''

"ஒரு உண்மைச் சம்பவத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நம் தேசப்பிதா காந்தியடிகள் சுதந்திர வேட்கையை மக்களுக்கு ஊட்டுவதற்காக, இந்தியா முழுவதும் பயணம் செய்தார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். அக்காலங்களில் நம் தமிழகத்திற்கு 21 முறைகள் வந்து சென்றதாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

செட்டி நாட்டுப் பகுதியில் காரைக்குடியில் ஒரு மாபெரும் கூட்டத்தில் பங்கேற்க அவர் வந்தபோது அவருக்கு பெரும் வரவேற்பு தரப்பட்டது. காந்தியடிகள் பேசுவதற்கு முன்பாக உள்ளூர்ப் பிரமுகர்கள் பலர் பேசி முடித்தார்கள்.

அப்போது மேடையில் இருந்த ஒருவர் எழுந்து உரை ஆற்றத் தொடங்கினார். அவரது அற்புதமான பேச்சைக் கேட்டவர்கள் வீர உணர்வு கொண்டவர்களாக 'வந்தே மாதரம், வந்தே மாதரம்', 'மகாத்மா காந்திக்கு ஜே' என்று முழக்கமிட்டார்கள்.

பேச்சாளரும், நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களின் வரலாறுகளை எடுத்துச் சொல்லி அவர்கள் வியாபாரம் செய்ய வந்தவர்களேயன்றி, நாட்டை ஆள வந்த கோமான்கள் இல்லை' என்று கர்ஜனை செய்தார். அவரது பேச்சைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த காந்தியடிகள், அவரைத் தம் அருகில் அழைத்து, 'ஐயா உங்களின் பேச்சில் வீரமும் விவேகமும் இருந்தது. வீரமற்றவர்களையும் மாவீரர்களாக மாற்றக்கூடிய ஆற்றல் உங்கள் சொல்லுக்கு உண்டு. ஆனால் ஆங்கிலேயர்களை இவ்வளவு கடுமையாகத் தாக்கிப் பேசுகிறீர்களே, உங்களுக்கு அச்சமில்லையா, நீங்கள் பெரிய செல்வந்தரா? உங்களின் சொத்து மதிப்பு எவ்வளவு?' என்று கேட்டாராம்.

அதற்கு அந்தப் பேச்சாளப் பெருமகனோ தம் சட்டைப் பையைத் துழாவி எடுத்து ஒரு பொருளைக் காந்தியடிகளிடம் காட்டினாராம். அந்தப் பொருள் 'பாரதமாதா' படம் போடப்பட்ட இந்திய வரைபடம். 'பாபுஜீ இதோ இதுவே என் முழுச் சொத்து' என்றாராம்.

அதைக்கண்டு நெகிழ்ந்துபோன காந்தியடிகள், 'ஆகா அற்புதம். இப்போது சொல்கிறேன் நீங்கள்தான் இந்தியாவின் சொத்து. உங்களைப் போன்றவர்களால்தான் இந்தியா சுதந்திரமடைய போகிறது' என்றாராம்.

அப்படிக் காந்தியடிகளால் பாராட்டப் பெற்றவர் யார் தெரியுமா? கன்னியாகுமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்த .ஜீவானந்தம் என்று அழைக்கப்படுகின்ற ஜீவாதான், இந்தியாவின் சொத்து எனக் காந்தியடிகளால் பாராட்டப் பெற்றவர் என சித்தர் சொல்லி முடிக்க, அங்கிருந்த மக்கள் எல்லோரும் "ஆகா ஆகா, எப்பேற்பட்ட மகான் ஜீவா. ஜீவா வாழ்க, காந்தி நாமம் வெல்க'' எனக் கோஷமிட்டனர்.

அப்போது மேடையில் இருந்த குழந்தைகள் காந்தியடிகளின் உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது காங்கிரஸ் தொண்டர்களுக்காக நாமக்கல் கவிஞர் பாடிய வழிநடைப் பாட்டை மிக அருமையாகப் பாடத்த தொடங்கினார்கள்.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேரலாம்
அண்டி ஒண்டி சண்டையிட்டு உயிர் பறித்தலின்றியே
மண்டிலத்தில் கண்டிராத சண்டை ஒன்று புதுமையே
குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசை இல்லதால் எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசை இல்லதால் காந்தி என்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வ மார்க்கமே?

என்று அந்தக் குழந்தைகள் பாடப்பாட அனைவரும் சேர்ந்து தாளம்போட்டு கூடவே பாடவும் தொடங்கினார்கள்.

"மெய்யன்பர்களே, பார்த்தீர்களா? உத்தமமான மகான்களின் பெயரையும் அவர்கள் குறித்த பாடல்களையும் கேட்டவுடன், மக்களின் மனமாகிய ஆனந்தக்கடலில் மகிழ்ச்சி அலைகள் ஓசையிடுவதைக் கேட்டீர்களா? இவைதான் நம் நாட்டின் சொத்து. மக்களின் ஒன்றிணைந்த மன எழுச்சிக்கு ஈடாக எதைச் சொல்ல முடியும்?'' என்று சித்தர் ஆனந்தமாகக் கேட்டார்.

ஆரவாரங்கள் ஓய்ந்த பின்னர், என் தந்தை அடுத்த கேள்வியை ஒலி பெருக்கியில் படிக்கத் தொடங்கினார்.

"சித்தர் பெருமான் அவர்களுக்குப் பணிவான வணக்கம். என் பெயர் மகுடபதி. சிவன் கோவில் தெரு. என் கேள்வி இதுதான். பாரம்பரியமான நம் முன்னோர்களின் குணம் நமக்கு வருவது இயற்கைதான். ஆனாலும் வளர்ப்பு முறையை வைத்துத் தானே அந்தக் குழந்தையின் குண நலன்கள் அமையும். 'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் தாயின் வளர்ப்பே குழந்தையின் எதிர்காலம்' என்று கூறுகிறார்களே, அது உண்மைதானா? பிறப்பா?, வளர்ப்பா? எது குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்?''

இந்தக் கேள்வியை என் தந்தை வாசித்து முடித்தவுடன் எங்கும் அமைதி நிலவியது. ஆங்காங்கே அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.

'அமைதி அமைதி' என்று என் தந்தை குரல் கொடுத்தபின் சித்தர் தொடங்கினார்.

"பேரன்பர்களே மிகச்சிறந்த கேள்வியை நம் மகுடபதி கேட்டுள்ளார். பிறப்பும் வளர்ப்பும் இரு கண்கள் போலத்தான். ஆனாலும் வளர்க்கும் முறைக்கு ஏற்பத்தான் குழந்தைகளின் குணநலன்கள் அமையும் என்பதற்கு ராம
கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதையை, நான் உங்களுக்கு இப்போது சொல்கிறேன் கேளுங்கள்.

காட்டிற்கு வேட்டையாடச் சென்ற வேடனொருவன் வேட்டை முடிந்து திரும்பும்போது ஒரு மரப்பொந்தில் கிளிக்குஞ்சுகள் இரண்டு தாயின்றித் தவிப்பதைக் கண்டு அவற்றை ஊருக்குள் விற்கலாம் என்று நினைத்து பிடித்து வந்தானாம்.

அப்படி அவன் கொண்டு வந்த கிளிக் குஞ்சுகளில் ஒன்றை வேத பாடசாலையில் வேதம் கற்கும் பிள்ளைகளிடத்தில் விற்றானாம். மற்றொரு கிளிக்குஞ்சை மற்றொரு தெருவில் ஆடுவெட்டி பிழைக்கும் கசாப்புக் கடைக்காரரிடத்தில் விற்றுச் சென்றானாம்.

ஓராண்டு கழித்து அதே வேடன் மீண்டும் ஊருக்குள் வந்தபோது, தான் வேதபாடசாலையில் விற்ற கிளி எவ்வாறு இருக்கிறது? எனப் பார்க்கப் போனானாம்.

அக்கிளிக்குஞ்சு நன்கு வளர்ந்து இருந்தது. 'சரசுவதி நமஸ்துப்பயம் வரதே காமரூபிணி வித்யாரம்பம்' என்று அழகாக மந்திரம் ஓதிக் கொண்டிருந்தாம். அதைக்கண்டு ஆச்சரியப்பட்ட வேடன் மற்றொரு கிளிக்குஞ்சைக் காண கசாப்புக்கடைக்குப் போக அங்கிருந்த கிளி, 'வெட்டு, குத்து, கொல்லு, குடலெடு' என்று சத்தம் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து மிரண்டு போய்விட்டானாம்'' என்று கதையை முடித்தார் சித்தர். பிறகு தொடர்ந்தார்.

"பார்த்தீர்களா ஒருதாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகளாக, குஞ்சுகளாக இருப்பினும் வளர்க்கப்படும் இடத்திற்கு ஏற்பவே அவற்றின் சொற்களும் குணங்களும் விளைகின்றன. எனவே பிறப்புப் போலவே வளர்ப்பும் மிக முக்கியம்'' எனச் சித்தர் முடித்தார்.

உடனே என் தந்தையும் நம் சித்தர்சாமி எத்தகைய அழகான கதையை நமக்குச் சொன்னார். எனக் கவனித்தீர்களா? பாரம்பரிய அறிவும் குழந்தைகளுக்கு இயல்பாக வரத்தான் செய்யும் என்பதனை நாலடியாரிலே ஒரு பாடல் மூலம் நமக்கு உணர்த்துகிறார்கள் சமண முனிவர்கள்.

நல்ல நிலத்தில் நெல் போட்டால் அந்நெல்லே விளைந்து வருவது உண்மைதான் என்பதுபோலத் தந்தையின் அறிவு மகனுக்கு நிச்சயம் வரும் என்பதை

செந்நெல்லால் ஆகிய செழுமுறை மற்றுமச்
செந்நெல்லே விளைதலால்- அந்நெல்
வயல்நிறை காக்கும் வளவய நூரா
மகன் அறிவு தந்தை யறிவு

என்று பாடி உள்ளார்கள் எனக் கூறினார் என் தந்தையார்.

அப்போது கூட்டத்தில் ஒருவர் ஆவேசமாக எழுந்து "எல்லாம் இறைவன் செயல் என்றால் இறைவன் ஏழைகளை ஏன் படைக்க வேண்டும்? அவர்களுக்கு மேலும் மேலும் ஏன் துன்பத்தைக் தரவேண்டும்'' என்று கோபமாகக் கேட்க, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

கு.ஞானசம்பந்தன்

1 comment:

Thinks Why Not said...

நல்லதொரு பதிவு....

அருமையான கருத்துக்கள்...

/*...எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசை இல்லதால்...*/

தற்காலத்தில் உணரப்பட வேண்டிய ஒன்று...