Wednesday, January 13, 2010

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாற்று சிறப்புகள்


சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபையின் கடைசி கூட்டம் நேற்றுடன் முடிந்தது. முதல்-அமைச்சர் கருணாநிதி பேசும்போது சட்டசபையின் வரலாற்று சிறப்புகளை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டினார்.

சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழக சட்டசபையின் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் இந்த கட்டிடத்தில் நடைபெறும் என்பதால் புனித ஜார்ஜ் கோட்டையில், கடந்த 5 நாட்களாக நடந்து வந்த கூட்டத்தொடர்தான் அங்கு நடைபெற்ற கடைசி கூட்டத்தொடர் ஆகும்.

தமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசியபிறகு இறுதியாக முதல்-அமைச்சர் கருணாநிதி இது குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

துணை முதல்-அமைச்சர் ஆளுநர் உரை குறித்தும், அதைத்தொடர்ந்து இந்த அவையில் பேசிய பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுடைய கருத்துகள் குறித்தும் நீண்டநேரம் தம்முடைய பதிலுரையிலே விளக்கம் அளித்திருக்கிறார். நான் இப்போது ஆளுநர் உரையினை பற்றியோ, அல்லது வர இருக்கின்ற பட்ஜெட் பற்றியோ வேறு பல நிலைமைகளை பற்றியோ பேச விரும்பவில்லை. நான் உட்பட நாம் எல்லாம் சேர்ந்து இந்த அவையிலே இருந்து வெளியேறப் போகிறோம்-நம்மை யாரும் வெளியேற்றாமலே நம்முடைய விருப்பப்படி வெளியேறப்போகிறோம். சிலபேர் வெளியேறுவதற்காக வந்து, அப்படி வெளியேறியவர்களையும் சேர்த்து அவர்களையும் அழைத்துக் கொண்டு நாம் வெளியேறப் போகிறோம். எங்கிருந்து?

சரித்திர கீர்த்திமிக்க இந்த சட்டசபை நடைபெறுகின்ற இந்த இடத்திலிருந்து வெளியேற போகிறோம். அடுத்துவரும் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர், புதிய சட்டமன்றப் பேரவையிலே நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். இங்கே நடைபெறும் இறுதி கூட்டத்தொடர் இது என்பதால் இந்த அவையினுடைய வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது இந்த நேரத்தில் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்!

டெல்லியிலே உள்ள செங்கோட்டை சக்கரவர்த்தி ஷாஜகானால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மொகலாயப் பேரரசின் மிகப்பெரிய சின்னம் என்பதைப்போல; சென்னை மாநகரத்திலே உள்ள இந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை, 16-ம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சின்னம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

1640-ல் புனித செயிண்ட் ஜார்ஜ் நினைவு தினமான ஏப்ரல் 23 அன்று, இந்த கோட்டை கட்டப்பட்டதால், இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது.

1678-ல் இக்கோட்டை வளாகத்தில் மிகத்தொன்மையான "புனித மேரி ஆலயம்'' கட்டப்பட்டது. அந்தப் பேராலயத்தில்தான் 1753-ல் இராபர்ட் கிளைவ் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

1687 முதல் 1692 வரை ஆளுநராக இருந்த "யேல்'' காலத்திலேதான், ஆசியாவிலேயே மிக உயரமான கோட்டை கொடிமரத்தில் கம்பெனி கொடிக்கு பதிலாக பிரிட்டிஷ் கொடி பறக்கவிடப்பட்டது.

1746-ல் பிரெஞ்சுக்காரர்களால் கோட்டையில் இருந்து வெளியே எடுத்துச்செல்லப்பட்டிருந்த கறுப்புப் படிகத்தாலான-கிரானைட் போன்ற படிகங்களால் ஆன 32 தூண்கள்; 1761-ல் மீண்டும் சென்னைக்கு எடுத்துவரப்பட்டு; அவற்றுள் 20 தூண்கள் இந்தக் கட்டிடத்திலே நிறுவப்பட்டு, இப்போதும் அவை இந்த கட்டடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. 1910-இல் அதாவது சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய சட்டமன்ற பேரவை கூட்ட மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது என்பதை எண்ணும்போது இதற்கும் ஒரு "நூற்றாண்டு விழா'' கொண்டாடலாம் போல் தெரிகிறது.

சென்னை மாகாண சட்டசபைக்கு 1920-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் திராவிட இயக்கத்தின் வேர்க் கட்சியான நீதிக்கட்சி வெற்றி பெற்று, ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதல்-அமைச்சர் ஆனார்.

சென்னை மாகாணத்திலேயே முதன் முதலாக 1920-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி சட்டமன்றத்தில் "முதல் பிரிமியர்'' என்ற முதலமைச்சர் பதவியைப்பெற்ற பெருமை நீதிக்கட்சிக்கும், அந்த கட்சியை சேர்ந்த சுப்பராயலு ரெட்டியாருக்கும்தான் சாரும்.

அப்பொழுது சட்டமன்றத்தை 12.1.1921 அன்று கன்னாட் கோமகன் தொடங்கி வைத்தார்.

அவ்வமயம், சென்னை மாகாண ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபு, அவரது துணைவியாரும் 6.3.1922 அன்று சட்டமன்றத்திற்கு வருகை தந்தார்கள். அப்போதுதான் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட சிறப்பான வேலைப்பாடுகள் நிறைந்த பேரவைத் தலைவருக்கான இந்த இருக்கையைப் பரிசாக அளித்தனர். அதுவே இன்றளவும், பேரவை தலைவரின் இருக்கையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த இருக்கையை அவர்கள் வழங்கியதற்கு என்ன காரணம் என்பதை ஆளுநர் வெலிங்டன் அவர்களே தன் உரையிலே அப்போது குறிப்பிட்டார். அதாவது அவருடைய தாத்தா "ஹவுஸ் ஆப் காமன்ஸ்'' அவையிலே ஸ்பீக்கராக இருந்தவர் என்றும், அவரது துணைவியாரின் தந்தையார் சிறந்த நாடாளுமன்ற வாதியாக இங்கிலாந்தில் திகழ்ந்தார் என்றும் பேசியிருக்கிறார்.

1920-ல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி, 1937 ஏப்ரல் வரை, ஏறத்தாழ 17 ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சியிலே இருந்தது. அந்த 17 ஆண்டுக்காலத்தில் நீதிக்கட்சியினுடைய ஆட்சி, இந்த நாட்டில் முதல் கம்யூனல் ஜி.ஓ., பெண்களுக்கு வாக்குரிமை உள்ளிட்ட சரித்திரம் மறவாத சாதனைகளை நிகழ்த்தி காட்டியது. நீதிக்கட்சி ஆட்சியில் சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர், பி.சுப்பராயன், பி.முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர், பி.டி.ராஜன் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தார்கள்.

1921-ம் ஆண்டு முதல் 1937-ம் ஆண்டு வரை இதே புனித ஜார்ஜ் கோட்டையிலே உள்ள மேலவை மண்டபத்திலே-கவுன்சில் ஹாலில் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்றது. இப்பொழுது இருக்கின்ற கவுன்சில்ஹால்-அங்கேதான் நடைபெற்றது.

1937-ல் நடைபெற்ற சென்னை மாகாண சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை வென்றபோதும், சில பிரச்சினைகள் காரணமாக அமைச்சரவை அமைக்கவில்லை. கவர்னரின் வேண்டுகோள்படி இடைக்கால ஏற்பாடாக 1.4.1937 அன்று கே.வி.ரெட்டி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.

ஒன்றரை மாதத்திற்குப்பின் அமைந்த காங்கிரஸ் அமைச்சரவை மூதறிஞர் ராஜாஜி தலைமையில் 14.7.1937 அன்று பதவியேற்றது. 1937-ம் ஆண்டில் சட்டமன்ற பேரவை முதன்முதலாக சேப்பாக்கத்திலே உள்ள சென்னை பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் பிரதான மண்டபத்தில்-செனட்ஹாலில்-தான் செயல்பட்டது 14-7-1937 முதல் 21-12-1937 வரை சுமார் ஐந்து மாதங்கள் சேப்பாக்கத்தில் உள்ள செனட் மண்டபத்திலே சட்டப்பேரவை நடைபெற்றிருக்கின்றது.

27-1-1938 முதல் 26-10-1939 வரை சுமார் 20 மாதங்கள் அரசினர் தோட்டத்திலே உள்ள ராஜாஜி மண்டபத்திலே பேரவை நடைபெற்றது. ராஜாஜி மண்டபத்தை நினைத்துப்பாருங்கள். பேரவையினை ஒருமுறை உற்றுப்பாருங்கள். இந்த பேரவை ராஜாஜி மண்டபத்திலே 20 மாதங்கள் நடைபெற்றிருக்கின்றன.

இரண்டாம் உலகப்போரில் இந்தியாவை ஈடுபடுத்திய ஆங்கிலேயருடைய அரசை கண்டித்து, ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை 30.10.1939-ல் ராஜினாமா செய்தது. அன்றுமுதல் 30.4.1946 வரை ஆளுநர் ஆட்சி நடைபெற்றது. தேர்தலே நடைபெறவில்லை.

1946-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வென்று, 30.4.1946 அன்று ஆந்திரகேசரி டி.பிரகாசம் தற்போதைய-தலைமைச் செயலக பிரதான மண்டபத்தில் பொறுப்பேற்றார். 24-5-1946 முதல் புனிதஜார்ஜ் கோட்டையிலே உள்ள இதே மண்டபத்தில் பேரவை நடைபெற்றது.

பிரகாசம் அமைச்சரவை 23.3.1947 அன்று பதவி விலகியது. அன்று பிற்பகலில் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஓமந்தூரார் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருந்த அந்த காலத்திலேதான்-15.8.1947-ல் இந்திய திருநாடு விடுதலை பெற்றது. முதல் சுதந்திரத் திருநாளை கொண்டாடிய முதல் முதல்-அமைச்சர் என்ற பெருமையை ஓமந்தூரார் பெற்றார். அவரது பெயரைத்தான் "கவர்ன்மென்ட் எஸ்டேட்'' என்றிருந்த பகுதிக்கு "ஓமந்தூரார் வளாகம்'' என்று நான் பெயர் சூட்டினேன் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

1950-ம் ஆண்டு இந்திய அரசமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. 1952 முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று அப்பொழுது மேலவை உறுப்பினரான ராஜாஜி தலைமையில் அமைச்சரவை அமைந்தது.

பேரவையின் உறுப்பினர்கள் 375 பேர் என்ற நிலையில் கோட்டையிலே இருந்த பேரவை மண்டபம் போதுமானதாக இருக்காது என்பதால், சென்னை அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற பேரவை மண்டபம் பத்து லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

1952-ம் ஆண்டு, அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற மண்டபம் கட்டப்பட்டு, அதனை 2.5.1952 அன்று ஆளுநர் ஸ்ரீபிரகாசா திறந்து வைத்தார். அதுவே பின்னர் பாலர் அரங்கமாகவும்; கழக ஆட்சியில் "கலைவாணர் அரங்க''மாகவும் பெயர் பெற்று விளங்கியது. 1957 தேர்தலுக்குப்பிறகு, மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டை பேரவை மண்டபத்தில் பேரவை கூட்டங்கள் நடைபெற தொடங்கி, இன்றுவரை 53 ஆண்டுகளாக இந்த மண்டபத்திலே பேரவைக்கூட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இடையில் 20-4-1959 முதல் 30-4-1959 வரை ஒன்பது நாட்கள் மட்டும் உதகமண்டலத்திலே உள்ள அரண்மூர் மாளிகையில் பேரவை நடைபெற்றுள்ளது. ஓமந்தூராருக்குப்பிறகு, பி.எஸ். குமாரசாமிராஜா, மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், பெரியவர் பக்தவத்சலம் ஆகியோர் இந்த கோட்டையிலே முதலமைச்சர்களாக இருந்து கொலு வீற்றிருந்திருக்கிறார்கள்.

1967-ல் அண்ணா முதல்-அமைச்சரானார். 1969-ல் அண்ணா மறைவுக்குப்பிறகு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நான் 1971, 1989, 1996, 2006-ம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக பதவி வகித்துள்ளேன். 11-3-1971 அன்று தி.மு.கழக அமைச்சரவை என் தலைமையில் பதவியேற்ற போது, சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற அந்த பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்த முக்கிய பார்வையாளர்களில் தந்தை பெரியாரும் ஒருவர். பதவியேற்ற பிறகு நாங்கள் அனைவரும் பெரியாரிடம் ஆசி பெற்று வாழ்த்து பெற்றோம்.

அதன் பின்னர் அருமை நண்பர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மையார், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்-அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த தமிழ்நாடு சட்டமன்றத்தில்-சரித்திரப்புகழ் வாய்ந்த தீர்மானங்கள், சட்டங்கள், முடிவுகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை நினைவுகூர்ந்திட விரும்புகிறேன்.

வாக்காளர் பட்டியலில் மகளிரும் இடம் பெற வழி செய்யும் தீர்மானம் 1-4-1921 அன்று நிறைவேறியது. அது நீதிக்கட்சி காலத்திலே நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

தாழ்த்தப்பட்டவர்களை "பஞ்சமர், பறையர்'' என்ற சொற்களால் குறிப்பிடுவது அரசு ஆவணங்களில் தவிர்க்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் 20-1-1922 அன்று நிறைவேறியது.

ஆலயங்கள் நுழைவுச்சட்டம் நிறைவேற்றப்பட்டதும் இந்த அவையிலே தான்.

8-10-1928 அன்று இந்த பேரவையில் ஒரு ஒத்திவைப்பு தீர்மானம்-சென்னை நகர காவல் துறையினர் பாரதியாரின் பாடல்கள் அடங்கிய புத்தகங்களை பறிமுதல் செய்த நடவடிக்கை பற்றிய ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை திரு.எஸ்.சத்தியமூர்த்தி ஐயர் கொண்டு வந்தார். பாரதியார் பாடல்கள் பற்றி ஒரு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் அதையொட்டிய கருத்துக்களை அவையில் தெரிவிக்கக் கூடாது என்று பேரவைத் தலைவர் கூறினார். விவாதம் ஏற்பட்டு பிரச்சினையை அடுத்த நாள் எடுத்துக்கொள்ளப்படும் என்று முடிவாயிற்று. அடுத்த நாள் இந்த பிரச்சினை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எஸ்.சத்தியமூர்த்தி அவர்கள் பாரதியாரின் பாடல்களை அவையிலே பாடி விளக்கமளித்து அந்த நூல்களை அபகரிப்பது தவறு என்று பேசி அந்தப் புரட்சியை செய்தார் என்பது அந்தக் காலத்தில் இந்த அவையின் வரலாறு.

ஆளுநரால் இந்த பேரவைக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. அடுத்து நியமிக்கப்பட்டவர் அலமேலு மங்கத்தாயாரம்மா.

3-11-1952-ல் கைத்தறிக்கென சில ரகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்ற தீர்மானம்.

29-7-1953 குலக்கல்வி முறையை அமலுக்கு கொண்டு வருவது பற்றிய தீர்மானம். அந்தக் கல்வி முறையை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருத்த தீர்மானம். வாக்கெடுப்பில் திருத்தத்திற்கு எதிராக 138 வாக்குகளும், எதிர்த்து 138 வாக்குகளும் கிடைத்து, பேரவைத்தலைவர் திருத்தத்திற்கு எதிராக அதாவது குலக்கல்வி திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் அந்த நேரத்தில் திருத்தம் தோல்வியடைந்தது. என்றாலுங்கூட, 18-5-1954-ல் குலக்கல்வி முறையை கைவிடுவதென எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்றில்லாமல் எது நியாயம் என்பதை எண்ணிப்பார்த்து தமிழகத்திலே எழுந்த புரட்சியின் காரணமாக மக்களின் கொந்தளிப்பின் காரணமாக அதைத்திரும்ப பெற்றார்கள்-குலக்கல்வி திட்டத்தை - அதுவும் இந்த அவையின் வரலாற்று சான்றாக பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஏன் இந்த அவையின் வரலாற்றை சற்றுப்பின்னோக்கி திரும்பிப்பாருங்கள் என்று சொன்னேன் என்றால் இந்த அவையிலே எத்தனையோ இது போன்ற எத்தனையோ தீர்மானங்களும், சட்டங்களும், முடிவுகளும் இந்த அவையில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அனைத்தையும் நான் இப்போது பட்டியலிட நேரம் போதாது. இந்த முடிவுகள் எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்காக சிந்தித்து செயல்பட்டு, எடுக்கப்பட்ட முடிவுகள். ஆனால் எல்லாமுடிவுகளும்-நான் இங்கே குறிப்பிட்டேனே, அதைப்போல-138-138 என்ற நிலையிலே இருந்தாலுங்கூட மக்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளித்து அதற்கேற்ப சட்டங்களை வகுப்பது-ஆட்சியை நடத்துவது என்ற முறை அன்றைக்கு இருந்தது. அது இன்றைக்கும் இருக்க வேண்டுமென்ற முனைப்போடு தான் இந்த ஆட்சிப்பொறுப்பிலே நாங்கள் அமர்ந்திருக்கிறோம்.

இன்றையதினம் எதிர்க்கட்சித்தலைவர் சில கருத்துக்களை இங்கே எடுத்துக்கூறினார். அவைகளுக்கெல்லாம் நான் பதில் அளித்தால்-இந்த சட்டமன்றத்தை பற்றியும், புதிய வீட்டுக்கு நாம் குடி போவது பற்றியும் பேசுவதாக சொல்லிவிட்டு-மீண்டும் எங்கேயோ செல்வதாக நீங்கள் கருதக்கூடும். எனவே தான் அவைகளைபற்றியெல்லாம் நான் இங்கே பேச விரும்பவில்லை. துணை முதல்-அமைச்சர் அதற்கெல்லாம் விளக்கமாக பதில் அளித்திருக்கிறார். இடையிடையே அமைச்சர்கள் குறுக்கிட்டு விளக்கங்களை அளித்திருக்கிறார்கள்.

ஆனால் ஒன்று. ஒரு கருத்தை சொன்னால், அந்த கருத்தின்பால் எத்தகைய எதிரொலி ஏற்படும், எத்தகைய நிலைமைகள் உருவாகும், ஆகவே அந்த கருத்துக்களை சொல்லாமல் இருப்பது நல்லதல்லவா என்றெல்லாம் எண்ணிப்பார்த்து அந்த கருத்துக்களை சொல்வது தான் சிலாக்கியமானது என்பதை உணர்ந்து நான் அறிந்த வரையில் என்னுடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகிறேன்.

அதைத்தான் இந்த சட்டமன்ற பேரவையிலும் கடைப்பிடித்து வருகின்றேன். இந்த சட்டமன்ற பேரவையிலே எத்தனையோ நல்ல நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் நடைபெற்றிருக்கின்றன. அவை என்னென்ன என்பதைப்பற்றி குறித்துப்பேசி மறுபடியும் அதே நிகழ்ச்சியின் தொடர்ச்சியை இங்கே நான் ஏற்படுத்த விரும்பவில்லை. அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் மறந்து விட்டு-நாம் குடிசெல்கின்ற புதிய இடத்திலாவது அந்த நிலை இல்லாமல் நாட்டைப்பற்றிய நினைவு-மக்களை பற்றிய நினைவு-இவைகளோடு நம்முடைய பணியினை அங்கே தொடங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

நன்றி தினத்தந்தி

No comments: