Tuesday, January 12, 2010

இந்திய இளைஞர்களே, ஒன்று சேருங்கள்!

'நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள்; இந்த தேசத்தையே மாற்றிக் காட்டுகிறேன்' - சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற இந்த சொற்தொடர், இந்திய இளைஞர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு அறிவித்தது.

நம் நாட்டு இளைஞர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. கடும் குளிர், மிகுந்த வெப்பம் என எந்த சூழ்நிலையிலும் பணிபுரியும் திறமை வாய்ந்தவர்கள். உடல் ஆற்றலும், அறிவாற்றலும் சம வீதத்தில் பெற்றவர்கள். அதனால்தான் உலகின் பல முன்னோடி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளை தங்களுடைய சிறப்பான தகுதியால் இன்று அலங்கரித்து வருகின்றனர். இதன் காரணமாகவே இன்று உலக நாடுகள் எல்லாம் இந்தியாவைப் பார்த்து பயப்படுகின்றன. வருங்காலம் 'இந்தியாவின் காலம்' என ஒப்புக்கொண்டுள்ளன.

வளர்ந்த நாடுகள் வயதானவர்களின் தேசங்களாக மாறி வருகின்றன. அங்குள்ள இளைஞர்கள்களின் சராசரி வயது 37. ஆனால், நம்நாட்டிலோ 25 கோடி இளைஞர்களின் சராசரி வயது 24.60 சதவீத இளைஞர்கள் 30 வயதுக்குள் உள்ளனர். சுமார் 2 கோடி பேர் 12 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள்.

இவர்கள் அனைவரும் தங்கள் ரோல் மாடலாக பலரை நினைத்துக் கொள்கின்றனர். அவரைப் போல வர வேண்டும், இவரை போல வர வேண்டும் என்று கனவு காண்கின்றனர். அது தவறில்லை. ஆனால், 'ஒருவரைப் பின்பற்றும்போது முழுக்க முழுக்க அவராகவே மாறிவிடக்கூடாது. மாறாக, நல்ல குணங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்' என்று அழுத்தமாகச் சொல்லும் விவேகானந்தரின் கருத்தை என்றுமே மறக்கக் கூடாது. 'ஒரு விதையை நிலத்தில் போடுகிறோம். அதன் வளர்ச்சிக்குத் தேவையான எரு, தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். ஆனால் எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல், தனக்கு வேண்டியதை மட்டுமே விதை எடுத்துக் கொள்கிறது. பிரம்மாண்டமான மரமாகவும் வளர்கிறது. அதுபோலவே, அனைவரது வாழ்க்கையிலிருந்தும், அனுபவத்திலிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும். அளவற்ற தன்னம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டும். நான் இளமையில் அத்தகைய நம்பிக்கையும் இருக்கும் காலத்தில் தான் எதிர்கால லட்சியத்தை அடைய முடியும்' என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறார் அவர்.

விவேகானந்தர், 1863ம் ஆண்டு ஜனவரி 12 அன்று கொல்கத்தாவில் பிறந்தார். அவருடைய பிறந்த நாளைதான் 'தேசிய இளைஞர் தின'மாக கடந்த 25 வருடங்களாக கொண்டாடி வருகிறோம். இளைஞர்களின் திறமையும் ஆழமான நம்பிக்கையும்தான் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுகிறது. கனவு எதுவாக இருந்தாலும் அது சாத்தியமில்லாதது என்று ஒதுக்கக் கூடாது. சாத்தியமில்லாதது எதுவும் இல்லை. இவையும் தேசிய இளைஞர் தினத்தின் அஜெண்டாவில் அடக்கம்!

திருச்சி கார்த்தி
நன்றி: வசந்தம்

No comments: