Saturday, January 9, 2010

பக்தியால் பலன் உண்டா?

நாங்கள் 'அண்ணாவின் ஆசை' எனும் எங்கள் நாடகத்தை முடித்துவிட்டு, விரைவாக ஓடிவந்து மேடையில் சித்தர்பெருமான் அருகில் அமர்ந்து அவரது பேச்சைக் கேட்கத் தயாரானோம்.

சித்தர்பெருமான் தம் புன்னகை மிளிரும் முகத்தோடு, மென்மையான குரலில், 'மெய்யன்பர்களே... அனை வருக்கும் நல்வாழ்த்துக்கள்...' எனத் தொடங்கினார்.

"சில மணித்துளிகளுக்கு முன் நம் பாலர் சபையைச் சார்ந்த குழந்தைகள் அருமையான நாடகத்தைக் குறுகிய நேரத்திற்குள் நமக்கு நடத்திக் காட்டினார்கள். நாடகம் என்பது நடிப்பும், பாட்டும் என்பதற்கு ஏற்றபடி இயல்பாக நடித்துக் காட்டி, குறள் நெறிக்குத் தகுந்தபடி வாழ்ந்த சான்றோரின் வாழ்க்கைச் செய்திகளை நமக்குத் தந்தார்கள்.

அவர்களுக்கு நம் முதல் வாழ்த்துகள். நேற்றைய கூட்டத்தைக் காட்டிலும் அதிகமான அளவில் மக்கள் இங்கே வருகை தந்துள்ளீர்கள். அனைவருக்கும் என் அன்பான வரவேற்பு. இன்றைக்கு அதிகமான கேள்விகளையும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.'' எனச்சொல்லி சற்றே நிறுத்திய சித்தர் மீண்டும் தொடங்கினார்.

"நண்பர்களே, இன்றைக்குக் காலையிலே என்னை வந்து பார்த்த ஒரு அன்பர், இறைவனுடைய திருநாமத்தை நாம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா? அப்படிச் சொல்வதனால் என்ன லாபம்?'' என்று கேட்டார்.

அவர் கேட்பதிலும் நியாயம் இருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. இந்தக் கலியுகத்திலே வாழும் மக்கள் எந்தச் செயலைச் செய்தாலும் ஏன் செய்ய வேண்டும்? என்ற கேள்வியையும், செய்வதானால் என்ன பயன்? எனும் சந்தேகத்தையும் நம்முன் வைக்கிறார்கள்.

இப்படித் தெரிந்து கொள்வது நல்லதுதான். ஒரு பாடலைப் பாடினால்கூட, அந்தப் பாடலில் பொருள் தெரிந்து பாட வேண்டும் என திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் தெளிவாகச் சொல்கிறார். 'சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்' என்பது அவரது கூற்று.

சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாளாகிய நம் ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை. முப்பது பாடல்களையும் பாடினால் என்ன பயன்? என்று ஒருவர் கேட்டாராம். அக்கேள்விக்கும் ஒரு பாடலிலேயே பதிலைச் சொல்லியிருக்கிறார்கள் நம் புலவர்கள். மார்கழி மாதத்தில் ஆண்டாளின் திருப்பாவையை நாம் பாடினால், அத்திருப்பாவை,

"பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும் வேதங்கள் அனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானுடரை வையம் சுமப்பது வம்பு''

எனப்பாடி உள்ளனர்'' என்று சித்தர்பெருமான் சொல்லி, அந்தப் பாடலை இசையோடு பாடினார்.

சித்தர் தொடர்ந்தார், சான்றோர்களே, நாம் மீண்டும் அதே கேள்விக்கு வருவோம். "முருகா... முருகா...'' என்றோ, "நாராயணா'' என்றோ, "இயேசு பெருமானே'' என்றோ, "அல்லா'' என்றோ பக்தியுடைய அடியார்கள் சொல்வதனால் பயன்தான் என்ன? எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

பாற்கடலிலே பள்ளி கொண்டிருக்கக் கூடிய மகா விஷ்ணுவாகிய நாராயணனை எப்போதும் மனதில் நினைந்து, "நாராயணா... நாராயணா...'' என வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பவர் யார் தெரியுமா? எனச் சித்தர் கேட்க; "நாரத மகரிஷி'' என்று நாங்கள் சத்தமாகச் சொன்னோம்.

"அருமை குழந்தைகளே, அந்த நாரத முனிவருக்கு ஒருநாள் ஒரு பெரிய சந்தேகம் ஏற்பட்டதாம். நாம் ஒரு நாளைக்கு நூறு தடவைக்கு மேலே நாராயணா, நாராயணா எனச் சொல்லிக் கொண்டிருக்கிறோமே இதனால் என்ன பயன்? என யோசித்தவர், நேரடியாக அந்த நாராயணன் முன்சென்று சுவாமி தங்களின் திருப்பெயரை நான் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதனால் ஏதாவது பலன் இருக்கிறதா? எனப் பணிவோடு கேட்டாராம்.

அதைக்கேட்ட மகாவிஷ்ணுவாகிய நாராயணன், 'நாரதா இப்போதாவது கேட்டாயே? நல்லது. நீ உடனடியாகப் பூலோகம் செல். அங்கே ஒரு பதினாறு அடி வேங்கைப்புலி ஒன்று மனிதர்களை வேட்டையாடித் தின்று வருகிறதாம். நீ அந்தப் புலியிடத்தில் சென்று, நீ சொல்லும் நாராயண மந்திரத்தைச் அதன் காதில் சொல்லிப்பார்' என்றாராம்.

நான் தங்கள் பெயரைச் சொல்லப் போனால் என்னை அடித்து அது சாப்பிட்டுவிடாதா? எனப் பயத்தோடு கேட்டாராம் நாரதர். 'கலங்காதே, நான் இருக்கிறேன். துணிவோடு செல். உன் கேள்விக்கு விடை உண்டு' என அவர் சொல்ல நாரதரும் பூலோகம் வந்து அந்தப்புலி உறங்கும்வரை காத்திருந்து அதன் காதில் "ஓம் நமோ நாராயணா'' என்று சொல்ல, அந்தப்புலி சடாரென்று எழுந்து ஒரு உறுமு உறுமிவிட்டு அப்படியே கீழே விழுந்து செத்துப் போனதாம்.

இதைப் பார்த்த நாரதர், அரண்டுபோய், வேகமாக வைகுண்டம் வந்து 'நாராயணா, நாராயணா என்ன பயங்கரம், உங்கள் பெயரை நான் அப்புலியின் காதில் சொல்ல அது அப்படியே விழுந்து இறந்து போனதே' என்றாராம் பயத்தோடு.

உடனே நாராயணரும், 'சரி நீ மீண்டும் பூலோகம் சென்று கங்கை நதி ஓரத்தில் தன் கன்றோடு மேய்ந்து வரும் காராம்பசுவின் காதில் என் பெயரைச் சொல்' என்றாராம். 'சாமி ஏற்கனவே உங்கள் பெயரைச் சொல்லி அந்தப்புலி செத்துவிட்டது. இந்தப்பசு காதில் நான் உங்கள் பெயரை சொல்ல ஏதாவது ஆகிவிட்டால்..' எனத் தயங்கி நிற்க, 'பயப்படாதே நாரதா. துணிந்து சொல்' என்றாராம் நாராயணர்.

நாரதரும் விரைவாகப் பூலோகம் வந்து அங்கே புல் மேய்ந்து கொண்டிருந்த காராம்பசுவின் காதில் 'ஓம் நமோ நாராயணா' எனச் சொல்ல, அந்தப் பசுவும் தடாலென விழுந்து செத்ததாம். நாரதர் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்து நாராயணா, இதென்ன கொடுமை அந்தப் பசுவும் இறந்துவிட்டது, என நாராயணரிடம் சொல்லியிருக்கிறார்.

சற்று யோசித்த நாராயணர் சரி இப்போது பூலோகத்தில் 'நீ காசி மாநகருக்குச் செல். அங்கே காசி நகரத்தை ஆளும் மன்னனுக்கு வெகு நாட்களாகக் குழந்தை இல்லாமல், இருந்து இப்போது ஆண் குழந்தை பிறக்கப்போகிறது. அக்குழந்தையைத் தங்கத்தட்டில் தாங்கி வருவார்கள். அதன் காதில் போய் என் பெயரைச் சொல்' என்றாராம்.

நாரதரோ நடுநடுங்கிப்போய் 'நாராயணா, நன்றாக யோசியுங்கள். புலியும், பசுவும் விலங்குகள். இதுவோ மன்னரின் குழந்தை எதிர்கால ராஜா, நான் என்ன செய்யட்டும்' என்று சங்கடத்தோடு கேட்க 'பரவாயில்லை போ. யாமிருக்கிறோம்' என மகாவிஷ்ணு சொல்ல நாரதமுனி, காசி மாநகருக்கு வந்து மன்னரின் அந்தப்புரத்தை அடைந்த தங்கத்தட்டில் பட்டுமெத்தையில் படுத்திருந்த அந்தக் குழந்தையிடம் சென்று 'ஓம் நமோ...' எனத் தொடங்க அந்தக்குழந்தை ஆச்சரியமாகப் பேசத் தொடங்கியதாம்,

'நாரதரே அப்படியே நிறுத்தும். நான் எனது முற்பிறவியில் ஆட்களை அடித்துக் கொல்லும் கண்டோர் நடுங்கும் ஆட்கொல்லிப் புலியாய்த் திகழ்ந்தேன். நீங்கள் அப்போது என் காதில் நாராயண மந்திரத்தைச் சொன்னீர்கள். மறுபிறவியில் அனைவரும் வணங்கத்தக்க காராம் பசுவாகப் பிறந்தேன். அப்போது ஒருநாள் நீங்கள் மீண்டும் என் காதில் நாராயண மந்திரத்தைச் சொன்னீர்கள். இதோ அரிய பிறவியாகிய மானுடப்பிறவி பெற்று அரசனின் மகனாகத் தங்கத்தாம்பாளத்தில் பிறந்துள்ளேன். நாராயண மந்திரம் பிறவிகளை உயர்த்தும் தன்மை கொண்டது. இதற்கு நீங்களும் நானுமே எடுத்துக்காட்டு'' என அக்குழந்தை சொன்னதாம்.

நாரதருக்கு அப்போது எல்லாம் விளங்கிற்று. 'ஆகா, நாராயண மந்திரம் இத்தகைய உயர்வுடையதா? இனி எப்போதும் இதனைச் சொல்லியபடியே வாழ்வேன்' என்று நாராயணரை வணங்கச் சென்றாராம்.

மெய்யன்பர்களே, இப்படி இறைவனின் பெயரை எப்போதும் எந்த இடத்திலும் சொல்லச் சொல்லப் பயன் கிடைக்கும்'' எனச் சித்தர் சொல்லி முடிக்க எல்லோரும் மகிழ்வோடு கைதட்டினார்கள்.

அப்போது என் தந்தை ஒலிபெருக்கி முன் சென்று, "பெரியோர்களே சித்தர் பெருமான் சொன்ன அற்புதக் கதையைக் கேட்டு மகிழ்ந்தோம். இனி கேள்வி நேரம். இதோ நம் அன்பர்கள் உங்களிடம் வருகிறார்கள். நீங்கள் வினாக்களை எழுதித்தரலாம்'' எனச் சொல்ல அந்த இடைவெளியில் குழந்தைகளாக கவுசல்யாவும், வத்சலாவும் ஓர் இனிய பாடலைப் பாடினார்கள்.

கேள்விகள் வரத்தொடங்கியதும் என் தந்தை சித்தரின் அனுமதியோடு, கேள்விகளை வாசிக்கத் தொடங்கினார்.

"சாமி, என் பெயர் நாட்டரசன். நேதாஜி வீதியில் வசிக்கிறேன். நம் இந்தியாவின் உண்மையான சொத்து என்று எதனைச் சொல்வீர்கள்?'' என்ற முதல் கேள்வியை என் தந்தை வாசிக்க, சித்தர் மகிழ்வோடு பதில் கூறத் தயாரானார்.

கு.ஞானசம்பந்தன்

1 comment:

hamaragana said...

அன்பு நண்பரே வணக்கம் தங்களின் இந்த பதிவு படித்தேன் மிக எளிமையான நடை அபாரமான கருத்துக்கள் ...திருநாவுக்கரசர் தனது பாடல்களில் நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.... மந்திர உச்சாடனங்கள் நமது பிறவி கடலை அறுக்கும்
தங்களின் இடுகைக்கு மிக்க நன்றி ...