Tuesday, January 5, 2010

உலகம் உருகுதே என்ற கவலை அதிகம் இந்தியர்களுக்கு தான்


லக வெப்பமயமாதல் குறித்து அதிகமாகக் கவலைப்படுகிறவர்கள் இந்தியர்கள்தான் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பிரபல ஆய்வு நிறுவனம் ஒன்று கடந்த அக்டோபரில், உலக வெப்பமயமாதல் குறித்து ஆன்லைனில் 54 நாடுகளில் உள்ள மக்களிடம் ஆய்வு நடத்தியது. அதில் பதிவு செய்யப்பட்ட வகையில், இந்தியர்கள் தான் அதிகமாகக் கவலைபடுகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது;

உலக வெப்பமயமாதல் குறித்து 54 சதவித இந்தியர்கள் தங்கள் கவலையைத் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில் 53 சதவீதம் பேர் கவலை தெரிவித்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர், இது குறித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்கின்றனர். அதாவது 37 சதவீதம் பேர், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கார்பனை தடை செய்வது மத்திய அரசின் கடமை என்று கூறியுள்ளனர்.

சுற்றுச்சூழலுக்கு இணக்கமான பொருட்கள் அதாவது, குறைவான புகை வெளியிடும் கார்கள் மற்றும் எரிபொருள் சக்தி இவை பற்றிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று 28 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிக மின்சாரம் சாப்பிடும் பல்புகள், எலெக்ட்ரிக் பொருட்கள் போன்றவற்றை கைகழுவி விட்டு, அதற்கு மாற்றாக குறைவாக மின்சாரம் சாப்பிடும் எலெக்ட்ரிக் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று 10 இந்தியர்களில் மூன்று பேர் சொல்லியிருக்கின்றனர்.

கழிவுகளிலிருந்து மறுசுழற்சி முறை மூலம் மின்சாரம் தயாரித்தால் வெப்பத்தைக் குறைக்கலாம் என்று கால்வாசி பேர் கருதுகின்றனர்.

பொதுப் போக்குவரத்து முறையை அரசு மேம்படுத்த வேண்டும் என்று 23 சதவீதம் பெரும், சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக நடக்கும் தனிநபர்களுக்கு வரி விலக்கு, மானியம் இவற்றை அரசு அறிவிக்க வேண்டும் 22 சதவீதம் பெரும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கபட்டுள்ளது.

ஆனால், கடந்த ஆண்டில் உலகளவில் 41 சதவீதம் பேர், உலக வெப்பமயம் குறித்து கவலை தெரிவித்தனர். இந்த ஆண்டில் 37 சதவீதம் பேர் தான் கவலை தெரிவித்துள்ளனர்.



No comments: