Saturday, January 2, 2010

அண்ணாவின் ஆசை!

ங்கள் நண்பன் குண்டுக் கருப்பையா பண்டித ஜவகர்லால் நேருவை பற்றிக் கூறுமாறு சித்தரிடத்தில் கேட்க, அவரும் "குழந்தைகளே பண்டித நேரு பற்றிய செய்திகள் ஏராளமாக உள்ளன. நேரம் கருதி உங்களுக்காக ஒரு நிகழ்ச்சியை மட்டும் சொல்கிறேன்''.

ரஷ்ய நாட்டில் இருந்து 'ஸ்புட்னிக்' என்ற ஒரு விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பினார்கள். அந்த ராக்கெட்டில் ஏறி உலகைச் சுற்றிவந்த முதல் மனிதர் பெயர் தெரியுமா?' எனக் கேட்டார் சித்தர்.

'யூரி காகரின்' என்று சத்தமாகச் சொன்னான் குச்சிராசு.

எங்களுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. இதென்ன மாயமந்திர வேலையாக இருக்கிறது? கேள்வி கேட்காத குண்டுக்கருப்பையா கேள்வி கேட்கிறான். 'ரெயில் நம்ம நாட்டுக்கு வர்றதுக்கு முந்தி இந்த ரயில்வண்டிப் பூச்சிக்கு என்ன பெயர்?' என்று கேள்வி கேட்டு எங்களை குழப்பிக் கொண்டிருந்த குச்சிராசு, யாரும் சொல்ல முடியாத கேள்விக்கு விடை சொல்கிறான். எல்லாம் சித்தருடைய மகிமையா? என வியந்தோம்.

"அருமை.. அந்த விண்வெளி வீரர் யூரிகாகரின், பூமியைச் சுற்றிவிட்டு கீழே இறங்கியபோது அவரைப் பலரும் பாராட்டி மகிழ்ந்தனர். அப்போது நம் பாரதப் பிரதமரான பண்டித நேரு அவர்களும் அங்கே இருந்தாராம். அவர் யூரிகாகரினை நெருங்கிக் கைகொடுத்துப் பாராட்டிவிட்டு 'மிஸ்டர் காகரின், பூமிக்கு அப்பால் இருந்து பூமியைப் பார்த்த முதல் மனிதர் நீங்கள்தான். அப்படி நீங்கள் பார்த்தபோது பூமியில் எங்கள் இந்தியா எப்படி இருந்தது?' என்று ஆர்வமாகக் கேட்டாராம்.

அவரது கேள்வியால் சற்றே திகைத்துப்போன காகரின் உடனே சொன்னாராம், 'நான் பூமிக்கு அப்பால் இருந்து பார்த்தபோது உங்கள் இந்தியா எப்படி இருந்தது தெரியுமா, இமயமலை பூமியின் இதயத்தைப் போலவும், உங்கள் நாட்டின் ஜீவநதிகள் ரத்தநாளங்களைப் போலவும், பூமி என்ற உடலுக்கு உயிராகக் காட்சியளித்தது உங்கள் இந்தியா!' எனக் கவிதை நயத்தோடு கூற, நேரு அவர்கள் அந்த வீரரை அப்படியே அன்போடு அணைத்துக் கொண்டாராம்'' எனச் சித்தர் சொல்ல நாங்கள் மகிழ்வோடு கேட்டுக் கொண்டிருந்தோம்.

அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர், மெதுவாக எழுந்து சித்தரைப் பார்த்துக் கும்பிட்டு, "சாமி இந்த பூமியை முதல்ல சுத்தி வந்தது யாரு தெரியுமா? நம்ப முருகப் பெருமான்தான் சாமி. ஞானப்பழத்தைப் பெற அவருதானே மயில்ல உலகத்தைக் சுத்திவந்தாரு?'' என்று கேட்க 'ஆமாம், ஆமாம்' என்று கத்தினோம்.

பிறகு நேரமாகி விட்டதால் நாங்கள் நாடக ஒத்திகை பார்க்கப் புறப்பட்டோம்.

அன்று மாலை சித்தர் பெருமான் பேசும் மேடையில் எங்கள் நாடகம் நடப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் விரைவாகச் செய்யத் தொடங்கினோம். கூட்டம் முதல் நாளைக் காட்டிலும் மிக அதிகமாக இருந்தது. எங்கள் நாடகத்தைப் பார்க்கத்தான் அவ்வளவு கூட்டம் என்று நாங்களாகப் பேசிக் கொண்டோம்.

எங்கள் நாடகத்தைப் பார்ப்பதற்காகவே சித்தரும் முன்னதாகவே புறப்பட்டு மேடைக்கு முன்னே வந்து அமர்ந்துவிட்டார். மேடையில் முதல் மணி அடித்தவுடன், திருக்குறள் குமரேசனாரின் குரல் கணீரென ஒலிக்கத் தொடங்கியது.

'சான்றோர்களே! நாடக ரசிகப் பெருமக்களே! இதோ நம் 'பாலர்' குழுவினரின் 'அண்ணாவின் ஆசை' எனும் குறுநாடகம் இப்போது நடைபெற இருக்கிறது. பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் நடந்த நிகழ்ச்சி கண்டு மகிழுங்கள்...' என அவர் கூறி முடிக்கத் திரை விலகியது.

நம் தமிழகத்தின் ஒப்பற்ற முதல்வர் பேரறிஞர் அண்ணா உடல்நலக் குறைவால் அமெரிக்க நாட்டின் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலை... அப்போது காட்சி தொடர்கிறது...

(அண்ணா அவர்கள் மருத்துவமனையின் படுக்கையில் படுத்தபடி, தன்னைத் துன்புறுத்தும் நோயோடு போராடிக்கொண்டு ஒரு புத்தகத்தைப் படித்தவாறு இருக்கிறார். அப்போது அவருக்கு வைத்தியம் செய்யும் டாக்டர் மில்லர் வருகிறார்...)

டாக்டர்: அண்ணா நாளைக் காலை உங்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப் போகிறோம், ஒன்றும் பயமில்லையே!

அண்ணா: நன்றி டாக்டர்! ஒரே ஒரு வேண்டுகோள் எனக்குச் செய்யும் அறுவைச் சிகிச்சையை இரண்டு நாட்கள் கழித்து வைத்துக் கொள்ளலாமா?

டாக்டர்: ஏன் அண்ணா, ஏதேனும் முக்கிய அலுவல்கள் இருக்கிறதா?

அண்ணா: இல்லை டாக்டர். நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் சில பகுதிகள் படிக்க வேண்டி உள்ளது. அறுவைச் சிகிச்சை குறித்த பயமோ, மரணம் குறித்த அச்சமோ, மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையோ எனக்கு இல்லை. இருந்தாலும் இன்னும் இரண்டு நாட்கள் எனக்கு கிடைத்தால் இந்த அரிய நூல் முழுவதையும் படித்துவிடுவேன். படிக்க வேண்டும் என்பதே என் ஆசை...

டாக்டர்: என்ன ஆச்சரியம், உயிருக்கு ஆபத்தான அறுவைச் சிகிச்சை நடக்கும் வேளையிலும் படிப்பைத் தொடர நினைக்கும் நீங்கள் ஒப்பற்ற மனிதர். நீங்கள் சொன்னபடி, இரண்டு நாட்கள் கழித்து ஆபரேசனை வைத்துக் கொள்வோம். நீங்கள் தொடர்ந்து மருந்து சாப்பிடுங்கள்.

(டாக்டர் வியப்போடு செல்லி முடிக்க) அந்தக் காட்சியின் முடிவாக, விளக்குகள் மங்க, மீண்டும் குமரேசனார் குரல் ஒலிக்கத் தொடங்கியது...

"யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு''

"அதாவது கல்வி கற்ற ஒருவனுக்கு, எந்த ஊரும் தன் சொந்த ஊர் போலத்தான், எந்த நாடும் சொந்த நாடுதான். அதனால் சாகும் வரையில் ஒருவன் கல்விகற்காமல் காலம் கழிப்பது எதனால்? மரணம் நம்மைத் தொடும்வரையில் தொடரும் வரையில் படிப்பதைத் தொடர்வோம். இப்போது நாடகம் தொடர்கிறது...'' என்று குமரேசனார் கம்பீரமாகக் கூற, நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் ஆரவரமாகக் கைதட்டினார்கள்.

அடுத்தடுத்த காட்சிகளை நாங்கள் விரைவாக நடத்திக்காட்டி, நாடகத்தை முடித்தோம். திரைபோடப்பட்டு மீண்டும் திரை விலக்கப்பட்டபோது, அருமையான வெண்பட்டு விரித்த ஆசனத்தில் சித்தர் மகிழ்வோடு அமர்ந்திருந்தார். அவருக்கு பின்புறத்தில் சுடர்விடும் குத்துவிளக்குகள் ஜொலித்தன.

என் தந்தை ஒலிபெருக்கியின் முன்னே வந்து "மெய்யன்பர்களே! அருமையான நாடகத்தை நம் பாலர் குழுவினர் நடத்திக் காட்டினார்கள். அவர்களுக்கு நம் பாராட்டுக்கள். நேற்றுப் போலவே இன்றும் பல நிகழ்வுகள் நடைபெறும். இறைவாழ்த்து, சித்தர் பெருமானின் பேச்சு, கேள்வி-பதில், நன்றியுரை என நம் நிகழ்ச்சிகளை அமைத்துள்ளோம். அதன்படி முதலில் இறைவாழ்த்து'' என்று அவர் கூறி முடித்தார்.

உடனே கவுசல்யாவும், வத்சலாவும் பட்டுப் பாவாடை சலசலக்க வந்து தங்கள் கைகளைக் கூப்பியபடி மகாபாரதத்தை தமிழில் பாடிய வில்லிபுத்தூராரின் மகன் வரந்தருவார் பாடிய தமிழ் மொழியின் பெருமை அமைந்த பாடலைக் கணீரென்ற குரலில் பாடத் தொடங்கினர்.

"பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்து
இருப்பிலே இருந்து வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்து ஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்''

இப்பாடலை அவர்கள் மிக இனிமையாகப் பாடி, முடிக்க எங்கும் அமைதி நிலவியது.

அப்போது என் தந்தையார் மேடையில் மீண்டும் தோன்றி, "சான்றோர்களே, இப்போது இக்குழந்தைகள் பாடிய இனிய பாடலைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்னவென்றால் நம் தமிழ்த் தாயானவள், பொதிகை மலை எனும் பொருப்பிலே பிறந்து தென்னவனாகிய பாண்டிய மன்னர்களின் தமிழ்ச்சங்கங்களில் இருந்து, திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாட்டில் வையை நதியில் ஏடாகத் தவழ்ந்த சமணர்களோடு வாதிட்டபோது நெருப்பிலே நின்று கற்றுணர்ந்த சான்றோர்களின் நினைவிலே நடந்து வருபவள் என்று அவர் பாராட்டிப் பாடுகின்றார்.

வந்துள்ள அனைவரையும் மீண்டும் வரவேற்கிறேன். அடுத்ததாக இதோ நம் சித்தர் பெருமான் தன் ஞானஉரையைத் தொடங்குகிறார்'', எனக்கூறி அமர்ந்தார்.

நாங்களும் ஒப்பனையைக் கலைத்துவிட்டு விரைவாக ஓடிவந்து மேடையில் அமர்ந்து கொண்டோம். சித்தர் பேசத் தொடங்கினார்.

No comments: