Friday, January 1, 2010

புத்தாண்டை வரவேற்போம்



புது வருடம் 2010
புதிய சிந்தையை
பூமிக்கு தரட்டும்
பூத்து குலுங்கும்
புன்னகை பூக்கள்
பூலோகமெங்கும்
பூரித்தெழட்டும்.

கடந்த வருடத்தில்
கயமை நிறைத்த
கசடுகளை
கழுவி துடைக்கும்
கடமை ஏற்போம்.

மானுடனை
மானுடனே
மாய்க்கின்ற
மடமை களைந்து
மனிதம் விதைத்து
மாந்தநேய
மகசூல் அறுப்போம்.

இறைவன் கொடுத்த
இயற்கை வளங்கள்
இறைந்து போகும்
இயல்பை நீக்கி
இகத்தில் நாளும்
இனிமை சேர்ப்போம்.

மனிதம் மறந்த
மதங்களும்
இதயமிழந்த
இனங்களும்
சாதிக்க மறுக்கும்
சாதியமும்
எக்காளமிடும்
எல்லைகளும்
அன்பெனும் தீயில்
அழிந்து போகட்டும்.
அறம் வளர்க்கும்
அன்னை பூமி
அத்தனை உயிரையும்
அரவணைக்கட்டும்.

-உளறுவாயன்-





No comments: