Saturday, December 5, 2009

பத்திரிக்கைச் செய்தி

இலங்கை அதிபர் தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டி

லங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே- சரத் பொன்சேகா ஆகியோரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்திருப்பதாக இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜி லிங்கம் தெரிவித்தார்.

இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ராஜபக்சேவும், எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், இவர்கள் இருவரையும் எதிர்த்து இலங்கை அதிபர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்திருப்பதாக இலங்கை தமிழ் எம்.பி சிவாஜி லிங்கம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிவாஜி லிங்கம் எம்.பி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முள்வேலி முகாம்களில் இருந்தவர்களை மீள் குடியமர்த்தம் செய்து வருவதாக இலங்கை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் அவர்கள் சொந்த பகுதியில் குடியமர்த்தம் செய்யப்படவில்லை முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இன்னும் 1 லட்சத்து 25 ஆயிரம் தமிழ்மக்கள் முகாம்களில் அடைபட்டுகிடக்கிறார்கள். தமிழ் மக்கள் அடைபட்டு கிடக்கும் முகாம்களில் அவர்கள் படும் துன்பம் மிக கொடுமையானது. அரிசி, பருப்பு, சீனி, மண்எண்ணை போன்ற 4 பொருட்களை மட்டுமே கொடுக்கிறார்கள். இதை வைத்து மக்கள் எப்படி உயிர்வாழ முடியும்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஆளுங்கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ராஜபக்சேவும், முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரிக்க மாட்டோம் என்று அனைத்து தமிழ் மக்களும் உறுதியாக உள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் இந்த 2 பேரையும் எதிர்த்து ஒரு தமிழரை இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும். அப்படி யாரையும் போட்டியிட வைக்காத பட்சத்தில் நான் சுயேச்சையாக இந்த தேர்தலில் போட்டியிடுவேன்.

இவ்வாறு சிவாஜிலிங்கம் எம்.பி கூறினார்.

***********************************************************************************

22 தமிழ் எம்.பி.க்களுக்கு ராஜபக்சே அழைப்பு

தேர்தல் தொடர்பாக பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த 22 எம்.பி.க்களுக்கு அதிபர் ராஜபக்சே தனித்தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜபக்சே சார்பில் பொதுமக்கள் ஐக்கிய முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த கடிதங்களை எழுதியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவித்து உள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை ராஜபக்சே 2 நாட்களுக்கு முன் தனியே சந்தித்துப் பேசியதாகவும், இந்த நிலையில் அந்த கூட்டணியின் அனைத்து எம்.பி.க்களுக்கு கடிதம் அனுப்பி இருப்பது அதன் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கருதுவதாக அந்த இணையதளம் தெரிவித்து உள்ளது.

No comments: