Tuesday, December 1, 2009

பெண்களை கவிழ்க்கும் 'தப்பான' அழைப்புகள்


னிதா உபயோகிக்கும் செல்போனுக்கு அடிக்கடி 'ராங் கால்' ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்முனையில் பேசிய ஆண், தனது பெயரை கேட்க முயற்சிப்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது.

அடிக்கடி அந்த 'ராங் கால்' வந்ததால் என்னவோ, அந்த செல்போன் எண் அவளது மனதில் அப்படியே பதிந்தும் போய்விட்டது.

அன்றும் வழக்கம்போல் அதே 'ராங் கால்' வந்தது. அனிதாவுக்கு வந்த கோபத்திற்கு, அந்த நபரை கடித்து குதற வேண்டும் என்பதுபோல் இருந்தது.

எடுத்த எடுப்பிலேயே, "உங்களுக்கு வேறு வேலையே கிடையாதா? நீங்கள் எதிர்பார்க்கும் பெண் நான் இல்லை என்று எத்தனை தடவைதான் சொல்வது?'' என்று கேட்டு, விளாசுவிளாசு என்று விளாசிவிட்டாள்.

'ராங் கால்' பார்ட்டிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பல நேரங்களில் நம்பரை பார்த்த மாத்திரத்தில் இணைப்பை துண்டித்து விடுபவள், இன்று ஏகத்துக்கும் எகிறிப் பேசியதால், அவனுக்கு தலைக்கு மேலே Fan ஓடியும் வியர்த்துப்போனான்.

டாப் கியரில் போன அனிதாவின் 'அர்ச்சனை'களால் அவனே செல்போன் இணைப்பை துண்டித்துக் கொண்டான். இனி, அவளுக்கு 'ராங் கால்' பேசுவது இல்லை என்றும் அப்போதே முடிவெடுத்தும் கொண்டான்.

இரண்டு நாள் ஓடியிருக்கும்.

அனிதா, தன்னை அறியாமலேயே அந்த அவஸ்தையால் தவித்துக் கொண்டிருந்தாள். 'ராங் கால்' தானே கொடுத்தான்? அதுக்கு இவ்வளவு கேவலமாக அவனை திட்டியிருக்க வேண்டுமா?' என்று தனக்குள்ளேயே அடிக்கடி கேட்டுக்கொண்டாள்.

அந்த 'ராங் கால்' பார்ட்டியிடம் ஒரு சின்ன சாரியாவது அவளுக்கு கேட்க வேண்டும் என்பதுபோல் தோன்றியது. உடனே, தனது பேக்கிற்குள் போட்டிருந்த செல்போனை எடுத்தாள். போன் புக்கிற்குள் வேகமாக நுழைந்து ஒரு நம்பரை 'கிளிக்' செய்தாள். 'மிஸ்டர் ராங் கால்' என்று அதில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

அதைப் பார்த்த மாத்திரத்தில் அவளுக்கு சட்டென்று சிரிப்பு வந்தது. முந்தையநாள் இரவுதான், ராங் கால் பார்ட்டியின் செல்போன் நம்பரை அப்படி டைப் செய்து பதிவு செய்திருந்தாள்.

அந்த நம்பருக்கு டயல் செய்ய ஆன் பட்டனை அழுத்த முயன்றாள். ஆனால், என்ன நினைத்தாளோ, டயல் செய்யாமல் விட்டுவிட்டாள்.

'எவனோ ஒருவன்தானே அவன்? அவனுக்கு ஏன் நான் போன் செய்து சாரி கேட்க வேண்டும்?' என்று எண்ணிக்கொண்டே, பேக்கிற்குள் இருந்து எடுத்த செல்போனை, அதற்குள் மீண்டும் போட்டுவிட்டாள்.

அன்று அலுவலகத்தில் அனிதாவுக்கு வேலையே ஓடவில்லை. பலநேரங்களில், அந்த ராங் கால் பார்ட்டியின் கற்பனை வடிவம்தான் வந்துவிட்டுப் போனது.

எத்தனை நாட்களுக்குத்தான் இந்த அவஸ்தையால் தவிப்பது? என்று யோசித்தவள், அன்று இரவுக்குள் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள்.

இரவு அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பி, சாப்பிட்டு முடித்துவிட்டு, 'அப்பாடா...' என்று பெட்டில் சோம்பலாய் வந்து விழுந்தபோது மணி எட்டை தாண்டியிருந்தது.

அவளது அப்பா வெளியில் சென்றிருந்தார். அம்மா, பக்கத்து வீட்டு மாமி அழைத்ததால் அவரது வீட்டிற்கு சென்றிருந்தாள். ஒரே பெண் என்பதால், அப்போது அனிதா மட்டுமே வீட்டில் இருந்தாள்.

இதுதான் ராங் கால் பார்ட்டியிடம் 'சின்ன சாரி' கேட்க சரியான நேரம் என்று உறுதி செய்தவள், அந்த மிஸ்டர் ராங் கால் நம்பரை டயல் செய்தாள். எதிர்முனையில் ரிங் போவது இவளுக்கு நன்றாகவே கேட்டது.

சட்டென்று என்ன நினைத்தாளோ, இணைப்பை துண்டித்துவிட்டாள். அவளது நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று படபடத்தது.

'நாம் செய்வது சரிதானா? இல்லை... தவறா? என்றே தெரியவில்லையே...' என்று, அந்த படபடப்பிலும் தலையை பிய்த்துக் கொண்டாள்.அடுத்த நொடியே அழகான மெல்லிசை பாடலோடு சிணுங்கியது அவளது செல்போன். வேகமாக அதை எடுத்துப் பார்த்தாள். மிஸ்டர் ராங் கால் பார்ட்டியிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது.

செல்போனை ஆன் செய்யவா? அல்லது ஆப் செய்யவா? என்று, அந்த சில நொடிகளில் அவளுக்குள் ஒரு பட்டிமன்றமே ஓடிக்கொண்டிருந்தது. அதற்குள் ரிங் கட் ஆகிவிட்டது.

அனிதாவுக்குள் படபடப்பு லேசாக தணிந்தபோது, மீண்டும் சிணுங்கியது அவளது செல்போன். பார்த்தாள்... அதே ராங் கால் பார்ட்டிதான்.தைரியத்தை வரவழைத்துக்கொண்டவள் செல்போனை ஆன் செய்தாள். எதிர்முனையில் ராங் கால் பார்ட்டியே முதலில் பேசினான். அவனுக்குள் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டு இருந்தது, அவனது மகிழ்ச்சியான பேச்சிலேயே தெரிந்தது.

"நான்தாங்க அருண் பேசுறேன். நீங்க என் நம்பருக்கு டயல் செய்வீங்க, நான் உங்ககிட்ட பேசுவேன்னு நெனைக்கவே இல்லீங்க...'' என்ற அவனது பேச்சில் சந்தோஷம் வெள்ளப்பெருக்காக ஓடிக்கொண்டிருந்தது.

அனிதாவுக்கு பேச்சு வர மறுத்தாலும், நிதானமாக பேசினாள்.

"நான் அன்னிக்கு உங்களை மோசமான வார்த்தைகளால திட்டிட்டேன். அது தப்புன்னு பிறகுதான் தோணுச்சு. அதுக்கு ஒரு சாரி கேட்கலாமேன்னுதான் உங்களுக்கு டயல் பண்ணினேன்...'' என்ற அனிதாவின் வார்த்தைகளில் இருந்த மென்மை அருணுக்கு இன்னும் சந்தோஷத்தை கொடுத்தது.

அவனும், தான் 'ராங் கால்' கொடுத்தது தப்புதான் என்று கூறி அவளிடம் இறங்கி வந்தான். இவளோ, நான் திட்டினதுதான் தப்பு என்று சற்று இறங்கிப்போனாள்.

கடைசியில், இருவரும் மாறி மாறி சாரி கேட்டுக்கொண்டு, தங்களைப் பற்றிய விவரங்களை லேசாக பகிர்ந்துகொண்டு, இணைப்பை துண்டித்துக்கொண்டனர்.

மறுநாள் காலையில் அருணிடம் இருந்து அனிதாவின் செல்போனுக்கு மெசேஜ் ஒன்று வந்திருந்தது. அதை திறந்து பார்த்தாள்... படித்தாள்...! அவளுக்குள் சட்டென்று ஒரு பரவசம் பொங்கி அமிழ்ந்து போனது.

ஆம்... அருண் அனுப்பி இருந்த தத்துவ வரிகள் அனிதாவுக்கு ஏற்கனவே பிடித்தமான வரிகள். அந்த வரிகளை எதிர்பாராமல் பார்த்த அவளுக்கு இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பதிலுக்கு, ஒரு நன்றியுடன் அருணுக்கு இவளும் ஒரு மெசேஜை அனுப்பி வைத்தாள்.

நாட்கள் வேகமாக கடந்தன. இருவரும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி தங்கள் நட்பை வளர்த்தனர். அந்த நட்பே காதலாகவும் மலர்ந்தது. ஒருநாள் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து பரவசப்பட்டார்கள்.

ஏற்கனவே இருவரும் மனதால் நெருங்கிவிட்டதால், அவர்களது தோற்றங்கள் பிரச்சினையை தரவில்லை. ஆனால், வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால்

காவல்நிலையத்தில் கரம் பிடிக்க வேண்டியதாயிற்று.

- இந்த சம்பவம் ஒரு உண்மை சம்பவம்தான்.

இன்றைய சூழ்நிலையில் மலரும் பெரும்பாலான காதல்களுக்கு முக்கிய காரணமே இந்த செல்போன்தான். இதே செல்போனால் உண்மைக் காதலும் மலரலாம், 'டைம் பாஸ்' காதலும் வந்து, சோகத்தை தந்துவிட்டு போகலாம்.

உங்களுக்குள் சின்னதாக சுயபரிசோதனை செய்துகொண்டால், ராங் கால் காதலில் உறுதியான முடிவு எடுக்கலாம்.

* எதிர்முனையில் பேசுபவர் திருமணம் ஆனவரா? ஆகாதவரா? என்பதை உடனே உறுதி செய்ய முடியாது. உண்மைகள் மறைக்கப்படலாம்.

* நீங்கள் நல்ல பொறுப்பில் உள்ளவராக, நல்ல குடும்பத்தில் பிறந்தவராக இருக்கலாம். ஆனால், எதிர்முனையில் முகம் தெரியாமல் பேசுபவர், தன்னை நல்லவர், வல்லவர், நாணயமானவர் என்றெல்லாம் பொய் சொல்லலாம்.

* சிலநேரங்களில், உங்களை எங்கேயோ பார்த்து, உங்கள் மீது ஆசை கொண்டு, அதன்தொடர்ச்சியாக எப்படியோ உங்கள் செல்போன் நம்பரை கண்டறிந்து, உங்களை அடைவதற்காக அவர் பேசலாம்.

* ராங் கால் போட்டு பேசுவதில் சுகம் காணும் நபர்களும் இருக்கிறார்கள். இவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது முக்கியம்.

* நெருங்கிப் பழகுபவர்களையே நம்ப முடியாத இந்த காலத்தில், யாரென்றே தெரியாத நபரிடம் நட்பு பாராட்டுவது சரிதானா?

- இந்த கேள்விகளை உங்களுக்குள் கேட்டு, சிந்தித்துப் பார்த்தாலே தெளிவான விடை கிடைக்கும்.

முக்கியமாக, பெண்கள் தங்கள் செல்போனுக்கு ராங் கால் வந்தால் அதுபற்றி போலீசில் புகார் செய்துவிடுங்கள். மேற்கொண்டு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

அதைவிட்டுவிட்டு, ராங் கால் பார்ட்டியிடம் நட்பு வளர்ப்பது, காதல் கொள்வது பெரும்பாலும் பிரச்சினையையே ஏற்படுத்தும். அனிதா விஷயத்திலும் அப்படித்தான். அவளின், இந்த காதலால் குடும்பத்தையே பிரிய நேரிட்டது.

எப்படித்தான் அலசி ஆராய்ந்து பார்த்தாலும், 'ராங் கால்' நட்பு - காதல் 99.99 சதவீதம் பிரச்சினையைத்தான் தரும். இதுதான் நடைமுறை உண்மை.

உங்கள் செல்போனுக்கும் 'ராங் கால்' வந்தால் உஷாராகி விடுங்கள். எச்சரிக்கையாகவும் இருங்கள்!


2 comments:

ISR said...

நல்ல பதிவு - இளைஞிகள் மட்டுமல்ல, இளைஞர்களும் இப்படித்தான் மதி மயங்குகிறார்கள்

வரதராஜலு .பூ said...

ராங் கால் செய்து, அதன் மூலம் பல கள்ள உறவுகள் ஏற்படுத்திகொள்வது தற்பொழுது நடக்கிறது. இதையே தொழிலாக செய்யும் ஆண்களும் உண்டு, பெண்களும் உண்டு. நல்ல சிந்தனையில்லாதவர்கள் இதில் சிக்கி, வாழ்க்கை சிக்கலில் மாட்டிகொள்ள வாய்ப்புள்ளது.

நல்ல பதிவு.