Saturday, December 5, 2009

இலங்கைக்கு மீண்டும் எம்.பி.க்கள் குழு

"இலங்கையில் போர் முடிந்து விட்டாலும், அமைதி திரும்பவில்லை'' என்று பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் புகார் கூறினார்கள்.

பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ், இலங்கை தமிழர்களின் நிலைமை குறித்து விவாதிக்கும் வகையில், பாராளுமன்ற மக்களவையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

அவர் கூறியதாவது:-

"இலங்கையில் தற்போது போர் முடிந்துவிட்டது. ஆனால், அமைதி திரும்பவில்லை. கடந்த மாதம் மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று அதிபர் ராஜபக்சேவுடன் பேச்சு நடத்தினார். அதன் விவரங்கள் குறித்து இதுவரை எந்த தகவல்களும் இல்லை.

இலங்கை அரசின் முகாம்களில் இலங்கை தமிழர்கள் அகதிகளாக, முள்வேலிகளுக்குப் பின்னால் சுமார் 21/2 லட்சம் பேர் அகதிகளாக வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு எந்த வசதியும் கிடையாது. அகதிகளில், 50 ஆயிரம் பேர் குழந்தைகள். அவர்களில் பெரும்பான்மையோர், ஆதரவற்றவர்கள்.

சுதந்திரத்துக்காக பாடுபட்ட இலங்கை தமிழர்களான குட்டிமணி, ஜெகன், தங்கதுரை ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால், அந்த தண்டனை நிறைவேறுவதற்கு முன்பு கடைசி ஆசையாக தங்களது கண்களை பிறருக்கு தானம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.

தாங்கள் உயிருடன் இல்லாதபோதும், தங்களின் கண்கள் மூலமாக தங்கள் நாடு சுதந்திரம் பெறுவதை காண முடியும் என்ற விருப்பத்திற்கு மாறாக, அவர்கள் கண்கள் கத்தியால் தோண்டி எடுக்கப்பட்டன. ஆனால், அவர்கள் இன்று மக்கள் மனதில் நிறைந்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட எம்.பி.க்கள் குழுவில் ஏன் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை அனுப்பி வைக்கவில்லை.? மேலும் அவர்கள் திரும்பி வந்தவுடன், அவர்களால் அளிக்கப்பட்ட அறிக்கையின் விவரங்கள் ஏன் வெளியிடப்படவில்லை.

எனவே உண்மை நிலையை கண்டறியும் வகையில், பாராளுமன்றத்தின் அனைத்துக்கட்சி உறுப்பினர்களை கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும்.''

தமிழர்கள் மறுவாழ்விற்காக இந்தியா அனுப்பிய நிதி உதவி சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறிய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்ற கேள்வியை சுஷ்மா சுவராஜ் தமிழில் கேட்டார்.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது:-

இலங்கைக்கு மீண்டும் எம்.பி.க்கள் குழு ஒன்றை அனுப்புவது பற்றி நிச்சயம் மத்திய அரசு பரிசீலிக்கும் என்று உறுதி அளித்தார். இலங்கை தமிழர்கள் மறுவாழ்விற்காக இந்தியா அளித்த நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளையும், விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டங்களையும் பட்டியலிட்ட எஸ்.எம்.கிருஷ்ணா, இந்த பணிக்காக இந்தியா ரூ.500 கோடி ஒதுக்கியதையும் குறிப்பிட்டார்.

"இலங்கையின் நிலைமை இன்னும் முற்றிலும் சரியாகவில்லை. இன்னமும் தமிழர்களில் அதிகம் பேர் முகாம்களில்தான் உள்ளனர். மொத்தம் உள்ள 3 லட்சம் தமிழர்களும் 180 நாட்களில், மறுகுடியமர்த்தப்பட்டுவிடுவார்கள் என்று இலங்கை அரசு உறுதி அளித்து இருந்தது.

குறிப்பிட்ட அந்த காலக்கெடுவிற்குள் அந்த உறுதிமொழியை நிறைவேற்ற முடியாத நிலை இலங்கை அரசுக்கு ஏற்படலாம். அதற்காக நமது தமிழ் சகோதர-சகோதரிகள் நீண்ட நாட்கள் முகாம்களில் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

தமிழர்களை மறுகுடியமர்த்துவது குறித்து, நமது நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று அதிபர் ராஜபக்சேவுடன் விவாதித்து இருக்கிறார். தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் முயற்சியின் பேரில் இலங்கைக்கு தமிழக எம்.பி.க்கள் குழு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்மூலம் நல்ல பயன் கிடைத்துள்ளது.

மொத்தம் உள்ள 3 லட்சம் தமிழர்களில், இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் மறு குடியமர்த்தப்பட்டு உள்ளனர். ஏறத்தாழ 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் இன்னும் முகாம்களில் தங்கி உள்ளனர்''.

இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.

No comments: