Tuesday, December 22, 2009

பத்திரிக்கைச் செய்தி

அடுத்த மாதம் நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில், முகாம்களில் உள்ள அகதிகள் 3 லட்சம் பேர் ஓட்டளிக்க முடியாத நிலைமை உள்ளதாக தேர்தல் பார்வையாளர் ஒருவர் கருத்து தெரிவித்து உள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல் அடுத்த (ஜனவரி) மாதம் 26-ந் தேதி நடக்க இருக்கிறது. அதிபர் பதவி காலம் முடிய இன்னும் சில ஆண்டுகள் இருந்தாலும் கூட, விடுதலைப்புலிகளை முற்றிலும் அழித்து விட்டதாகக் கூறி கொக்கரிக்கும் தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்சே, விடுதலைப்புலிகளை அழித்து விட்ட வெற்றி அலையில், அதிபர் பதவியையும் வென்று விடலாம் என்று கணக்குப்போட்டு முன்கூட்டியே தேர்தலுக்கு ஏற்பாடு செய்து உள்ளார்.

ஆகவே இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு மீண்டும் அவர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக, பதவி நீக்கப்பட்ட முன்னாள் தலைமை ராணுவ தளபதி சரத் பொன்சேகா போட்டியிடுகிறார்.

ஆனால், போரினால் இடம் பெயர்ந்து முகாம்களில் அகதிகளாக இருக்கும் 3 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் இந்த தேர்தலில் ஓட்டளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு இருப்பதாக சுதந்திரமான தேர்தல் பார்வையாளர்கள் அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.

"போர் காரணமாக 95 சதவீதம் தமிழர்கள், தங்கள் சொந்த இருப்பிடங்களை விட்டு அகதி முகாம்களில் குடியமர்த்தப்பட்டு உள்ளனர். சிறுபான்மையினரான அவர்கள் தங்கள் ஓட்டு உரிமையை பயன்படுத்துவதற்கு சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. ஆகவே அவர்கள் ஓட்டளிக்க முடியாத நிலைமை உருவாகலாம். நிர்வாகத்தடைகளும், சரியான நடைமுறைகள் இல்லாத குறைபாடும் தமிழர்கள் ஓட்டுரிமை இழப்பதற்கு காரணமாக அமையும்'' என்று அந்த அமைப்பைச் சேர்ந்த கீர்த்தி தென்னக்கோன் என்பவர் கூறியுள்ளார்.

ஆனால் இந்த கருத்தை அரசு மறுத்து உள்ளது.

"புதிய வாக்காளர் பட்டியல் நவீனமாக (அப் டு டேட்) தயாரிக்கப்பட்டு உள்ளது. முகாம்களில் உள்ள அகதிகளும் வாக்களிக்க அங்கு சிறப்பு ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் தங்களது வசிப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்த அகதிகள், புதிதாக தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க அகதி முகாம்கள் உள்ள விலாசத்தை குறிப்பிட்டு முறையாக விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் ஓட்டு போட முடியும்'' என்று வவுனியா மாவட்டத்துக்கான உதவி தேர்தல் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி தெரிவித்தார்.

No comments: