Saturday, December 26, 2009

துப்பாக்கிகளுக்கு சுட மட்டுமே தெரியும் !


ரலாற்றில் எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இப்படி ஒரு நீண்ட போராட்டம் நடந்ததே இல்லை !

ஐரோம் ஷர்மிளா சானு... உலகம் இவரைப்போல ஒரு போராளியைக் கண்டது இல்லை. 2000 -ம் வருடம் நவம்பர் 2 -ம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் தொடங்கியது ஷர்மிளாவின் உண்ணாவிரதம். 26 வயதில் உண்ணாவிரதத்தைத் தொடங்கியவருக்கு இப்போது 36 வயது.

10 வருடங்களாகத் துளி உணவுகூட அவரது உடலுக்குள் செல்லவில்லை. ஆறு வருடங்களாக ஒரு சொட்டுத் தண்ணீர்கூட அவரது உதடுகளைத் தீண்டியது இல்லை. பற்களைக்கூடத் தண்ணீரைப் பயன்படுத்தாமல், டிரை காட்டன் துணிகளைக்கொண்டு சுத்தப்படுத்திக்கொள்கிறார். 10 வருடப் பட்டினிப் போர்ராட்டத்தால் அவரது மாதவிடாய் சுழற்சி நின்றுவிட்டது. அரசு சர்மிளாவைக் கைது செய்து மூக்கில் பிளாஸ்டிக் ட்யூப் வழியாக திரவ உணவை வலுக்கட்டாயாமாகச் செலுத்தி உயிர் வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. ஆனாலும், அவர் பல தடவை ட்யூபை அகற்றிவிட்டு போராட்டத்தைத் தொடர முயற்சிக்கிறார். "ஏனெனில், இது தண்டனை அல்ல; நான் பிறந்தான் கடமை" என்கிறார் கண்ணீருடன். அந்தக் கண்ணீரில் நிரம்பி இருக்கிறது ஒரு போராளியின் கம்பீரம்.

இந்திய அரசு வடகிழக்கு மாநிலங்களில் அமல்படுத்தியிருக்கும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை (Armed Forces Special Powers Act) திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் ஷர்மிளாவின் ஒற்றைக்ம் கோரிக்கை. மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய ஏழு வடகிழக்கு மாநிலங்களின் பிரச்னைக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. மங்கோலியர்களின் முக அமைப்பைப் போன்ற அவர்கள் தங்களை இந்தியர்களாக ஒருபோதும் உணர்ந்தது இல்லை. 'காரணம், நாங்கள் இந்தியர்கள் இல்லை. எங்களைத் தனியேவிடுங்கள். தனிநாடு கொடுங்கள்!' என்பது தான் அம்மக்களின் கோரிக்கை. இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தப் பிரச்சனை இருக்கிறது. இதையொட்டி, வட கிழக்கில் உருவான ஆயுதக் குழுக்களை ஒடுக்குவதற்காக 1958 -ல் கொண்டு வரப்பட்டதுதான் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம். இதன்படி ஒருவரது கையில் ஆயுதம் என்று சந்தேகிக்கக்கூடிய பொருள் இருந்தாலே அவரைச் சுடலாம். யாரையும் எந்த விசாரணையும் இன்றிக் கைது செய்யலாம். வாரன்ட் இன்றி வீட்டுக்குள் புகுந்து சோதனையிடவும், துப்பாக்கிச் சூடு நடத்தவும் ராணுவத்துக்கு எல்லையற்ற அதிகாரம் தருகிறது இந்தச் சட்டம். இதற்காக ராணுவத்தின் மீது சட்டப்பூர்வமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது.

கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக வட கிழக்கில் அமலில் இருக்கும் இந்தச் சட்டத்தால், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வட கிழக்கில் ஆதரவற்ற குழந்தைகள், கற்பழிக்கப்பட்ட பெண்கள், விதவைகளின் எண்ணிக்கை கணக்கில்லாத அளவுக்குப் பெருகிவிட்டது. 2009 -ம் ஆண்டில் மட்டும் அரசின் அதிகாரப் பூர்வக் கணக்கின்படியே 265 பேர் படையினரின் துப்பாக்கிகளுக்குப் பலியாகி உள்ளனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வேண்டிதான் ஷர்மிலா போராடத் துவங்கினார்.

இம்பால் ஜே.எம்.மருத்துவமனையின் ஒரு அழுக்கு அறையில் தனிமைச் சிறையில் ஷர்மிளா ஒரு திருட்டுக் கைதியைப் போலத்தான் நடத்தப்படுகிறார். ஷர்மிலாவைவிடக் கூடுதல் உறுதியுடன் இருக்கிறார் அவரது அம்மா ஐரோம் ஆங்பி சக்தி. நடக்கும் தூரத்தில்தான் வீடு என்றபோதிலும் கடந்த ஆறு வருடங்களாக அவர் தன் மகளைப் பார்க்கவில்லை. "இந்தக் கையால் அவளுக்கு உணவு ஊட்ட வேண்டும் என்று ஆசை. ஆனால், அவளைப் பார்த்தால் அழுதுவிடுவேன். என் அழுகை அவளதுமனஉறுதியைக் குலைத்துவிடும். அவளது லட்சியம் நிறைவேறிய பிறகே அவளைச் சந்திப்பேன்!" என்கிறார்.

ஆனால், அரசு இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதைப்பற்றி பரிசீலிப்பதாகக்கூட இல்லை. இதைப்பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட உபேந்திரா கமிஷன், ஜீவன் ரெட்டி கமிஷன் இரண்டிலும் எந்தப் பலனும் இல்லை. கமிஷன்களில் விசாரணையை ராணுவம் மதிப்பதே இல்லை. விசாரணைக்கு ஒரு முறைகூட ராணுவம் சென்றதில்லை.

வரலாற்றில் எத்தனையோ அரசியல் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், உலகின் எந்த ஒரு மூலையிலும், ஒருபோதும் இப்படி ஒரு நீண்ட போராட்டம் நடந்ததே இல்லை. ஷர்மிளா ஒரு வரலாற்றைப் படைத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், அவர் படைக்க விரும்புவது இத்தகைய வரலாற்றை அல்ல; அவர் விரும்புவது மக்களின் அமைதியான, அன்றாட வாழ்வை. அதை ஒரு போதும் துப்பாக்கிகளால் வழங்க முடியாது. ஏனென்றால், துப்பாக்கிகளுக்குச் சுட மட்டுமே தெரியும்!

நன்றி - ஆனந்த விகடன்

No comments: