Saturday, December 26, 2009

நினைத்தாலே நெஞ்சை நடுங்க வைக்கும் நாள் இன்று...

சுகம் மட்டும் தரும் இடங்கள் என்று மனிதன் எவற்றையெல்லாம் கண்டு மகிழ்ச்சிக் கடலில் மிதந்தானோ அவை எதுவாயினும் அவனுக்கு சுமையையும், ஆற்றமுடியாத துக்கத்தையும் கூட அள்ளித்தரும் வலிமையுடையவை என்பதை கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26-ம் நாள் அவன் நன்றாகவே உணர்ந்து கொண்டான்…! ஆம் அதற்குப் பெயர் சுனாமியாம்..!

சுனாமி இப்பெயரை 2004 டிசம்பர் 25-ஆம் தேதி வரை பெரும்பாலும் யாரும் கேட்டதே இல்லை. ஆனால் மறுநாள் தொட்டு அப்பெயரைக் கேள்விப்பட்டாலே இம் மனிதனின் மனதில் இனம் புரியாத கலக்கம்…! பயம்…!!

வெள்ளம், புமி அதிர்ச்சி(பூகம்பம்), எரிமலை வெடிப்பு, காட்டுத் தீ புயல் போன்றவை தான் இயற்கைச் சீற்றங்கள் என்று மனிதன் அறிந்து வைத்திருந்தான். இச்சீற்றங்கள்கூட அவ்வப்போது சில பகுதிகளில் நடைபெறும் நிகழ்வாகத்தான் இருந்தன. சில பகுதியில் நடக்கும் இச்சீற்றம் வெகு தொலைவில் உள்ள மற்றொரு பகுதியை நெருங்காது என்று மனிதன் இதுவரை நம்பிக் கொண்டிருந்தான்.

ஆனால் உலகின் எங்கோ ஓரிடத்தில் ஏற்பட்ட பூகம்பம், அது மணல் பரப்பைக் கடந்து கடல் பரப்புக்குத்தாவி கடல் கொந்தளிப்பு என்ற நிலையை உருவாக்கியது. எங்கேயோ ஏற்பட்ட இந்த கொந்தளிப்பு அந்தப் பகுதியை மட்டும் பாதிக்காமல், ஒட்டுமொத்தமாக 14 நாடுகளில் பல ஊர்களையும், பெரு நகரங்களையும், சுற்றுலாத் தலங்களையும், அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடும் என்பதை நாம் அனைவரும் இன்றுதான் அறிந்து கொண்டுள்ளோம்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் சுனாமி ஏற்படுத்தியவலிகள், வேதனைகள், ரணம் இன்றும் ஆறாத வடுவாக பதிந்துவிட்டது. இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேரை இந்த சுனாமி பலிகொண்டுவிட்டது. தமிழகத்தில் சென்னை, கடலூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ஏழு ஆயிரம் பேர் பலியானார்கள். இந்தியாவில் பலி 10 ஆயிரத்திற்கும் அதிகமானது. ஆயிரக்கணக் கானோர் சொந்தங்களையும் உடமைகளையும் இழந்து பரிதவித்து நின்றனர்.

இன்று நினைத்தாலும் நெஞ்சை நடுங்க வைக்கும் அந்த பேரலைகள், ஏராளமானோர் வாழ்க்கையை பறித்துக் கொண்டன. இதற்கு முன் வேறு எந்த சுனாமியோ அல்லது, வேறு எந்த இயற்கைச் சீற்றமோ இத்தனை நாடுகளில் இத்தனை பேர்களைப் பலிகொண்டது இல்லை.

சுனாமியில் பலியான லட்சக்கணக்கான உயிர்களுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்.


2 comments:

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதில்
enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஓட்டளிப்புப் பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

hayyram said...

நல்ல பதிவு

அன்புடன்
ராம்

www.hayyram.blogspot.com