Thursday, December 31, 2009

உலகே விழித்தெழு !

புவி வெப்பமடைந்ததின் பாதக விளைவுகளை பூமியெங்கும் கண்கூடாக காண முடிகிறது. ஒரு புறம் திடீர் மழை, வெள்ளம், மறுபுறம் பருவமழை பொய்த்து வறட்சி, பனிப்பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் உயர்வு, உணவு நெருக்கடி, குடிநீர் பஞ்சம், மக்கள் இடப் பெயர்வு போன்ற துயரங்கள் உலக மக்களைத் தொடர்ந்து வருத்தி வருகின்றன.

தொழிற்மயதிற்காகவும், வசதியான வாழ்க்கைக்காகவும் இயற்கை வெகுவாகச் சூறையாடப்படுகிறது. புவியின் சுற்றுச்சூழல் மாசுபடுத்தபடுகிறது. வளிமண்டலமே வெப்பமடையும் அளவிற்கு பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்பட்டன.

புவி வெப்பமயத்தின் பாதிப்புகளை ஏற்கனவே அனுபவித்து வரும் சில நாடுகள் புதுமையான வடிவத்தில் தங்களின் கவலையைத் தெரிவித்தன.

மாலத்தீவு அரசு, தனது அமைச்சரவைக் கூட்டத்தையே கடலுக்கடியில் நடத்தி அதிசயிக்க வைத்தது. அதுபோல நேபாள அரசு, இமயமலையின் பனிபடர்ந்த சிகரத்தில் அமைச்சரவையைக் கூட்டிகாட்டியது.

இத்தகைய பின்புலத்தில் அண்மையில் டென்மார்க் தலைநகர் கொபன்ஹெகனில் காலநிலை மாற்றம் குறித்த உலக மாநாடு நடந்தது. இதில் அமெரிக்கா, சீன, இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற பெரிய நாடுகள் பங்கேற்றது.

இருநூறு ஆண்டுகளாக இயற்கையைச் சூறையாடி கார்பன் புகையை அதிகமாக வெளியிட்டு உலகச் சூழலை கெடுத்தவர்கள் அதிகப் பொறுபேற்க வேண்டும். ஆனால் அவரவருக்கு ஏற்ற அளவு குறைத்துக் கொள்ளலாம் என்பதே கோபன்ஹெகன் மாநாட்டு முடிவு.

உலகின் 5% மக்கள் தொகையைக் கொண்ட அமெரிக்காக் காரணமாகிவிட்டது. ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சீனா, இந்தியா என்று அனைத்து நாடுகளுக்கு இன்று இதில் பங்குண்டு.

இத்தகைய கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படும் பின்தங்கிய நாடுகளுக்கு 30 பில்லியன் டாலர் உதவிகள் வழங்கப்படும். 2020க்கு பிறகு 100 பில்லியன் டாலர் வழங்கப்படும், என்று பணத்தை வைத்து வாயடைக்கும் வேலை நடந்துள்ளது. முன்னேறிய நாடுகள் எவ்வளவு குறைத்துக் கொள்ள வேண்டுமென்ற கேள்வியை எழுப்ப முடியாமல் செய்வதில் அமெரிக்கா சாதனை புரிந்துள்ளது.

25 நாடுகளில் மட்டுமே ஏற்றுக்கொள்ளபட்டிருக்கும் இம்முடிவுகளை இதர நாடுகள் கவனத்தில் எடுத்துக் கொண்டன என்பதைத் தவிர, ஒரு அங்கீகரிக்கப்பட்ட உடன்பாடாக இது அமையவில்லை.

எனவே, சட்டரீதியான ஒப்பந்தம் ஏற்படாத சூழ்நிலையில், புவிவெப்பம் 2 டிகிரி செல்சியஸ் என்கிற வரம்பையும் தாண்டி, 3 டிகிரி செல்சியஸ் ஆக உயரக்கூடும் என்கிற அபாய அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

193 நாட்டுப் பிரதிநிதிகளின் இருவார கால கலந்தாய்வுகள் என்று உலகத்தின் கவனத்தைக் கவர்ந்த மாநாடு, எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி, ஏமாற்றத்தையே தந்துள்ளது.

மனித குலத்தினைக் காத்திடும் வரலாற்றுக் கடமையிலிருந்து தவறும் அரசுகளையும், தலைவர்களையும் குற்றவாளிக் கூண்டிலேற்றும் மேலும் வலுவான இயக்கமே, இனித் தாமதிக்ககூடாத பணியாகும்.

.பா.ரமணி கட்டுரையிலிருந்து தழுவல்

நன்றி ஜனசக்தி


1 comment:

angel said...

good article