Monday, December 28, 2009

மனிதருள் மாணிக்கங்கள்!

நாடக ஒத்திகைக்கு நானும் என் நண்பர்களும் புறப்பட்டோம். சித்தர் பெருமான் எங்களைப் பார்த்து, "குழந்தைகளே நீங்கள் நாடகம் போடும்போது நம்மோடு வாழ்ந்து நமக்கு வழிகாட்டிய மகான்களான, மகாகவி பாரதியார், மகாத்மா காந்தி, மனிதருள் மாணிக்கம் ஜவகர்லால் நேரு, கப்பலோட்டிய தமிழர் ..சிதம்பரனார், சமரச சன்மார்க்க ஞானி ராமலிங்க வள்ளலார் ஆகியோரது வாழ்க்கைச் சரித்திரங்களையும் நினைவு கூர்ந்து நாடகமாகப் போடலாமே'' எனக் கேட்டார்.

நாங்கள் தயக்கத்துடன் நின்றதைப் பார்த்த என் தந்தை, "நம் சாமி சொல்வதிலும் ஒரு உட்கருத்து இருக்கிறது. புராண நாடகம் போடும்போது மேடை, திரைச்சீலை, நடிகர்களுக்கான உடை, அணிகலன்கள், ஒப்பனை என்று பல்வேறு செயல்பாடுகளும், அதற்கேற்ற செலவுகளும் ஆகலாம். அதனால் நம்மோடு வாழ்ந்த இக்காலச் சான்றோர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை நாடகமாக்கலாம்'' என்பது அவரின் கருத்து என்றார்.

"குழ்ந்தைகளே, வடநாட்டில் ஈசுவர வித்தியாசாகர் என்றொரு மாமேதை இந்த நூற்றாண்டின் (20-ம் நூற்றாண்டில்) தொடக்கத்தில் வாழ்ந்து வந்தார். வடமொழியிலும், ஆங்கிலம் போன்ற உலக மொழிகளிலும் மேதை அவர். தைரியம் மிகுந்தவர். அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்'' எனச் சித்தர் தொடங்கியதுதான் தாமதம், நாங்கள் சட்டென்று தரையில் உட்கார்ந்து கொண்டோம்.

அங்கிருந்தவர்களும் சித்தர் சொல்லப்போகும் செய்தியைக் கேட்க நெருக்கியடித்துக் கொண்டு எங்களோடு அமர்ந்தார்கள்.

"குழந்தைகளே கேளுங்கள், நம் ஈசுவர வித்தியாசாகர், தாம் கற்ற கல்விக்கு ஏற்ப அப்போதைய ஆங்கில அரசாங்க அலுவலகம் ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தாராம். ஒரு முறை தன் மேலதிகாரியான .சி.எஸ். அதிகாரி ஒருவரைப் பார்க்கப் போனாராம். இப்போதைய ..எஸ். போன்ற பதவி அது.

அந்த ஆங்கிலேயே அதிகாரி ஆணவமும், நிறவெறியும் கொண்டவன். வித்தியாசாகர் அந்த அதிகாரியின் அறைக்குள் நுழைந்தவுடன், இவரை அவமதிக்க நினைத்த அந்த அதிகாரி, தன் இரண்டு கால்களையும் தன் முன்னால் இருந்த மேஜைமேல் பூட்ஸ்களோடு காலைத் தூக்கிப்போட்டு, தன் சேரில் பின்னால் சாய்ந்தபடி 'என்ன வேண்டும்?', என்று ஆணவமாகக் கேட்டானாம். ஈசுவர வித்தியாசாகர் அவனது செயலைக் கவனித்துவிட்டு ஒன்றும் பேசாது தன் இருக்கைக்கு வந்தாராம்.

சில நாட்கள் கழித்து அதே அதிகாரி ஏதோ ஒரு வேலையாக ஈசுவர வித்தியாசாகரைக் காண அவரது அலுவலகத்திற்கு வந்தானாம். அந்த மேல் அதிகாரி தன் அறைக்குள் நுழைந்தவுடன் வித்தியாசாகர், தன் கால்களைத் தனக்கு முன்னிருந்த மேஜையில் தூக்கிப்போட்டபடி நாற்காலியின் பின்னால் சாய்ந்து அந்த அதிகாரி தன்னிடத்தில் கேட்டதுபோலவே 'என்ன வேண்டும்?' எனக் கேட்டாராம்.

அதனால் கோபம் கொண்ட அந்த ஆங்கிலேய அதிகாரி அப்போதிருந்த வைஸ்ராயிடம் தன்னை ஒரு அடிமை இந்தியன் அவமதித்துவிட்டதாக வழக்குத் தொடர்ந்தானாம். ஆங்கிலேயே வைஸ்ராய் நம் ஈசுவர வித்தியாசாகரை வரவழைத்து அந்த மேலதிகாரியையும் உடன் வைத்துக் கொண்டு விசாரணையைத் தொடங்கினாராம்.

அப்போது நம் வித்தியாசாகர் மிக அழகான ஆங்கிலத்தில் 'மேன்மை தங்கிய வைஸ்ராய் அவர்களுக்கு வணக்கம். நான் இதோ இந்த .சி.எஸ். அதிகாரியை அவமதித்ததாக என் மீது அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் நான் சில நாட்களுக்கு முன் இவரைப் பார்க்க இவரது அலுவலகத்திற்குச் சென்றேன். இவர் தன் பூட்ஸ் கால்களை தன் முன்னே இருந்த மேஜையில் போட்டுக்கொண்டு என்னை வரவேற்றார்.

அப்போது நான் என்ன நினைத்தேன் தெரியுமா? சூரியன் மறையாத சாம்ராஜ்யத்தை ஆளுகின்ற ஆங்கிலேயர்கள் உலகத்திற்கே எல்லாச் செய்திகளையும் பழக்க வழக்கங்களையும் கற்றுத் தருவதாகச் சொல்லி வருகிறார்கள். அதன்படி ஆங்கில நாட்டவர்கள் மற்றவர்களை வரவேற்கும்போது கால்களை மேலே தூக்கிப்போட்டு வரவேற்பது வழக்கமாக இருக்கும்போல என்று நான் நினைத்து உடனே அந்த ஒப்புயர்வற்ற சிறந்த வழக்கத்தை நாமும் கடைபிடித்து வாழ்க்கையில் உயர வேண்டும் என்று நினைத்துதான், உங்கள் வழக்கப்படி நீங்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்த வழக்கப்படி இவரை நான் வரவேற்றேன். இதில் அவமரியாதைக்கு எங்கே இடமிருக்கிறது?' என்று சாதுர்யமாகக் கேட்டாராம் நம் வித்தியாசாகர்.

வைஸ்ராய் இந்த பதிலைக் கேட்டு திடுக்கிட்டு, 'ஆகா' நம் அதிகாரி செய்த தவறை நம் இனத்தின் தவறாகச் சுட்டிக்காட்டிவிட்டாரே? இந்த இந்தியர்' என வெட்கப்பட்டு வைஸ்ராய் அந்த அதிகாரியை எச்சரித்து அனுப்பினாராம்.

வித்தியாசாகரும் தன் வேலை முடிந்தது என நினைத்து, தான் பார்த்த வேலையை ராஜினாமா செய்து விட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வந்துவிட்டாராம்'' எனச் சித்தர் ஈசுவர வித்தியாசாகரைக் குறித்துச் சொன்னபோது நாங்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தோம்.

அப்போது என் தந்தை, "சாமி மிக அருமையான செய்தியை அழகாகச் சொன்னீர்கள், ஒருவர் நம்மை அவமதித்தால்கூட அவர் மீது கோபம் கொள்ளாது அவருக்கு நாம் நன்மை செய்ய வேண்டும் என்பார் நம் வள்ளுவர் பெருமான்'' எனச் சொன்னார்.

உடனே குமரேசனார்...

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்''

எனச் சந்தோசமாகத் திருக்குறளைச் சொல்லி, வள்ளுவர் அறத்துப்பாலில் இன்னா செய்யாமை அதிகாரத்தில் நான்காவது குறளாக இதனைக் குறிப்பிடுகிறார்'' எனச்சொல்ல நாங்கள் அவரை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம்.

"குழந்தைகளே பார்த்தீர்களா? நம் திருக்குறள் குமரேசனார் ஐயா கையில் எந்தப் புத்தகமும், குறிப்பும் இல்லாமல் எவ்வளவு நினைவாற்றலோடு சொல்கிறார்? என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். நாம் படித்தது நினைவுக்கு வரவில்லையே என்று வருத்தமும் இருக்கலாம். அதற்கு காரணம் நீங்களும், உங்களைப் போன்ற மாணவர்களும் கஷ்டப்பட்டு படிக்கிறீர்கள். திருக்குறள் குமரேசனார் ஐயா போன்றவர்கள் இஷ்டப்பட்டு படிக்கிறார்கள்'' என்று சொல்ல, எல்லோரும் கைதட்டினார்கள்.

அப்போது என் தந்தை, "சாமி, நீங்கள் சொன்ன ஈசுவர வித்தியாசாகர் பற்றிய இன்னொரு செய்தி'' எனத் தொடங்க "சொல்லுங்கள், சொல்லுங்கள்'' என ஆர்வமானார் சித்தர்.

"ஈசுவர வித்தியாசாகர்தான் வடநாட்டில் பெண்களும் கல்வி கற்பது அவசியம் என்பதை வலியுறுத்தி அவர்களுக்காகப் பள்ளிகளைத் தொடங்கியவர். பால்ய விதவைகளுக்கு சமூகத்தோடு போராடி மறுமணம் செய்து வைத்தவர். அந்த மகான் ஒருநாள் தன் வகுப்பறையில் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது மாணவர்களுக்கு ஒரு செய்தியை உணர்த்தினாராம். எப்படித் தெரியுமா?'' எனக் கேட்ட என் தந்தை தன் சட்டைப் பையில் இருந்த சாக்பீசை எடுத்து அங்கிருந்த மரப்பலகையில் ஒரு கோடு போட்டார். போட்டுவிட்டு எங்களைப் பார்த்து "எங்கே யாராவது வந்து நான் போட்ட கோட்டை அழிக்காமல் சின்னக்கோடாக மாற்ற முடியுமா?'' எனக் கேட்டார்.

நாங்கள் எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்தோம், "அழிக்காமல் கோட்டை எப்படிச் சின்னதாக்குவது'' என்று. அப்போது குண்டுக் கருப்பையா எழுந்து என் தந்தையிடம் சாக்பீசை வாங்கி அவர் போட்ட கோட்டிற்குப் பக்கத்திலேயே இவன் பெரிய கோடுபோட்டான். இப்போது என் தந்தையார் முதலில் போட்ட கோடு சின்னக் கோடாகப் போய்விட்டது. எல்லோரும் குண்டுக் கருப்பையாவுக்காக கைதட்டினோம். சித்தர் மகிழ்ந்து சிரித்தார். திருக்குறள் குமரேசனார் உடனே ஒரு திருக்குறள் நூலை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார்.

என் தந்தையும் மகிழ்ந்து "சபாஷ் கருப்பையா'' என வாழ்த்தி, இதேபோல வித்தியாசாகர் வகுப்பிலும் ஒரு மாணவர் கோடு போட்டாராம். அதைப் பார்த்து மகிழ்ந்த வித்தியாசாகர் சொன்னாராம், 'மாணவர்களே நன்றி. முதல் கோட்டை அழிக்காமல் சின்னதாக்கிவிட்டீர்கள். இதுதான் முறை. பிறர் அழிவில் இல்லை நம் உயர்வு, நாம் உயர்ந்தால் நம் பகைவர்கள் தானே மறைவர்' எனச் சொன்னாராம். என் தந்தை சொல்லி முடிக்க "அற்புதம், அருமை'' என ஆனந்தப்பட்டார் சித்தர் பெருமான்.

அப்போது குண்டுக்கருப்பையா, "சாமி மனிதருள் மாணிக்கம் ரோஜாவின் ராஜா நம் நேரு மாமாவைப் பற்றி ஏதாவது சொல்லுங்களேன்'' எனக் கேட்டான்.

எனக்கும் என் நண்பர்களுக்கும் மிகுந்த ஆச்சரியம். இந்தக் கருப்பையா, வகுப்பில் வாத்தியார் கேள்வி கேட்டாலே நடுங்கிப் பயந்து உளறுவானே இப்போது சித்தரிடமே கேள்வி கேட்கிறானே? என வியந்தோம்.

அப்போது கிரி என்னிடத்தில் ஏதோ சொல்லவர, "தம்பி எழுந்து எல்லோருக்கும் சொல்'' என்று சித்தர் சொல்ல;

"சாமி, நம்ப கருப்பையா ரொம்பப் பயந்தாங்கொள்ளி. ஒரு நா எங்க எட்டாம் வகுப்பு வாத்தியார் ஆரோக்கியசாமி பிரம்போடு வந்து உம் பேரென்னடான்னு? இவனைக் கேட்டாரு. இவன் பயந்துபோய் மேலத்தெரு' என்று சொன்னான்'' என்று கிரி சொல்ல எல்லோரும் சத்தமாகச் சிரிக்க கருப்பையாவும் சேர்ந்து சிரித்தான்.

கு.ஞானசம்பந்தன்

No comments: