Saturday, December 19, 2009

நினைவாற்றலே பெருஞ்செல்வம்

சித்தர் பெருமான், விவேகானந்தர் அம்பிகையைச் சந்தித்தும் தன் வறுமையைச் சொல்லாமல் விட்டகதையை சொல்லிக்கொண்டிருந்தபோதே என் தந்தையாரும், திருக்குறள் குமரேசனாரும் உள்ளே வந்தனர். அப்போது குமரேசனார் திருவள்ளுவர் கூறிய அருட்செல்வம், பொருட் செல்வம் குறித்த குறளையும் எடுத்துரைத்தார். நாங்கள் கைதட்டினோம்.

அப்போது அங்கிருந்தவர்களிடம் என் தந்தையார், "ஐயா சித்தர் கூறிய வரலாற்றில் விவேகானந்தர் உலகநாயகியாகிய அம்பிகையிடத்தில் தன் சொந்த வறுமையைச் சொல்ல, ஏன் தயங்கினார் தெரியுமா?

நம்மூருக்கு இந்திய நாட்டின் ஜனாதிபதி வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது தங்களுக்கு என்னென்ன வேண்டும் என்பதைக் கோரிக்கை மூலம் நம் நாட்டின் ஜனாதிபதியிடத்தில் தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வந்தால் என்ன செய்வோம்?

நம் ஊருக்கு உயர் பள்ளிக்கூடம் வேண்டும், கல்லூரி, மருத்துவமனை, வைகை ஆற்றைக் கடக்கப் பாலம், நூலகம் என்றுதான் கேட்போமே தவிர, ஐயா ஜனாதிபதியவர்களே நான் மூக்குப்பொடிபோடும் பழக்கமுள்ளவன், அதனால் பொடிமட்டை வாங்கப் பத்துப்பைசா கொடுங்கள் என்று கேட்பது எப்படிப் பொருத்தமில்லாத விஷயமோ அதுபோலத்தான் உலகப் பரம்பொருள் நாயகி இடத்தில் தன் வறுமையைச் சொல்ல விவேகானந்தர் தயங்கியது'' என்று சொல்லி முடிக்கவும் அங்கிருந்த எல்லோர் முகத்திலும் சிரிப்பும் புன்னகையும் தவழ்ந்தது.

சித்தர் பெருமானும், "அற்புதமாகச் சொன்னீர்கள் ஐயா. `தருவோர் பெருமையும், பெறுவோர் தகுதியும் பொருத்தே பொருளின் தன்மையும் அமையும்' என்பார்கள். நான் ஒரு கதை கேள்விப்பட்டேன்.

ஒரு பெரிய அரசனிடத்தில் ஒருபுலவர் சென்று அந்த அரசனைப் புகழ்ந்து பாடிப்பொருள் வேண்டி நின்றாராம். அரசனும் மகிழ்ந்து, புலவரைப் பார்த்து என்ன வேண்டும்? எனக் கேட்டாராம். அந்தப் பேராசை கொண்ட புலவர் ஒரு லட்சம் பொன் கொடுங்கள் என்று கேட்க அரசன் யோசித்து அது உன் தகுதிக்குச் சரிப்பட்டு வராதே என்றாராம்.

உடனே அந்தப்புலவன் மிக வருத்தப்பட்டு சரி, ஒரு வெள்ளிப்பணம் கொடுங்கள் போதும் என்றாராம். உடனே அரசனும் அது என் தகுதிக்குச் சரிப்பட்டு வராதே என்றானாம் புன்னகையோடு. எனவே தருவோரையும் பெறுவோரையும் பொருத்தே எதுவும் அமைதல் வேண்டும்'' என சித்தர் சொன்னார்.

தன்னிடத்தில் பணமும், பொருளும் கொண்டு வந்த எங்களூர் செல்வந்தரை நோக்கி, "ஐயா நீங்களும் பாடுபட்டுத்தான் பொருளைத் தேடியிருபீர்கள். அந்தப் பொருளைப் பாதுகாப்புக் கருதி வங்கியிலேயே சேமித்து வைத்திருப்பீர்கள். அதற்கு வட்டியும் கிடைக்கும்.

இதோ இந்தப் பொருளின் மூலம் இவ்வூருக்கு ஒரு நல்ல நூலகம் கட்டிக்கொடுங்கள். உங்கள் பெயரையே அதற்குச் சூட்டுங்கள்'' எனச் சொல்லி தனக்கு அந்தச் செல்வந்தர் கொடுத்த பொருள் அனைத்தையும் அப்படியே அவரிடத்தில் மகிழ்வோடு கொடுத்தார்.

அங்கிருந்த அத்தனை பேரும் ஆச்சரியத்தோடு சித்தரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வழக்கமாகச் சித்தர்கள் "தகரத்தைத் தங்கமாக்குவார்கள், மந்திரத்தால் மாங்காய் வரவழைப்பார்கள்'' என்று கேள்விப்படும் காலத்தில் இச்சித்தரோ குழந்தைகளிடத்தில் மாங்காய் வாங்கிச் சாப்பிடுகிறார். தனக்குத் தரப்பட்ட பொருட்களை ஊர் நன்மைக்கு நூலகம் கட்டச் சொல்கிறாரே? என்று வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

பின்னர், சித்தர் எங்களை நோக்கி, "குழந்தைகளே! நாடகம் போடப் போவதாகச் சொன்னீர்களே, என்ன நாடகம் என்று முடிவு செய்துவிட்டீர்களா?'' என் அன்பாகக் கேட்டார்.

உடனே நண்பன் கிரி எழுந்து, "சாமிபுராணம் அல்லது வரலாற்றில் இருந்து ஏதேனும் ஒரு காட்சியை எடுத்து நாடகம் போடலாம்னு நெனச்சோம்'' என்று சொன்னான்.

"நல்லது, புராணக்கதைகள் பல மக்கள் அறிந்ததாக இருக்கும். அதனால் நம்முடைய பண்டைய மன்னர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த அரிய நிகழ்வுகளை நாடகமாக நடித்து மக்களுக்கு நினைவு படுத்துங்கள்'' என்று சொன்னவர் என் தந்தையாரைப் பார்த்தார்.

சித்தரின் குறிப்பை அறிந்த, என் தந்தையும் "தம்பிகளா, தமிழ் இலக்கியத்தில் புறநானூறு, பதிற்றுப்பத்து எனும் இலக்கியங்கள் இருக்கின்றன. அவற்றில் நம் பண்டைய மன்னவர்களின் வீரம் மானம், நட்பு, கொடை, ஈகைக் குணம் குறித்த பல செய்திகள் இருக்கின்றன. அவற்றை நாடகமாக்கலாம்.

எடுத்துக்காட்டாக நட்புக்கு இலக்கணமாய்த் திகழ்ந்த கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையர் கதை, தமிழுக்காகத் தன் தலையைக் கொடுத்த குமண வள்ளல் கதை, அவ்வைக்கு நெல்லிக்கனி தந்த அதியமானின் வரலாறு,

போர்க்களத்தில் தோல்வியுற்ற சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை மானத்திற்காக உயிர்விட்ட வரலாறு, மதுரையில் தன் நாட்டு மக்களைத் தன்மக்களாய் நினைத்துக்காத்த பொற்கைப்பாண்டியன் கதை, பசுங்கன்றுக்கு நீதி சொன்ன மனுநீதிச் சோழன், புறாவுக்காக உயிர்நீத்த சிபிச் சக்கரவர்த்தி கதை என ஏராளமான கதைகள் உண்டே'' என் தந்தை ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.

சித்தர் படபடவென்று கைதட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

"பார்த்தீர்களா? கடல்மடை திறந்த வெள்ளம் போலவும் தமிழ்ஐயா, எத்தனை எத்தனை இலக்கியங்களை எடுத்துச் சொன்னார் என்று. குழந்தைகளே நாடகத்தின் முக்கிய வெற்றிக்கு நடிப்பும், வசன உச்சரிப்பும் எப்போதும் துணை நிற்கும். ஆனாலும் நினைவாற்றல்தான் நாடக நடிகர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.'' எனச் சித்தர் கூறினார்.

"சாமி நினைவாற்றலை வளர்ப்பது எப்படி என்றுதான் தெரிய மாட்டேங்குது. என்ன படிச்சாலும் மறந்துபோகுதே'' என்று எங்களோடு வந்த குண்டு கருப்பையா கவலையாக சித்தர் சாமியிடம் கேட்டான்.

"ஒன்றும் கவலைப்படாதே உனக்கு விருப்பமான உணவுப்பொருளின் பெயரை எப்போதாவது மறந்திருக்கிறாயா? நான் சில வழிகளைச் சொல்கிறேன் கேளுங்கள். ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய பொருளோடு சேர்த்துச் சொல்லிப் பார்த்தால் நிச்சயம் நினைவில் இருக்கும்.'' என்ற சித்தர் "லட்டு, இது உடைந்தால் உதிர்ந்தால் என்ன ஆகும்?'' என்று கேட்டார்.

"பூந்தியாகும்'' என்றான் குண்டு கருப்பையா.

"இப்ப அந்தத் தட்டில் என்னென்ன பொருட்கள் இருக்கு?'' என்று கேட்டார். "லட்டு, பூந்தி'' என்றான்.

"லட்டு, பூந்தி, காரப்பூந்தி, காரப்பூந்தியுடன் கூடிய மிக்சர்... இப்படிச் சொல்லிப் பார்த்துக்கிட்டே போனால் 10 வருடம் கழிச்சிக் கேட்டாக்கூட அன்னிக்கு அந்த தட்டில் இருந்ததைச் சொல்லவான்னு கேட்கலாம். அப்படியே நினைவில் தங்கிவிடும்'' என்றார் சித்தர். பிறகு அவரே தொடர்ந்தார்.

"அடுத்து மனப்பாடம் செய்து உருப்போடுதல். 'உருவுக்கு மிஞ்சின குருவும் இல்லை' அப்பிடீன்னு பழமொழி இருக்கு. விடாம ஒன்றைப் படித்துக் கொண்டே இருந்தால் அதுவும் நாம் படிப்பதே நம் சாதுக்கு கேட்குமாறு சத்தம் போட்டுப் படித்தால் நிச்சயமாக அந்தப் பாடம் நமக்கு ஒருபோதும் மறக்காது.

மேல்நாட்டுக்காரர்கள் மேடைப் பேச்சிற்குத் தயா ராகும்போது, தாங்கள் படித்த செய்திகளைப் படமாக வரைந்து பார்த்துக் கொள்வார்களாம். பிறகு செய்திகளைப் படிப்பதால் வாயும், காதும், படம் பார்ப்பதால் கண்ணும் செய்தியை எளிமையாக மூளைக்குள் பதிந்து வைத்துக் கொள்ளுமாம். அதனால் நினைவாற்றல் பெருக வாய்ப்பு உண்டாம்.

முக்கியமாக திரும்பத் திரும்ப ஒன்றைக் கூறிப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் இதனை ரெப்படீசன் என்று குறிப்பிடுவார்கள். இங்கு இருக்கிற பெரியவங்களுக்குத் தெரியும். தேவாரம், திருவாசகம், அனுபூதி இவற்றை எல்லாம் தினசரி சொல்லிச் சொல்லிப் பார்த்தால்தான் அவை நினைவில் நிற்கும்.

அதற்கு ஆங்கில நாட்டில் ஒரு பழமொழி உண்டு. அதாவது திரும்பத் திரும்பக் கூறுதல் கல்விக்கு தாய் இப்படித் தொடர்ச்சியாகச் சித்தர் சொல்லச் சொல்ல எங்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அங்கிருந்த அனைவரும் சிலைபோல அமர்ந்திருந்தார்கள்.

அப்போது திருக்குறட் குமரேசனார், "ஆகா, என் வாழ்நாளில் இத்தகைய கருத்துக்களை நான் கேட்டதே இல்லை'' என்று சொன்னார்.

"உண்மைதான் நம் சித்தர் பெருமான் சொன்ன கருத்துக்கள் பலவற்றைத் தமிழறிஞர் .கி.பரந்தாமனார் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளார். ரா.பி.சேதுப்பிள்ளை. திரு.வி.., மறைமலை அடிகள் ஆகிய தமிழ்மேதைகளையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆனால் நம் நாட்டில் நம்மோடு இருப்பவர்களை நாம் கண்டுகொள்வதில்லை. நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. இந்தக் கருத்தை நம்முடைய பழம்பாடல் ஒன்று கூறுகிறது...'' என என் தந்தை சொல்ல, உடனே சித்தர் ஆவலோடு "என்ன பாடல் அது? எந்த நூலில் வருகிறது?'' என்று கேட்டார்.

"சாமி, விவேக சிந்தாமணி என்றொரு தொகுப்பு நூல் தமிழில் இருக்கிறது. அந்நூலில் அரிய பாடல்கள் பல உண்டு. அதில் ஒரு பாடலின் கருத்து இது தான்,

'ஒரு தடாகமாகிய தண்ணீர்க் குளத்தில் அரிய வகை தாமரை மலர்கள் பூத்திருந்தாலும் அந்தக் குளத்திலே எப்போதும் தாமரையின் கூடவே இருக்கும் தவளைகளாகிய மண்டுகங்கள் அந்தத் தாமரை மலரின் வாசத்தை, அதில் உள்ள தேனை, அம்மலரின் அழகை, அறிந்துகொள்ள முடியாமல் இருக்குமாம். ஆனால் எங்கோ காட்டின் நடுவே பிறந்த தும்பிகளாகிய வண்டுகள், இந்தத் தாமரை மலரின் அருமையை அறிந்து வந்து சேருமாம். தேனை அருந்துமாம். அதுபோல நம்மிடையே பெரிய மனிதர்கள் பிறந்திருந்தாலும் நாம் அவர்களை அரியாத மண்டுகங்களாக இருக்கிறோம்'' என்று அந்தப் பாடல் சொல்கிறது.

"தண்டா மரையின் உடன் பிறந்தும்
தன்தேன் நுகரா மண்டுகம்;
வண்டோ கானத்து இடையிருந்து
வந்தே கமல மதுஉண்ணும்!
பண்டே பழகி இருந்தாலும்
அறியார் புல்லோர் நல்லோரை
கண்டே களித்து இங்கு உறவாடி
தமிமில் கலப்பார் கற்றோரே!''

என என் தந்தை விவேகசிந்தாமணியின் பாடலைச் சொன்னபோது அங்கிருந்த அனைவரும் கேட்டு மகிழ்ந்தோம். அடுத்து மக்கள் சித்தரைக் காணவந்து கொண்டிருந்ததால், நானும் நண்பர்களும் நாடக ஒத்திகைக்குக் கிளம்பினோம்.

கு.ஞானசம்மந்தன்

No comments: