Thursday, December 17, 2009

அருளும்... பொருளும்...

மறுநாள் காலை நானும், எனது நாடகக்குழு நண்பர் களும் ஒன்று கூடினோம். சித்தர் பெருமானின் அனுமதியோடு நல்ல நாடகம் ஒன்றை அவரது சொற்பொழிவு மேடையிலேயே நடத்திக் காட்டி அவரது பாராட்டைப் பெற வேண்டும் என்று முடிவு செய்தோம். என்ன நாடகம் போடுவது, இந்தக் கேள்வியை வைத்தே ஒரு நாடகம் போட்டிருக்கலாம் போல... அத்தனை பேரும் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தாகச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

"சிரிப்பு நாடகம் போடுவோம். அப்பத்தான் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பாங்க...'' என்றான் குச்சிராசு.

"அதுல நீதான் பயில்வானா நடிக்கணும். அப்பத்தான் எல்லாரும் உன்னைப் பார்த்த உடனே சிரிப்பாங்க'' என்று குறுக்கே பேசினான் குண்டு கருப்பையா.

சிறுபிள்ளைகளாக இருக்கும்போது பலருடைய சொந்தப்பேருக்கு முன்னால் இப்படி அடைமொழிகளைச் சேர்த்து அழைப்பது வழக்கம். இன்னும் சிலருக்கு பட்டப்பெயர்களை வைத்துக் கூப்பிட்டு சொந்தப் பெயரே மறந்தும் போயிருக்கும். புளிமூட்டை, பொன்வண்டு, சடச்சி... இவர்களின் உண்மையான பெயர் இன்றைக்கு வரைக்கும் எனக்குத் தெரியாது. ஏன் அவர்களுக்குக்கூட மறக்காமல் இருக்குமா என்றும் தெரியாது.

"சோக நாடகம் வேண்டாம். துப்பறியும் நாடகம்?...'' என்று ஒருவன் சொல்ல..

"வேண்டாம்டா. போனதடவை நாம போட்ட நாடகத்தோட ரகசியமான முடிவை நம்மோட நடிச்ச ஒரு பய முதல்நாளே போய் ஊரெல்லாம சொல்லிவிட, நாடகம் தொடங்கினப்பவே பல பேர், நீங்க துப்பறியும் ரகசியம் தெரியும், தெரியும்ன்னு கத்தினாங்கபாரு. வேண்டாம்டா'' என்றான் வேணு.

கடைசியில் புராண நாடகம் அல்லது வரலாற்று நாடகம் போடலாம் என முடிவு செய்தோம். நாங்களே எங்கள் ஆசிரியர்களைச் சந்தித்து சில கதைகளைக் கேட்டோம். அவர்களும் மகிழ்வோடு சொன்னார்கள்.

பிறகு நாடக நண்பர்கள் அனைவரும் சித்தர் பெருமானை காணப் புறப்பட்டோம். என் தந்தையாரும், குமரேசனாரும் அன்று மாலைக் கூட்ட ஏற்பாட்டைக் கவனிக்கச் சென்றிருந்தனர்.

ஆற்றங்கரைத் தோப்பு வழியாக சிரித்துப் பேசியபடி நாங்கள் நடக்க, எங்களோடு வந்து கொண்டிருந்த குச்சிராசு திடீரென்று காணாமல்போய் மீண்டும் வந்தபோது கையிலும் பையிலும் நிறைய மாங்காய்கள் வைத்திருந்தான். குண்டு கருப்பையா உப்பு கலந்த மிளகாய்ப்பொடியை தன் பையில் இருந்து எடுத்தான்.

"டேய் மரத்துக் காவல்காரன் இல்லையா?'' என்று நான் கேட்டேன்.

"எங்க மாமாதாண்டா அவரு. கேட்டுத்தான் வாங்கியாந்தேன்'' என்ற அவன் சொன்னான்.

அங்கே இருந்த கல்பாலத்தில் தண்ணீரில் காலைத் தொங்கப் போட்டபடி மாங்காயை உப்பு மிளகாய்ப்பொடியில் தொட்டுத் தின்னத் தொடங்குமுன், "டேய் சித்தர் சாமிக்கும் ரெண்டு மாங்காய் கொடுப்போம்'' என்று கிரி சொன்னவுடன், நாங்கள் மகிழ்வோடு "சரி'' என்றோம். அந்த மாங்காயின் ருசிக்கு இணையாக எதையும் சொல்ல முடியாது.

வைகையாற்று தண்ணீரை ஒருகை அள்ளிக் குடித்தபின் சித்தர் பெருமானைப் பார்க்கச் சென்றோம். மடத்துவாசலில் சித்தர் பெருமானைப் பார்க்க நேற்றைவிடக் கூட்டமாக மக்கள் கூடி இருந்தனர். எங்களைப் பார்த்தவுடன் மடத்தின் சின்னத்தம்பிரான் எங்களை மடத்தின் பின்வாசல் வழியாக உள்ளே அழைத்துச் சென்று மற்றொரு கூடத்தில் அமரச் செய்தார். பிறகு சித்தர் அமர்ந்து அனைவரோடும் பேசிக்கொண்டிருந்த அறையில் சித்தருக்கு இடதுபுறத்தில் எங்களை அமரச் செய்தார் தம்பிரான்.

அப்போது பெரும் பணக்காரர் ஒருவர், வெள்ளித் தாம்பாளத்தில் உயர்ந்த பழ வகைகள், தங்கம், பணம் எல்லாம் வைத்து சித்தரின் முன்னே வைத்து வணங்கினார்.

சித்தரின் முகத்தில் எப்போதும் காணப்படும் இனிய புன்னகையைக் காணமுடியவில்லை. அமைதியாக அந்தப் பணக்காரரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"சாமி நான் வேண்டிய அளவு பொருள் தேடிவிட்டேன். நான்கு தலைமுறைக்குச் சொத்துச் சேர்த்துவிட்டேன். ஆனால் மனம் நிம்மதியாக இல்லை. என் செல்வத்தால் நல்ல செயல்கள் செய்ய வழி சொல்ல வேண்டும்'' என வேண்டி நின்றார்.

"ஐயா, உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள். தாங்கள் கொண்டு வந்துள்ள இந்தத் தட்டில் இவ்வளவு ஐஸ்வரியங்கள் உள்ளன. துறவிக்கு எதற்கு இத்தனை செல்வம், பொருளைக் கொடுத்து அருளைப் பெற வந்தீர்களோ?'' என்று சாந்தமாகக் கேட்டார் சித்தர்.

வந்த செல்வந்தர் பதற்றமடைந்து "சாமி நான் தவறாக நடந்திருந்தால் மன்னித்து அருள வேண்டும். பெரியவர்களைப் பார்க்கச் செல்லும்போது வெறும் கையோடு செல்லக் கூடாது'' என்று அவர் தயக்கமாகச் சொன்னார்.

"உண்மைதான், குழந்தைகளை, நோயாளிகளை, பெரியவர்களை, கோவில் தெய்வங்களை காணச் செல்கிறபோது வெறும் கையோடு செல்லக் கூடாதுதான். சற்று இப்படி உட்காருங்கள்'' என்று அவரை அமரச் செய்துவிட்டு எங்கள் பக்கம் மகிழ்வோடு திரும்பிய சித்தர், "குழந்தைகளே, எனக்காக என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்?'' என்று ஆர்வமாகக் கேட்டார்.

நாங்கள் திடுக்கிட்டுப் போனோம். உப்புமிளகாய்ப்பொடி தூவப்பட்ட மாங்காயை எடுத்து நீட்டினான் குச்சிராசு. அதை ஆனந்தமாக கையில் வாங்கிக் கொண்ட சித்தர், அதில் ஒரு கீற்று மாங்காயை எடுத்து வாயில் போட்டபடி "அருமை... அருமை... தேவாமிர்தம். குழந்தைகளே இங்கே இருப்பவர்களுக்கு எல்லாம் கொடுங்கள்'' என்று மகிழ்வோடு சொன்னார்.

எங்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இவர் மந்திரவாதிதானோ? தோப்பில் மாங்காய் பறித்ததை, கல்பாலத்தில் கிரி சித்தருக்குக் கொண்டு போகலாம் என்று சொன்னதை எப்படி கண்டுபிடித்தார்? ஒருவேளை நாங்கள் கொண்டு வராமல் போயிருந்தால்... என்று நாங்களாகவே சிந்தித்துக் கொண்டோம்.

"ஐயா, இதோ இந்தக் குழந்தைகள் நல்ல நாடகம் ஒன்றைப் போடப் போகிறார்கள். நீங்களும் இருந்து பார்க்க வேண்டும். அதற்கு முன் ஒரு வரலாறு சொல்கிறேன் கேளுங்கள். குழந்தைகளே நீங்களும் கேளுங்கள். நான் சொல்லப்போவது புராணம் அல்ல, நடந்த கதை. உயர்ந்த குருவுக்கும் உத்தம சீடருக்கும் இடையில் நடந்த உரையாடல். உயர்ந்த குரு ராம கிருஷ்ண பரமஹம்சர், உத்தம சீடர் யார் தெரியுமா?'' என்று கேட்ட சித்தர், சற்றே நிறுத்தினார்.

"உத்தம சீடர் நரேந்திரரான விவேகானந்தர்'' என்று நாங்கள் மகிழ்ச்சியாய்ச் சொன்னோம்.

"அருமை குழந்தைகளே! கேளுங்கள். விவேகானந்தருடைய இயற்பெயர்தான் நரேந்திரன். நல்ல செல்வக் குடும்பத்தில் பிறந்து செல்வாக்கோடு வளர்ந்து பட்டுக்குடை பிடித்து கல்லூரிக்குப் படிக்கச் சென்றவர்தான் நரேந்திரர். அவரது தந்தையார் திடீர் மறைவும், பங்காளிகளின் பகையும் அவரது குடும்பத்தை வறுமையில் தள்ளியது. உண்ணும் உணவுக்கும் கஷ்டமான நிலை ஏற்பட்டது.

குருநாதரை அடிக்கடி சந்திக்கச் செல்வது நரேந்திரரின் வழக்கம். ஒருநாள் மாலை தம் குருநாதரைக் காண நரேந்திரர் வந்தபோது அவரது வாட்டமான முகத்தைக்கண்ட பரமஹம்சர், 'நரேந்திரா, உனது கலக்கத்திற்கான காரணத்தை நான் அறிவேன். இன்றிரவு என்னோடு தங்க வேண்டும். நள்ளிரவில் அம்பிகை எனக்குக் காட்சி தருவாள். அப்போது நீயே நேரில் சென்று உன் வறுமையைக் கூறி பொன்னும் பொருளும் பெறலாம். இங்கேயே இரு' என்று தன்னோடு தங்கவைத்துக்கொண்டாராம். நள்ளிரவு ஆனது. ஊர் அடங்கிய நேரம். கோவிலுக்குள் இருந்து வேகமாக வந்த குருநாதர் நரேந்திரரைப் பார்த்து `மகனே இதோ இப்போது அம்பிகையின் சந்நிதிக்குள் செல், அந்த உலகநாயகியிடம் உன் குறையைச் சொல்' என்று நரேந்திரரை உள்ளே அனுப்பி வைத்தாராம்.

அரைமணி நேரம் கழித்து வெளியில் வந்த நரேந்திரர் முகத்தில் தெய்வீகப் பரவசம்.

'நரேந்திரா அம்பிகையைக் கண்டாயா?'

'கண்டேன் சாமி'

'உன் வறுமையைச் சொன்னாயா?'

'அதைச் சொல்ல மறந்துவிட்டேனே' என்று நரேந்திரர் சொல்ல குருநாதரும், 'சரி பரவாயில்லை மீண்டும் போ' என்றாராம். நரேந்திரர் மீண்டும் போனார், வந்தார். வறுமையைச் சொல்லவில்லை. மூன்றாம் முறையும் போனார், வந்தார், சொல்லவில்லை. குருநாதருக்குக் கோபம் வந்தது 'என்ன பிள்ளையப்பா நீ, நானோ துறவி என்னிடத்தில் உன் வறுமையைச் சொல்கிறாய். அஷ்ட ஐஸ்வர்யங்களுக்கும் அதிபதியான ஜகதாம்பிகை இடத்தில் உன் வறுமையைச் சொல்ல வேண்டாமா?' என்று கேட்டாராம்.

அதற்கு நரேந்திரர், 'குருநாதா! ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்துக் கோடான கோடி உயிர்களைக் காத்தருளும் உலகமாதாவிடம் ஞானத்தைக் கேட்கலாம். கல்வியைக் கேட்கலாம். ஆனால் வறுமையைத் தீர்க்க கொஞ்சம் செல்வம் கொடு தாயே! என்று கேட்க வெட்கமாக இருந்தது. பேசாமல் வந்துவிட்டேன்' என்று தலையைக் குனிந்தபடி சொன்னாராம் நரேந்திரர்.

குருநாதரின் முகத்தில் வெற்றிப்புன்னகை பிறந்தது. அவரை அப்படியே தழுவிக்கொண்டு சொன்னார் 'நீயே என் உண்மைச்சீடன்' என்றார்'' எனக் கதையை முடித்தார் சித்தர்.

கதை தொடங்கிய போதே உள்ளே வந்து நின்று கொண்டிருந்த என் தந்தையும் குமரேசனாரும் விரைந்து வந்து சித்தர் பெருமானை வணங்கி, "அருமையான செய்தியை உணர்வுப்பூர்வமாகச் சொன்னீர்கள் சுவாமி. நீங்கள் சொன்ன வரலாற்றில் நரேந்திரர் அம்பிகையிடத்தில் பொருள் கேட்டிருந்தால் உலகப் பணக்காரர் ஆகியிருப்பார். ஆனால் நமக்கு ஒரு ஞான சூரியன் கிடைத்திருப்பாரா? மேலை நாடுகளில் நம் நாட்டுத் தத்துவங்களை பரப்பிய ஞானியல்லவா அவர்'' என்றார் என் தந்தை நெகிழ்வோடு.

"ஆம் சாமி, பொருளும் அருளும் வேண்டும்தான். பொருள் இல்லாதாரின் இவ்வுவலக வாழ்வின் இன்மையை உணரமாட்டார்கள். அதே நேரத்தில் பிற உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்களுக்கு சொர்க்கபுரியில் இடம் இருக்காது என்பதை நம் வள்ளுவப் பெருமான்,

"அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு'' எனக் கூறி உள்ளார்'' என மகிழ்வோடு சொன்னார் குமரேசனார்.

நாங்கள் படபடவெனக் கைதட்டினோம்.

No comments: