Friday, December 4, 2009

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை - கனிமொழி வலியுறுத்தல்

"கதிகளாக வந்த இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்'' என்று டெல்லி மேல்-சபையில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார்.

இதுகுறித்து டெல்லி மேல்-சபையில் கவிஞர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

இலங்கையில் 1983-ம் ஆண்டு முதல் நடைபெற்ற இன மோதல்கள் காரணமாக ஏராளமான தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வந்தனர். தற்போது தமிழகத்தில் உள்ள 114 முகாம்களில் 73 ஆயிரத்து 74 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். மேலும், 32 ஆயிரத்து 240 பேர் தனியாக தங்கியுள்ளனர்.

முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான பணம், உடை, உணவு ஆகியவற்றை மத்திய அரசின் உதவியோடு தமிழக அரசு அளித்து வருகிறது. அகதிகளுக்கான வரைமுறைகள் குறித்து 1951-ம் ஆண்டு .நா.சபை இயற்றிய தீர்மானத்தின் கீழ் இந்தியா செயல்பட்டு வருகிறது.

அவர்களின் வருகை, தங்குதல் மற்றும் வெளியேறுதல் ஆகியவை 1946-ம் ஆண்டு வெளிநாட்டவர் சட்டத்தின்கீழ் நடைபெற்று வந்தது.

தற்போது 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதியிட்ட மத்திய அரசின் அரசாணை 370-ன்படி, இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு 1993-ம் ஆண்டிற்கு பின் தற்போது வரை வந்தவர்கள், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கான சட்ட விதிகளின் கீழ் உட்படுத்தப்படுகிறார்கள்.

1983-க்கு பின்னர் வந்தவர்கள் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். எனவே, மத்திய அரசு, இலங்கை அகதிகள் தொடர்பாக உரிய விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன். இதன் மூலம் தேவையற்ற சட்ட பிரச்சினைகள் தவிர்க்கப்படும் என நினைக்கிறேன்.

இதற்கான கெடு தேதியை மேலும் நீட்டிக்க வேண்டும். ஏனெனில் இலங்கையில் இருந்து அகதிகள் வருவது தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும், இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.

இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் இருந்து அகதிகளாக வருகை தந்தோர் அவர்களது சொந்த நாட்டில் வாழ்ந்த காலத்தைவிட தற்போது தமிழகத்தில் அதிக காலம் வாழ்ந்து வருகிறார்கள்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.


No comments: