Thursday, November 26, 2009

மும்பையின் கருப்பு தினம் இன்று !


மும்பையில் தீவிரவாதிகள் பயங்கரமான தாக்குதல் நடத்தி ஒரு ஆண்டு நிறைவடைகிறது. 164 மனிதர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற நாள் 2008 நவம்பர் 26.

மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் 2 பேர் நின்று கொண்டு மக்களை நோக்கி எந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்கள். தப்பித்து ஓட முடியாமல் ஆங்காங்கே பிணங்களாய் சாய்ந்தார்கள்.

இங்கு தாக்குதல் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் கொலபாவில் உள்ளலியோ போல்டு கேப்என்ற ஓட்டலில் இன்னொரு பிரிவு தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டு தள்ளினார்கள்.

இதற்கிடையில்வில் பார்லே என்ற இடத்திலும், வாடிபந்தர் என்ற இடத்திலும் வாடகை கார்களில் குண்டுகள் வெடிக்கின்றன.

பல்வேறு பிரிவுகளாக சென்ற தீவிரவாதிகள் கடற்கரை தாஜ் ஓட்டல், ஒபராய் ஓட்டல், நரிமண் பாயிண்டில் உள்ள இஸ்ரேலியர்கள் குடியிருப்பு, காமா ஆஸ்பத்திரி ஆகியவற்றுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டனர்.

தாக்குதல் நடந்த அத்தனை இடங்களிலும் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேரடி துப்பாக்கி சண்டை நடந்தது.

இரவு முழுவதும் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் மட்டும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு தீவிரவாதி உயிரோடு பிடிபட்டான்.

3 இடங்களிலும் மறைந்திருந்த தீவிரவாதிகள் 28-ந் தேதி முழுவதும் தாக்குதல் நடத்திய படியே இருந்தனர். கண்ணில் எதிர்பட்டவர்களை எல்லாம் சுட்டு வீழ்த்தினர். கமாண்டோ படையினர் அதிரடியாக தாக்கி ஒவ்வொரு தீவிரவாதியாக சுட்டுக்கொன்றனர். ஆனாலும் தாஜ் ஓட்டலிலும், ஒபராய் ஓட்டலிலும் தீவிரவாதிகள் தொடர்ந்து சுட்டபடி இருந்தனர். 3-வது நாளாக 29-ந்தேதியும் அவர்கள் தாக்குதல் நீடித்தது. அன்று காலை 8 மணிக்கு அங்கிருந்த கடைசி தீவிரவாதியையும் சுட்டுக்கொன்றனர்.

இத்துடன் தீவிரவாதிகள் தாக்குதலும் முடிவுக்கு வந்தது. 164 பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டு இருந்தனர். 308 பேர் காயம் அடைந்தனர்.

ஒன்றும் அறியாத அப்பாவிகள், குழந்தைகள், பெண்கள் என இத்தனை பேர் உயிரிழந்த சம்பவம் நம்மை எல்லாம் உலுக்கி விட்டது.

இந்த தாக்குதல் நடந்து இன்று முதல் ஆண்டு நிறைவு பெறுகிறது. மும்பை சந்தித்த அந்த கறுப்பு தினம் இன்றும் வாழ் நாளில் மறக்க முடியாத ஒன்றாகவே அமைந்து விட்டது.


மும்பையில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போலீசார் சிறப்பு அணி வகுப்பு நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. மராட்டிய போலீஸ், அதிரடிப்படையினர், தீவிரவாதிகள் எதிர்ப்பு படை, போர்ஸ் ஒன் படை, அதிவிரைவு படை ஆகியவற்றின் வீரர்கள் இந்த அணி வகுப்பில் கலந்து கொண்டனர்.

தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த நாரிமன் பாயிண்ட், ஓபராய் ஓட்டல் அருகில் இருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பு தெற்கு மும்பை சவ்பாத்தி வரை நடந்தது. இதில் போலீஸ் கவச வாகனங்களும் அணி வகுத்து வந்தன.

இந்த நிகழ்ச்சியில் முதல் -மந்திரி அசோக் சவான், துணை முதல்-மந்திரி பூஜ்பால், மந்திரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த மற்றொரு இடமாக சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் ரெயில்வே துறை சார்பில் ரத்ததான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏராளமானோர்கியூவில்நின்று ரத்த தானம் செய்தனர்.

தாக்குதலுக்கு ஆளான லியோ போர்ஜி ஓட்டலிலும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தன. அந்த ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

தாஜ் ஓட்டலில் இன்று மாலை 6 மணிக்கு விசேஷ பிரார்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் கலந்து கொள்கின்றனர்.

இன்று காலையில் இருந்தே தாஜ் ஓட்டல் முன்பு ஏராளமான பொதுமக்கள் கூடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். சிலர் தேசிய கொடி ஏந்தியபடி நின்றிருந்தனர்.

தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பான நினைவு கண்காட்சி ஒன்று மரைன்டிபைட் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. இதை இன்று மாலை 6 மணிக்கு மத்திய மந்திரி .சிதம்பரம் தொடங்கி வைக்கிறார். பின்னர் நாரிமன் இல்லத்துக்கு சென்று உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

மும்பை நகரமே இன்று ஒருவித சோகத்தில் ஆழ்ந்து இருந்தது. ஆங்காங்கு நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அவர்களாகவே நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தீவிரவாத தாக்குதலுக்கு பலியான பொது மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு எங்கள் அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

No comments: