Monday, November 30, 2009

ஆணவம் இழத்தலே பக்தி...

"செயற்கரிய செய்வர் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்''


என்ற திருக்குறளை குமாரசாமி அவர்கள் எழுந்து கூறியதோடு அதற்கு பொருளும் சொல்லத் தொடங்கினார்.

"நண்பர்களே, இந்த உலகில் அரிய செயல் என்று நாம் சொல்லுகிற செயல்களைச் செய்யும் வல்லமை படைத்தவர்கள் யார் தெரியுமா? நம் மனம் விரும்பியவற்றை எல்லாம் மனம்போனபடி செய்து முடிக்காமல், அதனை அடக்கி, எளிதாக எவரும் செய்ய முடியாத அரிய காரியங் களைச் செய்து முடிப்பவர்களைத்தான், வல்லமை உடையவர்கள் என்று குறிப்பிடுகிறோம்.

நம் சித்தர் பெருமான் குறிப்பிட்ட தாமஸ் ஆல்வா எடிசனும், கிரகாம்பெல்லும் அத்தகைய வல்லமை உடைய பெரியவர்கள்தான். அவர் களின் கண்டுபிடிப்புகள்தானே இன்றும் கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்து பயன்தருகிறது!'' என குமரேசனார் சொல்லிக்கொண்டு வந்தபோது, "மனம் போன போக்கு என்றால் என்ன தெரியுமா?'' என்று இடையில் குறுக்கிட்டு கேட்ட சித்தர், எங்களை நோக்கி, "குழந்தைகளே, நீங்கள் முழுப்பரீட்சைக்கு படித்துக் கொண்டிருக்கிறீர்கள்; அப்போது வீட்டிற்குள் மசால்வடையின் வாசம் மூக்கைத் துளைக்கிறது. வெளியில் பேண்டு வாசித்தபடி நடனமாடி வருவதைப் பார்க்க எல்லோரும் ஓடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மூக்கு, கண், காது, வாய் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது உங்களின் அறிவுதான், மனம்தான். அப்படி மனதை அடக்கினால் அரிய செயல் களைச் செய்யலாம்'' என சித்தர் சிரித்தபடி கூறினார்.

நானும் நண்பன் கிரியும் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்துக் கொண்டும் அவரின் பேச்சை கேட்டுக் கொண்டும் இருந்தோம்.

"சாமி, நான் வீட்டிற்குப் புறப்படும் முன் ஒரு கேள்வி. உண்மையான பக்தி நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்?'' என ஒருவர் கேட்டார். அப்போது சித்தர் "ஆணவத்தை கைவிட வேண்டும்'' என்று கூறினார்.

"எனக்கு ஆணவமே இல்லையே!'' என்றார் கேள்வி கேட்டவர்.

"இப்படிச் சொல்வதிலும் ஆணவம் உண்டு'' என்று சிரித்த சித்தர், "அர்ச்சுனனுக்கு ஆணவம் ஏற்பட்ட கதை தெரியுமா?'' என கேட்டார்.

"யாரு, பஞ்சபாண்டவர்கள்ல ஒருத்தர், வில்லுக்கு விஜயன், கண்ணபரமாத்மாவின் மைத்துனன், அந்த அர்ச்சுனனைத்தானே சொல்றீங்க?'' வெகு விளக்கமாக கேட்டார் அவர்.

"ஆமாம்! ஆமாம்...! அந்த அர்ச்சுனனைத்தான் சொல்கிறேன். அவனுக்கு என்ன ஆணவம் ஏற்பட்டது தெரியுமா? இதோ எனக்கு தேரோட்டிக் கொண்டிருக்கும் இந்த கண்ண பெருமானைக் காண இந்த உலகத்தோர் எத்தனையோ பேர் தவம் மேற்கொள்கிறார்கள். பக்தியும், பூசைகளும் செய்கிறார்கள். ஆனால் என்னைப் போன்று இந்தக் கண்ணன் மீது அதிக பக்தி கொண்டவர்கள் வேறு யாராவது இந்த உலகில் இருக்க முடியுமா?'' என்று நினைத்த அர்ச்சுனன் அதை கண்ணனிடம் வாய் விட்டே கேட்டானாம்.

"கண்ணா! எனக்கொரு சந்தேகம்'' என அர்ச்சுனன் தொடங்க, "கேள் அர்ச்சுனா, எனக்கு இந்த உலகில் கேள்வி கேட்பவர்களைத்தான் அதிகம் பிடிக்கும்'' என புன்னகையோடு கண்ணபரமாத்மா கூறினாராம்.

"இவ்வுலகில் உன் மீது பக்தி கொண்டவர்களில் என்னைக்காட்டிலும் சிறந்த பக்திமான் யாராவது உண்டா?'' என சற்று ஆணவத்துடனே கேட்டானாம் அர்ச்சுனன்.

அவனது கேள்வியை மனதில் வாங்கிக் கொண்ட கண்ணபிரான் சற்றுநேரம் யோசித்துவிட்டு, "அர்ச்சுனா என்னோடு புறப்படு'' எனச்சொல்ல, அர்ச்சுனனும் என்ன, ஏது என எதுவும் கேட்காமல் கண்ணனோடு புறப்பட்டு விட்டானாம்.

கண்ணபெருமான் தன் தேர்ப்பாகனிடம், "ïரசன்மனின் நாட்டிற்கு உடனே செல்ல வேண்டும், தேரை விரைந்து செலுத்து'' எனச் சொல்ல, அந்தத் தேர் காற்றைவிட வேகமாக ïரசன்மனின் தேசமாகிய ï நாட்டிற்கு விரைந்ததாம்.

அந்நாட்டின் அரசனாகிய ïரசன்மன் கண்ணபிரான் வந்திருக்கிறார் என்பதை அறிந்து விரைந்து வந்து, அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி, "பெருமானே! சொல்லி அனுப்பி இருந்தால் நானே நேரில் வந்திருப்பேனே! எளியேனாகிய என்னைக்காண தாங்கள் வரவேண்டுமா?'' என பணிவோடு கேட்டானாம்.

அவனது வரவேற்பை ஏற்றுக்கொண்ட கண்ணபிரான், "ïரா, உன்னிடத்தில் ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது, உடனே செய்வாயா?'' எனக் கேட்க, "ஆணையிடுங்கள் சுவாமி'' என்றான் ïரன்.

"உனக்கு நெடுநாள் கழித்து ஒரு மகன் பிறந்தான் அல்லவா?'' என கண்ணன் கேட்க, "ஆமாம் சுவாமி, தங்களின் திருக்கருணையால் பிறந்த ஒரே மகன். இந்நாட்டின் எதிர்கால மன்னன். தற்போது 8 வயதுச்சிறுவன். இதோ தங்களிடம் ஆசி பெற அன்னையோடு வருகிறான் பாருங்கள்'' எனத்தன் மகனையும் மனைவியையும் அழைத்தான்.

"நல்லது ïரா, நானே இவர்களை அழைக்க வேண்டுமென்றிருந்தேன். நான் உன்னிடம் ஒரு பொருளை கேட்க வந்திருக்கிறேன். நீயும், உன் மனைவியும், உன் மகனும் சம்மதித்தால் மட்டுமே அதை எனக்குத்தர முடியும். நன்கு யோசித்துச் சொல்லுங்கள். முடியாது என்றாலும் நான் கோபிக்க மாட்டேன். எனது பக்தன் அர்ச்சுனனோடு என் நாடு செல்வேன்'' எனக் கண்ணபிரான் தயக்கத்தோடு கூறினார்.

"கண்ணபிரானே, எங்களை சோதிக்க வேண்டாம். சொன்ன சொல் தவறமாட்டோம். தயங்காமல் ஆணையிடுங்கள்!'' என ïரசன்மனும், அவனது மனைவியும், மகனும் வேண்டி நின்றனர்.

"சரி, ïரா கேள், நான் உன்னிடத்தில் கேட்கவந்த பொருள் இதுதான். இதோ உன் ஒரே மகனாகிய, இந்நாட்டின் எதிர்கால மன்னனான இந்தச் சிறுவன் உடலின் வலது பாகத்தை மட்டும் அறுத்து எடுத்து எனக்குத்தர வேண்டும். உன் மகனை இந்தச்சபையின் நடுவே நிறுத்தி, ஒரு ரம்பத்தால் நீ ஒருபுறமும், உன்மனைவி ஒருபுறமும் பிடித்துக் கொண்டு அவனது உடலை அறுத்து எடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அப்படி உடலை அறுத்தெடுக்கும்போது நீ கண்ணீர் சிந்தி அழக்கூடாது, உன் மனைவியும் அழக்கூடாது. ஏன், அறுபடுகிற இந்தச்சிறுவனும் கண்ணீர் சிந்தக்கூடாது. வருந்திக் கண்ணீர் சிந்தித்தரும் பொருளை நான் எப்போதும் பெற மாட்டேன்! என்ன அர்ச்சுனா நான் சொல்வது சரிதானே?'' என கண்ணபிரான் அர்ச்சுனனிடம் கேட்க, அர்ச்சுனன் அப்படியே திகைத்து சிலைபோல அசைவற்று நின்றுவிட்டார் என்று சித்தர் சொல்லிக் கொண்டே வர, கதை கேட்டுக் கொண்டிருந்த நாங்களும் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தோம்.

"ïரா, நான் கேட்பதை கேட்டுவிட்டேன். தருவதோ, மறுப்பதோ உன் விருப்பம்.'' என கண்ணபிரான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ïரசன்மன் தன் மகனை அந்தச் சபையின் நடுவே நிறுத்தி, பணியாளர்களிடம் மரம் அறுக்கும் ரம்பத்தை விரைந்து கொண்டு வருமாறு செய்து, தான் ஒருபுறமும், மனைவி மறுபுறமுமாக, கண்டோர் நடுங்கும் வண்ணம் தன்மகனைக் கூறுபோடத் தொடங்கினான்.

அங்கிருந்த சபையோரும், அர்ச்சுனனும், இதைக்கண்டு அஞ்சி விலகி நிற்க, கண்ண பிரான் அவர்கள் மூவரையும் சுற்றிவந்தபடி, "யாரும் வருந்தக்கூடாது, கண்ணீர் சிந்தக்கூடாது, கண்ணீர் சிந்தித்தரும் பொருளை நான் ஏற்க மாட்டேன்'' என சத்தமிட்டபடி இருந்தார்.

அப்போது அந்தச் சிறுவனின் இடது கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது. அதைப்பார்த்த கண்ணபிரான், "நிறுத்து, நிறுத்து... என் பேச்சை மீறிவிட்டீர்கள், கண்ணீர் வரக்கூடாது என்பது என் கட்டளை. இதோ, இப்பையனின் இடது கண்ணில் கண்ணீர். நான் பார்த்துவிட்டேன். எனவே எனக்கு சிறுவனின் வலது பாகம் எனக்கு வேண்டாம் - அர்ச்சுனா, புறப்படு'' என்று கோபமாக கண்ணன் புறப்பட, அந்தச் சிறுவன் இரத்தம் சிந்திய உடலோடு கண்ணனைத் தன் கைகளால் கூப்பி வணங்கியபடி, "கண்ணபிரானே, பொறுத்தருள வேண்டும். என் இடது கண்ணில்தான் கண்ணீர் வருகிறது. இந்தக்கண்ணீரும் ஏன் வருகிறது தெரியுமா? உடல் வேதனையால் வரவில்லை. எம் கண்ணபிரான் இந்த உடலின் வலது பாகத்தை மட்டும் கேட்டிருக்கிறாரே, இடது பக்கமாகிய நான் என்ன பாவம் செய்தேன். முழு உடலும் அவர் தந்ததுதானே என நினைத்துதான் இடது புறம் உள்ள கண்ணில் கண்ணீர் சிந்தியதேயன்றி, வேதனையால் அல்ல'' என அந்தச்சிறுவன் சொல்ல, அர்ச்சுனன் இடி விழுந்தவன் போல் ஆனான். "ஆகா! இதுவன்றோ பக்தி... இவர்களல்லவோ பக்திமான்கள்..., இந்த உலகத்தில் கண்ணபிரானிடத்தில் அதிக பக்தி வைத்திருப்பவன் நான்தான் என்று எண்ணி ஆணவத்தால் அறிவு கெட்டுப்போனேனே'' என தலைதாழ்த்தி கண்ணீர் சிந்தினானாம்.

"அர்ச்சுனா கலங்காதே, கவலைப்படாதே... உனக்காகவே நான் இந்த நாடகத்தை நடத்தினேன். ïரசன்மன் மட்டுமில்லை, என்னை உணர்ந்தவர்கள் அவனது மனைவியும், அந்தச் சிறுவனும்கூடத்தான். எவன் ஒருவன் `தான்' என்ற ஆணவத்தை விடுத்து, தான் வணங்கும் கடவுளுக்கு உடல், பொருள், ஆவியைத் தரத் துணிகிறானோ அவனது பக்தியே உண்மையான பக்தி'' எனக் கண்ணபிரான் கூறி அந்தச் சிறுவனை நலப்படுத்தினார். பின்னர் அவர்களை கண்ணன் ஆசிர்வதித்து, அர்ச்சுனனோடு தன் நாடு திரும்பினானாம்'' என சித்தர் சொல்லி முடித்தபோது,

"அன்றே எந்தன் ஆவியும் உடலும் உடைமையும் எல்லாமும்
குன்றே அணையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ?
இன்றோர் இடைïறு எனக்கு உண்டோ?
எண்தோள்முக்கண் எம்மானே!

நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே''


-என அம்மடத்திலிருந்த தம்பிரான் ஒருவன் கணீரென்ற குரலில் ஆவேசம் வந்தவர் போல மாணிக்கவாசகரின் திருவாசகத்தைப் பாட

"தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி''
என அங்கிருந்த அனைவரும் உரக்க சத்தமிட்டோம்.

அப்போது என் தந்தையார் எழுந்து, "சாமி, நீங்கள் ஒவ்வொரு கருத்தையும் கதையாக சொல்லி முடிக்கும்போது இத்தகைய பக்தி வெளிப்படுவதை நான் பார்க்கிறேன். இதோ, நம் தம்பிரான் 'குழைத்த பத்து' எனும் திருவாசகத்தைப் பாடியதே இதற்கு சாட்சி. நீங்கள் ஓய்வெடுங்கள். நாங்கள் புறப்படுகிறோம்'' எனச்சொல்ல, நாங்கள் புறப்பட்டோம்.

கு.ஞானசம்பந்தன்

1 comment:

ஜெயக்குமார் said...

அருமையான கட்டுரை. மிக நன்றாய் இருந்தது.