Thursday, November 26, 2009

வெள்ளை மாளிகையில் நேற்று !


இந்தியா-அமெரிக்கா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் மன்மோகன் சிங்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் 1 1/2 மணி நேரம் சந்தித்து பேசினார்கள். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா விருந்து அளித்தார். பின்னர் இரு தலைவர்களும் இந்தியா-அமெரிக்கா இடையேயான பிரச்சினைகள், பரஸ்பர உறவை மேம்படுத்துதல், தீவிரவாதத்தால் எழுந்துள்ள சவால்களை சமாளித்தல், பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த பேச்சுவார்த்தை 11/2 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா அளித்து வரும் உதவிக்கு பிரதமர் மன்மோகன் சிங் நன்றி தெரிவித்தார்.

கல்வித்துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது என்று இந்த பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டது. 'மன்மோகன் சிங்- ஒபாமாவின் 21-ம் நூற்றாண்டு அறிவுசார் மேம்பாட்டு நடவடிக்கை' என்ற பெயரில் ரூ.50 கோடி செலவில் மேற்கொள்ளப்பட இருக்கும் இந்த ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இரு நாடுகளின் கல்வித்துறை நிபுணர்களும் பல்கலைக்கழகங்களின் மாணவர்களும் சந்தித்து விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்றவை தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.

சுகாதார துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, போலியோ போன்ற நோய்களை ஒழிப்பதற்காக அமெரிக்காவின் உதவியுடன் இந்தியாவில் பிராந்திய நோய் கண்டறியும் மையம் அமைக்கப்படும்.

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது, எரிசக்தி பாதுகாப்பில் ஒத்துழைப்பை அதிகரிப்பது, வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்றவை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது; உலகின் ஒட்டு மொத்த நாகரீக சமுதாயத்துக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை மன்மோகன் சிங்கும் ஒபாமாவும் வலியுறுத்தினார்கள். இந்தியாவின் அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்களால் அந்த பிராந்தியத்துக்கு அப்பாலும் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் இரு தலைவர்களும் கவலை தெரிவித்தனர். அத்தகைய குழுக்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

அல்கொய்தாவும் பிற தீவிரவாத இயக்கங்களும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்று ஒபாமா கூறினார்.

மன்மோகன் சிங்கும் ஒபாமாவும் கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். அதிலும் தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று உள்ளன.

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்குவதாகவும், அங்கு செயல்படும் தீவிரவாத குழுக்களை ஒழித்துக் கட்ட இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூட்டறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

******************************************************************************

வெள்ளை மாளிகையில் ஏ.ஆர்.ரகுமான் இன்னிசை நிகழ்ச்சி

மிச்செலி ஒபாமாவுடன் ரஹ்மான்

வெள்ளை மாளிகையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த விருந்தில் இரண்டு நாடுகளை சேர்ந்த பல்வேறு முக்கிய பிரபலங்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

'ஆப்கா ஸ்வாகத் ஹை' (தங்களை வரவேற்கிறேன்) என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்தியில் ஒபாமா கூறினார். ஒபாமாவுக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது குறித்து மன்மோகன் சிங் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

ஆலிவுட் பிரபல இயக்குனர்கள் ஸ்டீபன் ஸ்பீல்ஸ்பெர்க், எம்.நைட் சியாமளன், லூசியான கவர்னர் பாபி ஜிந்தால், வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன், ராணுவ மந்திரி ராபர்ட் கேட்ஸ், நிïயார்க் மேயர் மிக்கேல் புலும்பர்க், ஆலிவுட் நடிகை ஜெனிபர் ஹட்சன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் இந்திய தொழில் அதிபர்கள் ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, எஸ்.எஸ்.சத்வால் தீபக் சோப்ரா, சஞ்சய் குப்தா, அமர்தியா சென், இந்திரா நூயி மற்றும் அமெரிக்க வாழ் இந்திய பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

ஆஸ்கார் விருதுகளை வென்ற பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் விருந்தில் பங்கேற்றார். மேலும் விருந்து நிகழ்ச்சியில் அவருடைய இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பிரதமர் மன்மோகன் சிங் இரண்டாவது முறையாக விருந்துக்கு அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, புஷ் அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கப்பட்டது.


No comments: