Wednesday, November 25, 2009

மன்மோகன்சிங் ஒபாமா சந்திப்பு

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, அமெரிக்க வெள்ளை மாளிகையில், அதிபர் ஒபாமா உற்சாக வரவேற்பு அளித்தார். பின்னர் இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நேற்று காலை வெள்ளை மாளிகையில் 19 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் மன்மோகன்சிங் இருவரும் வெள்ளை மாளிகையின் கிழக்கு அறைக்கு வந்ததும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அப்போது ஒபாமாவின் மனைவி மிச்செலி, மன்மோகன்சிங்கின் மனைவி குர்சரண் கவுர் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சி வெள்ளை மாளிகையின் புல்வெளியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக, வெள்ளை மாளிகை அறைக்கு நிகழ்ச்சி மாற்றப்பட்டது. சம்பிரதாய முறைப்படி அளிக்கப்பட்ட வரவேற்பின்போது இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. அதிபராக ஒபாமா பதவி ஏற்றபின், வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு அதிகாரப்பூர்வமாக அளிக்கப்படும் முதல் வரவேற்பு நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. மன்மோகன்சிங்கை வரவேற்ற ஒபாமா, கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அமெரிக்காவுக்கு வருகை தந்ததை நினைவு கூர்ந்தார்.

வரவேற்பின்போது, "நீங்கள்தான் எனது தலைமையிலான ஆட்சியின் முதல் அதிகாரபூர்வ விருந்தினர். இந்த அங்கீகாரத்துக்கு நீங்களும் இந்திய நாடும் தகுதி பெற்றவர்கள்'' என்று, மன்மோகன்சிங்கிடம் ஒபாமா கூறினார். "இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உலக பொருளாதார சரிவை மீட்டு பலப்படுத்த முடியும். நாம் திட்டமிட்டுள்ள வருங்கால கட்டமைப்பில் இந்தியாவின் பங்கு தவிர்க்க முடியாதது'' என்றும் ஒபாமா புகழாரம் சூட்டினார். இந்தியாவை 'ஆசியாவின் தலைவர்' என்றும் ஒபாமா வர்ணித்தார்.

இந்தியாவை அணுசக்தி நாடு என்று முதல் முறையாக பகிரங்கமாக அங்கீகரித்த ஒபாமா, "அணுசக்தி நாடுகள் என்ற முறையில் உலகின் அதிபயங்கர அணு ஆயுத பரவலை நாம் தடை செய்ய முடியும்'' என்றும், "பயங்கரவாத ஒழிப்பு, தூய்மையான சுற்றுச்சூழல், அணு ஆயுதமற்ற உலகை உருவாக்குவதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்'' என்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு மன்மோகன்சிங்கும், பயங்கரவாத ஒழிப்பு, சுற்றுச்சூழல் தூய்மை, அணு ஆயுதங்களற்ற உலகை உருவாக்குவதில் நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். ஒபாமாவுக்கும் அமெரிக்க மக்களுக்கும் 100 கோடி இந்திய மக்கள் சார்பில் நட்பு ரீதியான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட மன்மோகன்சிங், அமெரிக்காவையும், இந்தியாவையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று கூறி வரவேற்புரையை முடித்துக் கொண்டார்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிவடைந்ததும் ஒபாமா-மன்மோகன்சிங் இருவரும் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இரு நாடுகளின் பரஸ்பர நல்லுறவு, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து இரு தலைவர்களும் பேசினார்கள்.

பயங்கரவாத ஒழிப்பு, பருவநிலை மாற்றம், பொருளாதார மற்றும் வர்த்தக உறவு, விவசாயம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். பிரதமர் மன்மோகன்சிங் அழைப்பை ஏற்று, அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருவதற்கு ஒபாமா ஒப்புக்கொண்டார்.

பேச்சுவார்த்தை முடிவில், அதிபர் ஒபாமாவும், பிரதமர் மன்மோகன்சிங்கும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். இந்தியா தற்போது உயிர்த்துடிப்புள்ள பொறுப்பான உலக சக்தியாக விளங்குவதாக ஒபாமா கூறினார். பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது:-

"பருவ நிலை மாற்றம் தொடர்பாக நாங்கள் இருவரும் நடத்திய பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் அணுசக்தி நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று நம்புகிறேன்.

இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு அமெரிக்கா உறுதி பூண்டு இருப்பது பற்றி மன்மோகன்சிங்கிடம் மீண்டும் உறுதி அளித்து இருக்கிறேன். அணுசக்தி தொழில்நுட்ப பரிமாற்றம் தடைகள் நீக்கப்படும்.

அமெரிக்காவின் புலனாய்வு மற்றும் உளவு அமைப்புகள், தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் இந்தியாவுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதில் அமெரிக்கா தலையிடாது. அதே நேரத்தில் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பதற்கு இரு நாடுகளையும் ஊக்குவிப்போம்''.

இவ்வாறு ஒபாமா கூறினார்.

பிரதமர் மன்மோகன்சிங் அளித்த பேட்டியின்போது அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் அமல்படுத்துவதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அதிபர் ஒபாமா உறுதி அளித்ததாக தெரிவித்தார். பின்னர் இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

தொடர்ந்து அதிபர் ஒபாமா மன்மோகன்சிங்குக்கு விருந்து அளித்தார். வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில் 300-க்கு மேற்பட்ட அழைப்பாளர்கள் பங்கேற்றனர்.


1 comment:

முனைவர் இரத்தின.புகழேந்தி said...

பல பயனுள்ள தகவல்கள் உங்கள் பக்கத்தில் உள்ளன நண்பரே.வாழ்த்துகள்.
ஐ.நா.சபை தலைவர் பற்றி தேடியபோது உஙள் பக்கம்தான் முதலில் வந்தது. வாழ்த்துகள்.