Tuesday, November 24, 2009

நடுநிலையுடன் எழுதியதற்கு நம்மீது பாய்வதா? - கருணாநிதி விளக்கம்

பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- நீங்கள் 18-11-2009 அன்று "நம் மவுன வலி; யாருக்கு தெரியப் போகிறது?'' என்ற தலைப்பில் எழுதிய கடிதம் பற்றி பலபேர் ஒன்றுபட்ட கருத்துக்களை தெரிவித்த போதிலும், ஒருசிலர் அதை ஏற்காமல் விமர்சனம் செய்கிறார்களே?

பதில்:- ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன- அதே நேரத்தில் இளந்தலைவர் ராஜீவ்காந்தியும், நாவலர் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும், முகுந்தனும், சிறீ சபாரத்தினமும், பத்மநாபாவும், யோதீஸ்வரனும் கொல்லப்பட்ட போது, அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கிய போது - அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்துவதற்கு எனக்கு உரிமை இல்லையா?

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த தமிழ்ச் செல்வன் மறைந்தபோது 4-11-2007 தேதிய பத்திரிகைகளில் நான் ஒரு இரங்கல் கவிதை எழுதினேன். அது,

"எப்போதும் சிரித்திடும் முகம் எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்! இளமை, இளமை, இதயமோ; இமயத்தின் வலிமை, வலிமை! கிழச் சிங்கம் பால சிங்கம் வழியில் பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி! உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம வாலிபன் - உயிரனையான் - உடன்பிறப்பனையான்; தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா; எங்கு சென்றாய்?''

மடிந்த ஒருவருக்கு அனுதாபம் தெரிவித்ததைக் கூட, ஜெயலலிதாவினால் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் வெளியிட்ட அறிக்கையில் புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு இருக்கின்றது என்றும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தவர்தான் அவர். அப்படியெல்லாம் அறிக்கை விட்டவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல், சொல்ல மனம் இல்லாமல் அல்லது துணிவு இல்லாமல் என்மீது பாய்கிறார்களே; தமிழ் இனம் தாழ்வதற்கும், வீழ்வதற்கும் இதைவிடக் காரணங்கள் இருக்க முடியுமா என்று எண்ணிப் பாருங்கள்!

கேள்வி:- விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றி நேரடியாக எந்த விதமான தனிப்பட்ட குற்றச்சாட்டினையும் கூறாமல், அந்த இயக்கத்தின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களையெல்லாம் சுட்டிக்காட்டி, தெளிவில்லாமல் அவசரப்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் அல்லவா இத்தனை பாதிப்புகள் என்று வேதனையோடு எழுதியிருந்தீர்கள். அந்த கடிதத்தை அனைவரும் பாராட்டி எழுதியிருந்தார்கள். ஆனால் விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சிலர் மட்டும், குறிப்பாக எதிர்க்கட்சி தலைவி ஜெயலலிதா உள்பட தாங்கள் பிரபாகரனை கடுமையாகத் தாக்கி எழுதி விட்டதைப்போல அறிக்கை விடுத்துள்ளனரே?

பதில்:- பிரபாகரனைப் பற்றி அறிக்கை அல்ல, கடிதம் அல்ல, .தி.மு.. ஆட்சி காலத்தில் 16-4-2002 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் ஜெயலலிதா முன்மொழிந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் வருமாறு:-

* "இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது.

* விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.

* ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது பற்றிய வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றம், ராஜீவ்காந்தி கொலையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும் சம்பந்தப்பட்டிருப்பதை எடுத்துரைத்து இருப்பதோடு, பிரபாகரனை அந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளி என்ற அறிவிப்பை செய்துள்ளதால் இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று நமது இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக்கொண்டு வரவேண்டும்.''

இப்படியொரு தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்து நிறைவேற்றியவர்தான் தற்போது நான் நல்லதையெண்ணி நடுநிலையுடன் எழுதியதற்கு நம் மீது பாய்கிறார். பிரபாகரனை; என்றைக்கும் ஆதரிப்பேன் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களும், அம்மையாருக்கு துணை போய் நம்மைத் தாக்கி அறிக்கை விடுகிறார்கள்.

கேள்வி:- துரோகிகளுக்குப் பாராட்டுப் பத்திரம் நீங்கள் வழங்குவதாக ஒருவர் அறிக்கை விட்டிருக்கிறாரே?

பதில்:- உண்மைதான் -துரோகிகள் யார் என்று தெரியாமல் அவர்களுக்கு சில காலம் பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கொண்டிருந்து விட்டேன்!

கேள்வி:- தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களில் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவதற்காக அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எடுத்த முடிவிற்கிணங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதா?

பதில்:- இத்திங்கள் 2-ந் தேதியன்று தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் முகாம்களை மேம்படுத்துவது குறித்து ஒரு ஆய்வு கூட்டம் என்னுடைய தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலினையும், மற்ற அமைச்சர் களையும் தமிழகத்திலே உள்ள 115 முகாம்களையும் ஆய்வு செய்து 10-11-2009-ந் தேதிக்குள் எனக்கு அறிக்கை தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அவ்வாறே அமைச்சர்கள் அனைவரும் அந்த முகாம்களைப் பார்வையிட்டு எனக்கு அறிக்கையினை அளித்தார்கள்.

அந்த அறிக்கைகள் அமைச்சரவையிலே 12-11-2009 அன்று விவாதிக்கப்பட்டு -இறுதியாக ரூ.100 கோடி அதற்காக நிதி ஒதுக்கீடு அரசின் சார்பிலே செய்யப்பட்டது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இலங்கை தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களை உடனடியாக செயல்படுத்துவதற்கும் முதற்கட்டமாக ரூ.45 கோடி ஒப்பளிப்பு அளிக்கப்பட்டு 20-11-2009 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

இந்த நிதியிலிருந்து என்னென்ன பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் தெரிவிக்க விரும்புகிறேன். பழுது நீக்கம் செய்தல், புதுப்பிக்க வேண்டிய வீடுகளுக்காக ரூ.15 கோடியே 22 லட்சமும் - புதிய ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் கைப்பம்புகள் அமைத்தல், பழுது நீக்கம் செய்ய வேண்டிய ஆழ்குழாய் கிணறுகள், பழுது நீக்கம் செய்ய வேண்டிய கைப்பம்புகள், புதிய மேல்நிலைத் தொட்டிகள், பழுது நீக்கம் செய்ய வேண்டிய மேல்நிலைத் தொட்டிகள், புதிய குழாய்கள் பதித்தல் மற்றும் விரிவுபடுத்தல் ஆகியவற்றுக்காக ரூ.4 கோடியே 15 லட்சமும் -புதிய கழிவறைகள் கட்டுதல், பழுது நீக்கம் செய்ய வேண்டிய கழிவறைகள், புதிய கழிவு நீர் கால்வாய்கள் அமைத்தல், பழுது நீக்கம் செய்ய வேண்டிய கழிவு நீர் கால்வாய்கள் ஆகியவற்றுக்காக ரூ.7 கோடியே 67 லட்சமும்- முகாம்களில் உள்ள சாலைகளை பழுது நீக்கம் செய்ய ரூ.72 லட்சமும் - மின் கம்பங்கள் மற்றும் தெரு விளக்குகளுக்காக ரூ.2 கோடியே 82 லட்சமும் - வீடுகளில் உள்ள மின் கம்பிகள் பழுது நீக்கம் செய்தல் மற்றும் மின் உபகரணங்களை மாற்றுதல் ஆகியவற்றுக்காக ரூ.6 கோடியே 76 லட்சமும் என மொத்தம் ரூ.37 கோடியே 33 லட்சத்துக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது.

இதுதவிர நலத் திட்டங்களான - உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்தல், இலவச கலர் டி.வி.களை வழங்குதல், திருமண நிதி உதவி வழங்குதல், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், ஊனமுற்றோர்க்கு உபகரணங்கள் வழங்குதல், ஈமக்கிரியைக்கான தொகையை உயர்த்துதல், மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்குதல் போன்றவைகளை சம்பந்தப்பட்ட துறைகள் பொறுப்பேற்று உடனடியாக நிறைவேற்றிடவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்ற முடிவுகள் குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுவிட்டன.

ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.100 கோடியில், இதற்கான செலவுகள் போக எஞ்சியுள்ள தொகையில் தக்கதொரு கட்டிட வடிவமைப்பை ஏற்படுத்தி, தகுதியான நிலத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர் புதிய கான்கிரீட் வீடுகள் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கட்டுவதற்கு தனியாக நடவடிக்கை எடுக்கப்படவும் உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


No comments: