Friday, July 3, 2009

இலங்கைத் தமிழர் - வரலாற்றுச் சுவடுகள் (24)

யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் போலிஸ் தாக்குதல் 9 பேர் பலி
****************************

லங்கையில், யாழ்ப்பாணத்தில் 1974-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் உலகத் தமிழ் மாநாடு நடை பெற்றது. அப்போது மைதானத்திற்குள் போலீசார் நுழைந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 9 பேர் பலியானார்கள்.

இலங்கையைச் சேர்ந்த தமிழ் அறிஞர் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட "உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்'' சார்பில், முதலாவது உலகத் தமிழ் மாநாடு மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலும், இரண்டாவது மாநாடு தமிழகத் தலைநகரான சென்னையிலும், மூன்றாவது மாநாடு பாரிஸ் நகரிலும் நடைபெற்றது. நாலாவது மாநாட்டை இலங்கை யாழ்ப்பாணத்தில் நடத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் முடிவு செய்தது.

இதுபற்றிய ஆலோசனைக் கூட்டம் கொழும்பு நகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை அமைச்சர் குமாரசூரியரின் பிரதிநிதிகள், இலங்கைத் தலைநகர் கொழும்பில் மாநாட்டை நடத்த வேண்டும் என்றும், அதை பிரதமர் சிறிமாவோ பண்டார நாயகா தொடங்கி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதைப் பெரும்பாலானோர் விரும்பவில்லை. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் கொழும்பு கிளை, மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதை ஆதரித்தனர். இதன்படி, உலகத்தமிழ் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் கொண்ட அமைச்சர் குமாரசூரியரும், அவருடைய ஆதரவாளர்களும் மாநாட்டை தமிழரசு கட்சியின் விழா என்றும், அரசாங்க விரோத சக்திகளின் நடவடிக்கை என்றும் பிரசாரம் செய்யத் தொடங்கினார்கள்.

மாநாட்டுக்கு அனைத்து வழிகளிலும் தொல்லைகள் கொடுப்பதில் குமாரசூரியரும், அவரது ஆதரவாளர்களும் ஈடுபட்டனர். மாநாடு பற்றி பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கு ஒலிபெருக்கியைப் பயன்படுத்த அனுமதி வழங்க போலீசார் மறுத்தனர். மாநாட்டுக்கு வருவதற்கு விண்ணப்பித்த தமிழ் அறிஞர்கள் சிலருக்கு 'விசா' மறுக்கப்பட்டது. 'விசா' இல்லாமல் வந்தவர்கள் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். மாநாட்டை நடத்துவதற்கு வீரசிங்கம் மண்டபத்தையும், திறந்தவெளி அரங்கத்தையும் பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதிலும் குமாரசூரியரின் தலையீடு இருந்தது. மாநாடு தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்புதான் அவற்றை உபயோகிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. தடைகளைக் கடந்து யாழ்ப்பாணத்தில், உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் செய்தி அறிந்து மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். யாழ் நகரமே விழாக்கோலம் பூண்டது. கடைவீதிகளில் மின்விளக்கு அலங்காரங்கள் நகரை அலங்கரித்தன. கனிகளுடன் கூடிய வாழை, மாமரங்கள், தென்னை, பனை, பாக்கு, மூங்கில் மரங்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. மாநாட்டுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த தமிழ் அறிஞர்கள் நாதசுரம் முழங்க வரவேற்கப்பட்டனர்.


திட்டமிட்டபடி ஜனவரி 3-ந்தேதி வீரசிங்கம் மண்டபத்தில் உலகத் தமிழ் மாநாடு தொடங்கியது. தமிழ் அறிஞர் தனிநாயகம் அடிகளார் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். மாநாட்டிற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற ஈழப்பிரிவு தலைவர் எஸ்.வைத்தியநாதன் தலைமை தாங்கினார். இதில் தமிழ் அறிஞர்களான மதுரைப் பல்கலைக்கழக பேராசிரி யர் எம்.சண்முகம் பிள்ளை, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் சி.நெய்னார் முகம்மது, ஜெர்மன் நாட்டுப் பேராசிரியர் கே.எல்.ஜெனட், சுவீடன் ஆய்வாளர் பிரிக்கோம், பேராசிரியர் சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், உலகத் தமிழர் பேரவைத் தலைவர் இரா.சனார்த்தனம், புலவர் ஈரோடு இராசு, கொடுமுடி சண்முகம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் அறிஞர்கள் பங்கேற்றனர்.

அமெரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, சுவீடன், இத்தாலி, பிரான்சு, ஹாலந்து, மேற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களும் மாநாட்டில் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆய்வுக் கட்டுரைகளை படித்தனர். தமிழின் பெருமைகளையும், தமிழர்களின் மாண்பையும் விளக்கும் வகையில் அலங்கார வண்டிகள் அணிவகுப்பும், பண்பாட்டுக் கண்காட்சியும் நடைபெற்றன.

மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு அறிஞர்களுக்கு வழியனுப்பு விழா 10-ந்தேதி யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக அரங்கு பதிவு செய்யப்பட்டிருந்தபோதிலும், திறந்தவெளி மேடை திறந்திருக்க மைதானத்தின் வாசல் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன! மாநகர மேயரிடம் கடிதம் வாங்கி வந்தால் மட்டுமே அவை திறக்கப்படும் என்று அரங்கக் காப்பாளர் அறிவித்தார். மேயர் ஆல்பிரட் துரையப்பாவை கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் வீரசிங்கம் மண்டபம் முன்னால் அவசரமாக ஒரு மேடை அமைக்கப்பட்டது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தார்கள். பேராசிரியர் சி.நெய்னார் முகம்மது உரையாற்றிக் கொண்டிருந்தார்.


இரவு 8.30 மணிக்கு போலீஸ் உதவி சூப்பிரண்டு சந்திரசேகரா, போலீஸ் பட்டாளத்தோடு 'ஜீப்'களில் வந்து இறங்கினார். போலீசார் 'ஜீப்'களில் இருந்து இறங்கி அணிவகுத்து நின்றனர். 'ஜீப்'களை முன்னோக்கி செலுத்துமாறு சந்திரசேகரா உத்தரவிட்டார். அதற்குப்பின்னால் போலீசார் நடந்து சென்றனர். கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் சந்திரசேகரா மக்களுக்கு உத்தரவிட்டார்.

மாநாட்டுத் தொண்டர்கள் அவரிடம் சென்று "கூட்டத்தில் குழப்பம் செய்யவேண்டாம்'' என்று கேட்டுக்கொண்டனர். அதைச் சிறிதும் பொருட் படுத்தாமல், போலீசார் தாக்குதலைத் தொடுத்தனர். திரண்டிருந்த திரளான மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினார்கள். நெரிசலில் சிக்கி பலர் காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் ஓட ஓட விரட்டியடித்தனர். அருகே இருந்த சேறு நிறைந்த குளத்தில் பலர் விழுந்தனர். அவர்களை யாழ்ப்பாண இளைஞர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர்.

இந்த நிலையில் போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசினார்கள். அதில் ஒரு குண்டு மேடைக்கு அருகே விழுந்தது. மாநாட்டுத் தலைவர் பேராசிரியர் வைத்தியநாதன் அங்கேயே மயக்கம் அடைந்தார். துப்பாக்கியால் வானத்தை நோக்கி போலீசார் சுட்டனர். அதில் இருந்து வெளியேறிய குண்டு மின்சாரக் கம்பியில் பட்டு, கம்பி அறுந்து விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். நெரிசலில் சிக்கி 2 பேர் உயிர் இழந்தனர். 'எங்கள் தலைவி சிறிமாவோ பண்டார நாயகாவுக்கு முதல் மரியாதை தராமல் நடக்கும் நிகழ்ச்சி, இப்படித்தான் முடியும்' என்று குமாரசூரியரும், ஆல்பிரட் துரையப்பாவும் உள்ளுர மகிழ்ந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க சிறிமாவோ பண்டாரநாயகா மறுத்துவிட்டார். மாநாடு நடந்தபோது, மக்கள்தான் போலீசைத் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டினார்.

மாநாட்டில் குழப்பம் விளைவித்த போலீஸ் அதிகாரி சந்திரசேகராவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அரசாங்கத்தில் இடம் பெற்றிருந்த ஒரே தமிழ் அமைச்சர் குமாரசூரியரும் இரங்கல் தெரிவிக்கும் அடிப்படை நாகரீகம் அற்றவராக இருந்தார்.

மாநாட்டுக் கலவரம் தொடர்பாக, உண்மை நிலையைக் கண்டறிய அரசு சார்பற்ற அமைப்பான 'யாழ்ப்பாண பிரஜைகள் குழு' ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்தது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஓ.எல்.டி.கிரெஸ்டர் நியமிக்கப்பட்டார். இந்த விசாரணைக்குழு தனது அறிக்கையை 1974-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி அளித்தது. அதில், "எந்த வித ஆத்திரமூட்டலும் இன்றி போலீசார் கண்ணீர் புகை பிரயோகம் செய்தனர். தேவையில்லாமல் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு போலீசாரே பொறுப்பு'' என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் முடிவை ஏற்கஅரசு மறுத்துவிட்டது.

கச்சத் தீவு தானம் - நாளை
நன்றி தினத்தந்தி

No comments: