Sunday, July 5, 2009

காதல்... ஒரு புதிய பார்வை

தனது 20 வயது மகளின் பிறந்த நாள் பார்ட்டியின் போது திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் ஒரு செல்வந்தர். "இதோ என் பங்களாவில் உள்ள குளத்தில் நான் வளர்க்கும் ஆபத்தான பத்து முதலைகள் உள்ளன. இங்கே இருக்கும் வாலிபர்களில் யார் இக்குளத்தில் குதித்து மறுபுறம் உயிருடன் வெளிவருகிறாரோ அவருக்கு என் மகளையே பரிசாகத் தருவேன்'' என்றார். எல்லோரும் மவுனம் காத்த நிலையில் சட்டென ஒரு வாலிபர் குளத்தில் குதிக்கும் சத்தம் கேட்டது. முதலைகளின் மிரட்டலுக்கிடையே தட்டுத்தடுமாறி நீந்தி சிறுகாயங்களுடன் கரைசேர்ந்தார் அந்த வாலிபர். "சபாஷ், என் மகள் உங்களுக்கே. எப்போது திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்?'' என்றார் செல்வந்தர். அதற்கு "கல்யாணமாவது, காரியமாவது... ஆள விடுங்க சார்! குளத்தில் என்னை தள்ளியவனை முதலில் தேடவேண்டும்'' என்றார் அந்த இளைஞர்.

போரில் வென்றும், மல்யுத்தத்தில் ஜெயித்தும், சிங்கம், புலி போன்ற பிராணிகளிடம் சண்டையிட்டும் காதலித்த பெண்ணை அடைந்தது அந்தக்காலம். "நோ ரிஸ்க் பிளீஸ்; டேக் இட் ஈசி; கனகா இல்லையேல் மேனகா'' என காதலை 'பைட்' இல்லாமல் 'லைட்'டாக எடுத்துக் கொள்வது இந்தக்காலம். இதனால்தான் LOVE என்றால் Loss Of Valuable Energy (மதிப்புமிக்க நம் சக்தியை தொலைப்பது) என்ற வாசகம் இப்போது பிரபலமாகி வருகிறது.

காதல் பற்றி எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் பற்றாக்குறை ஆகும். அந்த அளவுக்கு காதலில் உருவான கோட்டைகள் ஆயிரம்; காதலால் அழிந்த சாம்ராஜ்யங்கள் பல்லாயிரம். உலகின் முதல் காதலே பெரும் போராட்டத்திற்குப் பின்புதான் ஜெயித்தது என்று ரோமானிய இலக்கியம் தெரிவிக்கிறது. காதலின் (பெண்) கடவுள் வீனஸ். மன்மதன் தான் வீனஸின் மகன். பூமியில் தன்னைப் போல அழகாக உள்ள 'சைக்' என்ற ஒரு பெண்ணை அழித்து விட்டு வருமாறு வீனஸ் தன் மகன் மன்மதனுக்கு கட்டளை இடுகிறாள். மாறாக அவள் மீது காதல் கொள்கிறான் மன்மதன். காதலை ஏற்க மறுக்கும் வீனஸ், சைக்கை அழிக்க நினைக்கிறாள். ஆபத்தான பல காரியங்களைச் செய்ய அவளைப் பணிக்கிறாள். காதலுக்காக பல சிரமங்களை எதிர்கொண்டு இறுதியில் ஜெயிக்கிறார்கள் மன்மதனும், சைக்கும். திருமணத்திற்கு முன்பே மாமியார் கொடுமையை அனுபவித்த ஒரே பெண் 'சைக்'தான் போலும்.

காதலை விளையாட்டாக எடுத்துக் கொண்டு அனுபவித்து அழிந்தவர்களும் உண்டு.

- இஸ்ரேல் அரசன் சாலமன் 300 காதலிகளிடம் பழகியதாக வரலாறு தெரிவிக்கிறது.

- 12 வயதில் தன் காதல் விளையாட்டை அரங்கேற்றிய எகிப்து அழகு ராணி கிளியோபாட்ரா, தினமும் ஒரு டஜன் காதலர்களை சந்தித்திருக்கிறாள்.

- கிரேக்க நாட்டு ராணி தியோடாவுக்கு தினம் ஒரு காதலர் தேவைப்பட்டதாம்.

- ஒவ்வொரு இரவிலும் ஒரு காதலருடன் பழகிவிட்டு மறுநாள் காலை அவனைக் கொல்லும் சைக்கோவாக இருந்திருக்கிறாள் அங்கோலா நாட்டு ராணி ஜிங்குவா.

- எதிரி நாட்டு ராணுவ ரகசியங்களைப் பெற நூற்றுக்கணக்கான அந்நாட்டு வீரர்களை தன் காதல் வலையில் சிக்க வைத்து, ரகசியங்களைப் பெற்றபின் அவர்களைக் கொன்று குவித்திருக்கிறாள் நெதர்லாந்து அழகி மேட்டா அரி.

- காதலில் 'சேடிஸ்ட்' என்ற பெயர் வரக் காரணமாக இருந்த பிரான்ஸ் புரட்சியாளர் 'மார்க்குயிஸ் டீ சேட்' கண்டபடி காதல் கொண்டு வெறியாட்டம் போட்டு கடைசியில் மன நோயாளியாகவே ஆகிவிட்டார்.


பிப்ரவரி 14 தோறும் பிரபலமாகக் கொண்டாடப்படும் 'வேலன்டின்ஸ் டே', அதாவது காதலர் தினம் பற்றிய வரலாறு சுவையானது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ரோமானிய அரசன் இரண்டாம் கிளாடியஸ் தன்னுடைய போர்ப்படையின் திறமையை அதிகரிக்க 'ஆண்கள் யாரும் காதலிக்கக் கூடாது, கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது' என்ற கட்டளையை பிறப்பித்தார். இதையும் மீறி வேலன்டின் என்பவர் பல ஆண்களுக்கு ரகசியத் திருமணங்கள் செய்து வைத்தார். இதை அறிந்த கிளாடியஸ் மன்னன் வேலன்டினை கி.பி. 270, பிப்ரவரி 14 அன்று தூக்கிலிட்டான். ஆக நம்மவர்கள் ஒரு துக்க தினத்தன்றுதான் தங்கள் இளமைத் துள்ளல்களை வெளிப்படுத்துகிறார்கள்.

காதலைப்பற்றி பல புத்தகங்கள் எழுதியுள்ள ஹெலன் பிஷர் என்ற எழுத்தாளர், மனிதருக்கு காதல் உணர்வு ஏன், எப்படி வருகிறது என்று விளக்கியுள்ளார். 'செக்ஸ் டிரைவ்' எனப்படும் பாலியல் உணர்வு முதல் காரணம். ரொமான்டிக் லவ் எனப்படும் மோகம், மயக்கம், இளமைத்துள்ளல் இரண்டாவது காரணங்கள். அட்டாச்மன்ட் எனப்படும் பற்றுதல், அன்பு, வாழ்க்கைத்துணை மூன்றாவது மற்றும் இறுதிக்காரணம் என்கிறார் ஹெலன். இதே வரிசையில் காதல் பயணம் நிகழ்ந்தால் பிரச்சினையே இருக்காது என்கிறார் அவர்.

பளபளக்கும் பாவாடை - தாவணி, இரட்டைப் பின்னலிடப்பட்ட நீண்ட கருங்கூந்தல், காலில் இசைக்கருவியாக மாறிய கொலுசு, பாதிக் கைகளை நிரப்பிய வண்ணமிகு வளையல்கள், கழுத்தைச்சுற்றி மணிமாலை, தலையில் மல்லிகை, நெற்றியில் இடப்பட்ட சாந்து பொட்டு என இளமைக்கும், அழகுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கிய தமிழ்ப்பெண்களை துரத்தி, துரத்தி (அக்கால சினிமா டூயட்களில் நம் ஹீரோக்கள் செய்தது போல) காதலித்தது ஒரு திரில்லிங்காகவே கருதப்பட்டது. இதனால் பெண்களை வர்ணிப்பதில் அக்கால கவிஞர்களும் புகுந்து விளையாடினார்கள். இன்று காலம் மட்டுமல்ல, காதலும் மாறிவிட்டது. இப்போது 'எல்லாம் சுடிதார் மயம்' என்றாகிவிட்டது. 'அத்தான், மன்னவா' என அழைத்தது பழங்காலம்; 'மாமா, மச்சான்' என்றது இடைக்காலம்; 'ஹே மிஸ்டர், வாடா போகலாம்' என்பது இக்காலம்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டின்படி ஒருவருடன் அன்பாகவும், ஆழமாகவும் பழகிய 'மேட்டிங்' காதல் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. 'மேட்டிங்' போய் 'டேட்டிங்' வந்து விட்டது. அதாவது, குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட இடத்தில், குறுகிய காலத்துக்கு துணைகொண்டு பேச அப்பாயின்மென்ட் பிக்ஸ் செய்து கொள்வது! புல் டைம் காதல் இல்லாமல் இது பார்ட் டைம் காதல்.


காதல் செய்வது குற்றமல்ல. ஆனால் அதற்கு ஒரு தகுதியை தங்களுக்குத் தாங்களே நிர்ணயம் செய்து கொள்வது நம் இளைஞர்களின் கடமை. பிளஸ்-2 படிக்க எஸ்.எஸ்.எல்.சி. தகுதி வேண்டும், டிகிரி படிக்க பிளஸ்-2 தகுதி வேண்டும். நல்ல வேலை கிடைக்க ஒரு டிகிரி தகுதி வேண்டும் என்பது போல, காதல் செய்ய 'நன்கு சம்பாதிக்கும் வேலை பெற்று, நமக்காக நம் குடும்பம் பட்ட கடன்களை அடைத்து இதர குடும்பக் கடமைகளையும் நிறைவேற்றியிருக்க வேண்டும்' என்ற தகுதி கட்டாயம் வேண்டும்.

'இப்போது சந்திப்போம், சுற்றுவோம், சுகமாக இருப்போம்; சாத்தியமானால் கல்யாணம். இல்லையேல் காதலுக்கு பை, பை' என்கிற லேட்டஸ்ட் காதல் மனப்பான்மை ஆபத்தானது மட்டுமல்ல, நீண்ட, நெடிய நம் பாரம்பரியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

காதல் தோற்பதற்கும், காதலித்து செய்யப்பட்ட திருமணங்கள் நிலைக்காததற்கும் பெண்கள்தான் காரணம் என்ற கருத்து ஏற்புக்குரியதல்ல. 'இவர் சுமாராக இருந்தாலும் பரவாயில்லை; ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை; குணம் கொண்டவராகத் தெரிகிறார்; நம்மை நன்றாக பார்த்துக் கொள்வார்' என்று நம்பி, பெற்றோரையும் துறந்து, காதலனை கைப்பிடிக்கும் பெண் அக்காதல் தோற்பதற்கு முழுக்காரணமாக இருக்க மாட்டாள்.

காதலிக்க வேண்டிய வயதோடும். தகுதியோடும், முறையோடும் மலரும் காதல் எப்போதும் அழிவதில்லை. சிவப்பாக, அழகாக, ஸ்டைலாக உள்ள பெண்ணை பார்த்த உடனே 'இவளைக் காதலித்தால் என்ன' என்ற எண்ணம் வாலிபர்கள் மனதில் வருவது காதல் அல்ல; மோகமயக்கம் எனப்படும் இன்பேச்சுவேஷன்.

'காதலர்கள் Vs பெற்றோர்' என்ற எதிர்ப்பதம் காதல் உலகின் நிரந்தர சாபக்கேடு. சில வீடுகளில், பிள்ளைகளுக்கு 18 வயது ஆன உடனே வீட்டில் 18-ம் போரே தொடங்கியது போல் காதல் சார்ந்த போராட்டம் நடக்கிறது. காலத்தின் மாற்றம், காதலர்களின் தற்போதைய மனநிலை, பரவி வரும் ஒவ்வாத நாகரீகம் இவை குறித்து தங்கள் பிள்ளைகளிடம் காதலுக்கு முன் எடுத்துச் சொல்லி பெற்றோர் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். இதனால் விபரீதக் காதல் விவகாரங்களிலிருந்து பிள்ளைகள் தப்பிக்க ஏதுவாக இருக்கும். மாறாக, 'எடுத்தேன்...கவிழ்த்தேன்...' என அவர்களை மிரட்டுவதால் பயனில்லை. இன்று, தங்களை மீறி காதல் திருமணம் செய்துகொள்ளும் பிள்ளைகளை சில காலம் ஓரங்கட்டி வைப்பது, பின் அவர்களுக்கு குழந்தை பிறந்ததும், இவர்கள் குழந்தைகளாக மாறி தாயும், தந்தையும் ஒருவர் பின் ஒருவராக மீண்டும் பிள்ளைகளிடம் சேர்ந்துவிடுவது என சில குடும்பங்களில் நடக்கிறது. 'எதிர்த்தும் பயனில்லை' என்ற நிலையில் 'சேர்ந்து தொலையட்டும்' என முடிவெடுப்பதே அமைதியான தீர்வாகும் என் பதை பெற்றோர் உணர்ந்தால் நலம்.

பாபு புருஷோத்தமன்

No comments: