Saturday, July 4, 2009

எம்மதமும் எனக்குச் சம்மதமே - சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் (12.1.1863 - 4.7.1902)

ந்து மதம் பெற்றுள்ள இன்றைய வடிவின் தந்தை என்று சுவாமி விவேகானந்தர் அவர்களை அழைத்தால், அது மிகையாகாது !

சுவாமி விவேகானந்தரின் பரம்பரை மகத்தானது; அறிவிலும் சரி; ஆன்மிகத் துறையிலும் சரி !

பெருந்துறவியான துர்க்கா பிரசாத் தத்தரின் பேரர் எனும் பெருமை பெற்றவர் விவேகானந்தர். தந்தை விசுவநாத தத்தர் புகழ்பெற்ற வழக்கறிஞர். அறிவுநிறைச் செல்வர். சமரச உள்ளத்தினர்.

விவேகானந்தரின் தாய் வீரமாது. தம் மூன்றாவது புதல்வரான பூபேந்திரர் தேசியப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றமை கேட்டு, "அவனை நான் தேசத்துக்கு அர்ப்பணம் செய்து விட்டேன். பூபேந்திரர் வேலை இப்போதே ஆரம்பமாகியுள்ளது" என்று கூறிய அன்னை அவர்.

இவ்விதமாகப் பழம்பெரும் சமூகமளித்த ஆன்மிகச் செல்வமும், பெற்றோர் காட்டிய துறவு, துணிவு, அன்பு ஆகிய லட்சியமும் கொண்டு 1863 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 12 -ந்தேதி, இவ்வுலக யாத்திரையைத் தொடங்கினார் சுவாமி விவேகானந்தர்.

வயது 19. இளமைப் பருவம். அப்போதே விவேகானந்தர் தட்சினேஸ்வரர் ஆலயத்துக்கு அடிக்கடி செல்லத் தொடங்கினார், தமது குருநாதரைத் தேடி ! ஆறு ஆண்டுகளில் அந்த ஊற்றின் அமுதம் முழுவதையும் உண்டுவிட்டார். "என்னிடமிருந்த எல்லாவற்றையும் உனக்குக் கொடுத்துவிட்டேன்; பக்கிரியானேன்" என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது வாழ்நாளின் இறுதியில் கூறும் அளவுக்கு அவ்வமுதத்தைப் பருகிவிட்டார்.

பண்டைய ஞானிகள் சென்ற வழிகள் பல. நவீன கண்களுக்கு அவை முரண் உள்ளவை போலக் காட்சி தரலாம். அவர்தம் உபதேசங்கள், நடவடிக்கைகள் ஆகியவற்றின் உண்மைக் கருத்தை அறியும் திறன் சாதரண உள்ளங்களுக்கு இன்மையால், மதத்தின் பெயரால், பிரிவுகளும் துவேஷங்களும் வளர்ந்துவிட்டன.

"உலக மதங்கள் என்பனவெல்லாம் ஆடவரும் பெண்டிரும் தம் தம் வெவ்வேறு இயல்புகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் ஏற்ப வருவதும், போவதும், யாத்திரை செய்வதுமேயாகும். முரணாகக் காட்சியளிப்பன எல்லாம் வெவ்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப அதே உண்மை தன்னைச் சரி செய்து கொள்வேதேயாகும்" என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

"சென்ற கால மதங்களை எல்லாம் நான் ஏற்கிறேன்; வணங்குகிறேன். மசூதிக்குச் செல்வேன்; மாதா கோயிலுக்குச் செல்வேன்; சிலுவை முன் மண்டியிடுவேன்; புத்த விகாரம் செல்வேன்; புத்தரைச் சரண் புகுவேன்; வனம் புகுவேன்; ஒளி காணத் தவம் செய்யும் இந்துவுடன் அமர்ந்து தவம் செய்வேன்;

ஆன்மா ஒவ்வொன்றும் தெய்வீகமானதே, உள்ளும் புறமும் இயற்கையைக் கட்டுப்படுத்தி இத்தெய்வீக சக்தியை பரிணமிக்க செய்வதே லட்சியம். பணி செய்வதின் மூலமோ, வழிப்பாட்டின் மூலமோ, தத்துவ விசாரத்தின் மூலமோ, எவ்வழியிலோ அன்றி எல்லா வழியிலுமோ, இதனைச் செய்து விடுதலைப் பெறுக" என்றார் அவர்.

இதுவே எல்லா மதங்களின் சாரம் என்பது அவர் கருத்து. "நம்பிக்கை, தன்னம்பிக்கை, கடவுள் நம்பிக்கை அதுவே பெருமைப் பெறும் ரகசியம்" இதுவே சுவாமியின் உபதேசம்.

சுவாமி விவேகானந்தர் நினைவு நாள் இன்று (04.07.2009).
- பிரம்மசாரி மாதவன்-


3 comments:

ச.செந்தில்வேலன் said...

நல்ல பதிவு

கலையரசன் said...

ஆங்கிலத்தில் படித்தது.. தமிழாக்கம் அருமை!! நன்றி!

ஊர்சுற்றி said...

விவேகானந்தர் பற்றி நானும் நிறைய படித்திருக்கிறேன். ஏனக்கு ஒருகாலத்தில் மிகப்பெரிய மனபலத்தைக் கொடுத்தவை அவரது வார்த்தைகள்.

ஆனால், சாதியை ஒழிக்க முடியாது என்று அவர் கூறியதைப் படித்ததும் - அந்த உயர்ந்த இடத்தில் இருந்து அவரைத் தூக்கி எறிந்துவிட்டேன். ஆனால் இன்றும் அவர்மீது ஒரு மரியாதை உள்ளது. இவரது சில கருத்துக்களு இளைஞர்களுக்கு உயிர்ப்பூட்டும் வார்த்தைகள் என்பதை மறுக்க இயலாது.