Wednesday, July 15, 2009

கவிதா கவிதைகள்

குழந்தைப் போராளி

ழங்காவியங்களில் கறையிருந்தாலும்
அக்காலப்போருக்கொரு வீரமிருக்கும்
காதல் இருக்கும்
வெட்டி வீழ்த்துவதில்
நேர்மையிருக்கும்

என்னத்தை வளர்ந்தோம்
நாங்கள்
என்னத்தை வளர்த்தோம்
இன்று

குழந்தைகளை போருக்கிழுத்த
குரங்குகளை நோவதா

குழந்தையென்றும் பாராமல்
குதறித்தின்னும்
நாய்களை நோவதா

குரங்குகளுக்கு கோயில் கட்ட
நாலு பேர்
நாய்க்கு நாக்கு வழிக்க
நாலு பேர்

இந்த எட்டில்
நீ எந்தப் பக்கம் ?

இரண்டிலும் சேராமல்
நடுத்தெருவில் நாட்டி நிற்கும்
நான் யார் ?

எங்கள் லட்சணத்தில்...
குரங்குக்கும் நாய்க்கும்
சிங்கம் புலி என்று
கௌரவப்பட்டம் வேறு

தூ.....!

*********************************

அகதி

மாற்றாரின் முடிவுகளில்
நிச்சயிக்கப்பட்டு

காதல் களம் அற்ற
ஏக்கத்துடன்...

பிறர்

வசதிக்கு வாழ்க்கைப்பட்டு...

இருந்த இடத்தில்
எல்லாம் கிடைக்குதென்று...

தோட்டத்தை வெறித்தபடி...

ஜன்னல் ஓரம்...

என்
ஜாடிச்செடி !

No comments: