Saturday, July 11, 2009

பணம் சம்பாதித்தால் மட்டும் போதுமா?

ணம், பணமென்று தேடி பாடுபட்டு சேர்த்துவிடுகிறோம். ஆனால் யதார்த்த வாழ்வின் இன்ப, துன்பங்களை ஓரங்கட்டி இழந்து விடுகிறோம். பிறகு சேர்த்த பணத்தை மன அழுத்தத்துக்கும் மற்ற வியாதிகளுக்கும் கொட்டித் தீர்க்கும் நிலைக்கு போய்விடுகிறோம். எனவே வாழ்வில் முன்னேற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய வாழ்க்கைச் சூழலை விளக்குகிறார் திருச்சி மண்டல வேலை வாய்ப்புத்துறை வேலைவாய்ப்பு துணை இயக்குனர் .சுரேஷ்குமார்.

வாழ்க்கையை மகிழ்ச்சியாக எதிர்கொள்ளும் வழிகளை இதுவரை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மகிழ்ச்சியுடன் கூடிய முன்னேற்றத்துக்கான வழிகளை இனி காணலாம்.

நாம் அனைவரும் மனமகிழ்ச்சியுடன் வாழ பணம் இன்றியமையாத ஒன்றுதான். அதற்காக உடல் நலத்தை பேணுவதையோ, குடும்பநலனை காப்பதையோ, பொழுது போக்கு அம்சங்களையோ முற்றிலுமாக ஒதுக்க முடியாது.

சிலர் முழுநேரமும் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பாடுவார்கள். மழையில் நனைந்து கொண்டே நடப்பது, சூரியன் அஸ்தமனமாவதை கண்டு ரசிப்பது, குயில்பாட்டை ரசிப்பது, வண்ண ஓவியம் தீட்டுவது, தீட்டிய ஓவியங்களை கண்டுரசிப்பது, எப்போதோ கேட்ட திரைப்பட பாடலை நினைவுபடுத்தி பாடுவது போன்ற அனுபவங் களில் கிடைக்கும் மகிழ்ச்சியை மதிப்பிட முடியாது. பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக இருப்பவர்களால் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களின் முக்கியத்துவத்தை உணரவோ, அனுபவிக்கவோ நேரத்தை ஒதுக்க முடிவதில்லை.

ராக்பெல்லர் என்னும் கோடீசுவரர் பெரும்பாலான பொழுதை பணம் சம்பாதிப்பதிலேயே கழித்தார். ஆனால் வாழ்க்கையின் இயல்பான விஷயங்களை உரிய நேரத்தில் அனுபவிக்க முடியவில்லை என்ற மனக்குறை அவருக்கு இருந்ததாகக் பின்னாளில் குறிப்பிட்டார். சேர்த்த சொத்தை சமுதாய மேம்பாட்டிற்கு அளித்தது மனதிருப்தியை தந்ததாகவும் தெரிவித்தார்.

படிப்பு, வேலையை தவிர்த்து சில...

இளைஞர்கள் முழுநேரமும் படிப்பது, வேலைக்கான போட்டித் தேர்வுக்கு தயாராவது என்று செயல்படாமல் வாழ்க்கையோடு இணைந்த மாற்று செயல்களிலும் ஈடுபட வேண்டும். உதாரணமாக பூந்தோட்டத்தை பராமரிக்கலாம். நீங்கள் வளர்த்த செடி, பூக்கும்போது உங்கள் மனமும் பூரிப்படையும். செடி வளரும்போது இளம்தளிராக தோன்றும் இலைகளைக் காணும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

இதேபோல் இடையிடையே நண்பர்- உறவினர்களுடன் கலந்துரையாடுவது, சினிமாவுக்கு சென்று வருவது, வேலை சாராத புதிய செயல்களில் ஈடுபடுவது, நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்வது, பெற்றோருக்கு உதவுவது என்று வெவ்வேறு செயல்களில் ஈடுபடலாம்.

இத்தகைய செயல்களில் ஈடுபடும்போது மன அழுத்தம் குறையும். இனம் புரியாத மனமகிழ்ச்சி ஏற்படும். மீண்டும் பாடங்களை நன்கு படிக்கும் மனோபாவத்தையும் வளர்க்கும். பயிர் வாடாமல் வளருவதில் எடுத்துக் கொள்ளும் கவனம் உங்கள் வாழ்வையும் மலர்ந்து மணம் வீசச் செய்யும்.

உணவு, உடை:-

உட்கொள்ளும் உணவே உடலாகி உயிராகின்றது. உணவின் தன்மைக்கேற்ப உடலின் தன்மையும் மனதின் தன்மையுமே மாறுபடும். பசித்து புசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஏதோ கடமைக்காக என்று உணவருந்தக் கூடாது. உண்ணும் அனுபவம் ஓர் இனிமையான அனுபவமாக இருக்க வேண்டும்.

உண்ணும் உணவு அறுசுவையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. எளிமையான உணவாக இருந்தாலும் நிறைவான மனதுடன் உண்ணப்பழக வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உணவிற்கு மரியாதை அளித்து சுவைத்து உண்ண வேண்டும். நினைக்கும் போதெல்லாம் சாப்பிட்டு பழகக்கூடாது.

'கந்தை ஆனாலும் கசக்கிக்கட்டு' என்ற முதுமொழியின்படி தூய்மையான ஆடை அணிய பழக வேண்டும். 'ஆள்பாதி ஆடைபாதி' என்பதுபோல அணியும் உடை அணிபவருக்கும் நம்பிக்கையை அளிக்க வேண்டும். பார்வையாளருக்கும் நல்ல தோற்றத்தை அளிப்பதாக இருக்க வேண்டும். நேர்முகத்தேர்வுக்கு செல்லும்போது, வேலைச் சூழலுக்கு ஏற்றவாறு நடைமுறையில் உள்ள ஆடைகளை அணிவது என்று ஏற்புடையதைப் பின்பற்ற வேண்டும்.

இழப்பையும் ஏற்க கற்றுக் கொள்ளுங்கள்:-

அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் என்ற நிச்சயம் இல்லை. இழப்பு அல்லது தோல்வி ஏற்படும்போது மனம் வருந்துவதில் தவறில்லை. ஆனால் அதையே ஆழமாக மனதில் பதியவைத்துக் கொண்டு தொடர்ந்து மன வருத்தத்துடன் செயல்படுவது சரியல்ல. அவ்வாறு வருத்தத்துடன் செயல்பட்டால் தன்னம்பிக்கையை பாதிக்க ஆரம்பித்துவிடும்.

இழப்பு அல்லது தோல்வி என்பது நம்மிடம் உள்ள ஏதோ ஒன்றை இழக்க அல்லது கிடைக்காமல் போக செய்திருக்கலாம். ஆனால் அதற்கு நாம் இடம் கொடுத்திருந்தால்தான் அது சாத்தியம். யாராவது ஒருவர் நம்மை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டால் அதற்கு இடமளிக்கும் வகையில் நாம் ஏதாவது செய்திருக்காமல் அவரால் நம்மை அவமதிக்க முடியாது.

இழப்பை சரியான மனப்பக்குவத்துடன் எதிர்கொள்வது ஒரு கலையாகும். விளையாட்டு போட்டிகளிலும் சரி, பிற செயல்பாடுகளிலும் சரி எவ்வளவு காலம் திறம்பட நம்மை முன்நிறுத்திக் கொள்ள முடியும் என்று கணித்து அதன்படி செயல்பட வேண்டும். ஒரு நிலையை அடைந்தவுடன் செயல்பாடுகளிலிருந்து விடுவித்துக் கொள்ளப் பழக வேண்டும்.

வெற்றி, தோல்வி என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான அனுபவமே ஆகும். வெற்றி பெற முழுமையான அளவு தகுதி உடைய ஒருவரிடம் தோற்றுப்போவது அதிக மன வருத்தத்தைத் தராது. துன்பம் வரும் நேரத்தில் சிரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். உண்மையிலேயே அது மிகவும் கடினமான ஒன்று. இழப்பு அல்லது தோல்விகள் உணர்த்தும் உண்மையை அறிந்து கொண்டால் அடுத்த முயற்சி வெற்றி பெற உதவும். தோல்விகள் என்பது வெற்றியை அடைய உதவும் படிக்கட்டுக்கள் என்றே கருத வேண்டும்.

தூக்கம்:-

சரியான அளவு தூக்கம் இருந்தால் உடல் நலமும் மனநலமும் சிறப்பாக இருக்கும். தூக்கம் என்பது இயற்கை அனைவருக்கும் அளித்த வரப்பிரசாதம். தூங்குவது என்று முடிவெடுத்து தூங்க முடியாது. இயல்பாக தூக்கம் வரும்வகையில் மனப்பாங்கையும் உடல்நலத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம், மன உளைச்சல் அதிகமாக இருக்கும்போது தூக்கம் சரியாக வராது. தேர்வு நேரத்தில் அதிக நேரம் கண்விழிப்பது, தேர்வு பற்றிய பயம் போன்றவை தூக்கத்தை பாதிக்கும். உறங்குவது என்பது காலத்தை விரயம் செய்யும் செயல்பாடு என்று கருதக்கூடாது. அளவான தூக்கம் என்பது ஆரோக்கியத்தை அளிக்க வல்லது.

வாழ்க்கையை ஆரத் தழுவுங்கள்:-

நேசிக்கும் வாய்ப்பு இருக்கும்போது ஏன் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட வேண்டும்? நிபந்தனை இல்லாத வாழ்க்கை வாழப் பழக வேண்டும். ஒவ்வொரு நொடிப்பொழுதும் விலைமதிக்க முடியாத ஒன்றே ஆகும். அக மலர்ச்சியுடன் வாழ்க்கையை தழுவும்போது மனம் மகிழ்ச்சி அடையும். மகிழ்ச்சியை வெளியில் தேட முடியாது. அது அவரவருக்குள் இருந்துவரும் வெளிப்பாடு.

தானம் செய்யுங்கள்:-

வருவாயில் ஒரு பங்கு அல்லது உழைப்பில் ஒரு பங்கை தானமாக பிறருக்கு கொடுத்து உதவுங்கள். பில்கேட்ஸ் அளவிற்கு அல்லது வாரன்பபட் அளவுக்கு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் யாரோ ஒருவருக்கு இலவசமாக கல்வி கற்பிப்பது ஒருவகை தானம்தான். சமுதாயத்தை உயர்த்த மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுமே ஒரு வகையில் தானம்தான். அது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.

விரும்பும் படிப்பை எடுத்து பயிலுங்கள். விரும்பும் பணியைப் பெற முயற்சி மேற்கொள்ளுங்கள். உளப்பூர்வமாக முயன்றால் முயற்சி வெற்றியை பெற்றுத்தரும். முயற்சி செய்வதால் இழப்பு ஒன்றும் கிடையாது. முயற்சிக்காத விஷயங்களே முடியாமல் இருக்கும். எனவே முனைப்புடன் முயற்சிக்கப் பழகி வெற்றி பெறுங்கள்.

மைக்கேல் ஜாக்சன் நடனத்தால் பலரை மகிழ்வித்தார். ஆடல், பாடல் போன்றவை அவற்றில் ஈடுபடுபவர்கள், அவற்றை ரசிப்பவர்கள் ஆகிய இரு சாராருக்கும் மன மகிழ்ச்சியை அளிக்கின்றது. மனமகிழ்ச்சி என்பதை கடையில் விலைக்கு வாங்க முடியாது. அவரவர் மனோபாவமே அதை நிர்ணயிக்கின்றது.

இளம் வயதிலேயே மனமகிழ்ச்சியுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள். நாளடைவில் அதுவே உங்கள் வாழ்க்கையை முறையாகவும், பயனுள்ள வகையிலும் வாழ வழி வகுக்கும். மனமகிழ்ச்சியை உங்கள் சுபாவமாக்கிக் கொள்ளுங்கள். வாழ்வே சுகமாகும்.

.சுரேஷ்குமார்

3 comments:

ச.செந்தில்வேலன் said...

நல்ல பதிவு..

பணம் சேருவதோடு நோய்களும் சேர்வது வருந்தத்தக்கது..

பலருக்கும் இந்தப்பதிவு சென்றடைய வேண்டும்.

சந்திரா said...

இந்த பதிவை ப்ரிண்ட் எடுத்து அலுவலகம்,இல்லம் இரண்டிலும் ஒட்டி விட்டேன்.ஒவ்வொரு வரிகளையும் படித்து பின்பற்றப்பட வேண்டியது.

சுபா said...

Nalla Karutthu. Thodarungal.