Wednesday, July 8, 2009

இன்றைய பத்திரிகைச் செய்திகள்


நிவாரணப் பொருட்களுடன் கப்பல் இலங்கை புறப்பட்டது

சென்னை துறைமுகத்தில் இருந்து தேவையான நிவாரணப் பொருட்களுடன் இலங்கைக்கு சரக்குக் கப்பல் கிளம்பிச் சென்றது. போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில் ஐரோப்பிய தமிழர்கள் பலர் ஒன்று சேர்ந்து, மருந்து, உணவுப் பொருட்களை 'கேப்டன் அலி' என்ற கப்பலில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பினர். வணங்காமண் என்று அழைக்கப்பட்ட இந்த கப்பலை இலங்கை அரசு தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து கடந்த மாதம் ஜுன் 12-ந் தேதி சென்னை அருகே வந்தது.

சென்னை துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி இல்லாததால் சற்று தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றது. எனவே, நிவாரணப் பொருட்கள் அனைத்தும் அங்குள்ள தமிழர்களுக்கு சென்று சேர வழிவகை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி உட்பட பலர் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டது. மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி, நிவாரணப் பொருட்களை வேறு கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டுவர இலங்கை அரசு அனுமதி அளித்தது.

சென்னை துறைமுகத்துக்குள் வணங்காமண் கப்பல் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டது. மேலும் அதிலுள்ள பொருட்கள் அனைத்தும் சென்னை துறைமுகத்தில் இறக்கிவைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து வணங்காமண் கப்பல் கொல்கத்தா நோக்கி சென்றது. இந்த நிவாரணப் பொருட்கள் அனைத்தும் 30 கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டன.

பின்னர் சென்னை துறைமுகத்தில் உள்ள சி.சி.டி.எல். நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையில் இலங்கைக்குச் செல்லும் கேப் கொலராடோ என்ற சரக்குக் கப்பல் சி.சி.டி.எல்.க்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தக் கப்பல் 600-க்கும் மேற்பட்ட கண்டெய்னர்களுடன் நேற்று முன்தினம் வந்தது. அந்தக் கப்பலில் நிவாரணப் பொருட்கள் அடங்கிய கண்டெய்னர்கள் அனைத்தும் ஏற்றப்பட்டன.

அதைத் தொடர்ந்து நேற்று காலை கேப் கொலராடோ கப்பல் இலங்கையை நோக்கி புறப்பட்டுச் சென்றது. இன்னும் 2 நாட்களில் அந்தக் கப்பல் இலங்கையை அடைந்துவிடும் என்று துறைமுக ஊழியர்கள் கூறினர். நிவாரணப் பொருட்களை இலங்கைத் தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் முயற்சி எடுத்துள்ளனர்.

*************************************************************************************

இலங்கையில் போருக்கு பிந்தைய நிலையும், இந்தியாவின் பங்கும் - கருத்தரங்கம்

'லங்கையில் போருக்கு பிந்தைய நிலையும், இந்தியாவின் பங்கும் என்ற தலைப்பில் சென்னை ஸ்டெல்லா மாரீஸ் மகளிர் கல்லூரியில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. கல்லூரியின் சர்வதேச அரசியல் துறையும், ஆப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (.ஆர்.எப்) சென்னை அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்தது. இந்த கருத்தரங்கில், இலங்கை துணை தூதர் பி.எம்.அம்சா, பாதுகாப்பு ஆய்வு மைய தலைவர் வி.ஆர்.ராகவன், பத்திரிகையாளர் இந்து என்.ராம், .ஆர்.எப்.நிர்வாகி என்.சத்தியமூர்த்தி, ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஜெசிந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கை இந்தியாவுக்கான இலங்கை தூதர் ரோமேஷ் ஜெயசிங்கே தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வந்தபோதிலும் இந்தியா-இலங்கை இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவு எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. இருநாடுகளும் செய்துகொண்ட தங்குதடையற்ற வர்த்தக ஒப்பந்தம் காரணமாக ஆண்டுக்கு 300 கோடி டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்து வருகிறது.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

2005-ம் ஆண்டு அதிபராக பதவியேற்ற ராஜபக்சே இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்துப் பேச விரும்பினார். ஆனால்அந்த நேரத்தில் விடுதலைப்புலிகள் ஆயுத தாக்குதல்களை தீவிரப்படுத்தினார்கள். அந்த சூழëநிலையிலும், அதிபர் ராஜபக்சே பேச்சுவார்த்தைக்காக அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவை ஜெனீவாவுக்கு அனுப்பினார்.

ஆனால், அதிபர் ராஜபக்சே மேற்கொண்டு அனைத்து முயற்சிகளையும் விடுதலைப்புலிகள் தவறாக கருதி தொடர்ந்து ராணுவத்திற்கு எதிராக தாக்குதல்களை நடத்திக்கொண்டே இருந்தனர்.

இனிமேல் முயற்சி மேற்கொண்டு பயனில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகுதான் விடுதலைப் புலிகளை முற்றிலுமாக ஒழிக்க தீர்மானிக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு ஜுன் மாதவாக்கில் தொடங்கிய ராணுவ தாக்குதல் கடந்த மே மாதம் வரை நீடித்து விடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டனர்.

இலங்கை அரசு மேற்கொண்ட ஏதாவது ஒரு அமைதி முயற்சிக்கு விடுதலைப்புலிகள் ஒத்துழைப்பு அளித்திருந்தால் இந்த பிரச்சினை இந்த அளவுக்கு வந்திருக்காது. இவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுவாழ்வு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணிகளுக்கு ரூ.500 கோடி வழங்குவதாக அறிவித்துள்ள இந்திய அரசுக்கும் உரிய நேரத்தில் ரூ.25 கோடி உதவி வழங்கிய தமிழக அரசுக்கும் இலங்கை அரசு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் பொருளாதார செயல்பாடுகளை இயல்புக்கு கொண்டுவருவதுதான் முதல் வேலையாக இருக்கும். அதன்பின் சாலை போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும். தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக நிரந்தர தீர்வு காணும் வகையில் அதிபர் ராஜபக்சே தமிழர் தேசிய கட்சிகள் உள்பட அனைத்து கட்சி தலைவர்களுடன் அடிக்கடி ஆலோசனை செய்து வருகிறார்.

தற்போது விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதால் வடக்குப்பகுதியிலும் விரைவில் மாகாண கவுன்சில் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும். இலங்கை நிர்வாகத்தைப் பொருத்தவரையில் அந்த பகுதியில் தேர்தல் நடத்துவது என்பது பெரிய சாதனை ஆகும்.

இவ்வாறு இலங்கை தூதர் ரோமேஷ் ஜெயசிங்கே கூறினார்.

.ஆர்.எம். அமைப்பின் சென்னை தலைவரும் மத்திய அரசின் முன்னாள் சிறப்பு செயலாளருமான ஆர்.சுவாமிநாதன் பேசும்போது, விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டதால் இலங்கை தமிழர் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று இலங்கை அரசு கருதக்கூடாது. இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும். இல்லாவிட்டால் மீண்டும் இதுபோன்ற போராளி குழுக்கள் உருவாகும் என்றார்.

கருத்தரங்க தொடக்கவிழா முடிவடைந்த பின்னர் இலங்கை தூதர் ரோமேஷ் ஜெயசிங்கே நிருபர்களிடம் கூறுகையில், "இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுவாழ்வு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கண்ணிவெடிகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. தமிழர்கள் பாதுகாப்பான பகுதியில் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். போரினால் புலம்பெயர்ந்த மக்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதில் அரசுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. இலங்கை அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்'' என்று தெரிவித்தார்.

No comments: