Monday, July 6, 2009

நிலையான வேலை வேண்டுமா?


ன்றைய காலத்தில் வேலை கிடைப்பது கடும் போராட்டமாக இருக்கிறது. கிடைத்த வேலையும் நிரந்தரமானதாக இருக்குமா என்பது கேள்விக்குறி. அரசு வேலைக்கு எப்போதாவது ஆள் எடுத்தாலும் அடிபிடி குறையாக கூட்டம் கூடிவிடுகிறார்கள். தனியார் வேலைவாய்ப்புகள்தான் நிறைய கிடைக்கின்றன. அதிலும் காண்டிராக்ட் அடிப்படையிலும், தினக்கூலி வேலையும்தான் அதிகமிருக்கின்றன.

அந்த வேலையில் சேர்ந்தாலும் மனசு அலைபாய்கிறது. அங்கே போகணும், அப்படி ஆகணும், இப்படி ஆகணும் என்று லட்சியக் கனவுகள் ஒரு புறம் துரத்துகின்றன. மறுபுறம் வேலை டென்சன் விரட்டுகிறது. இரண்டையும் குழப்பிக் கொண்டால் ஒரு இடத்திலும் நிம்மதியாக இருக்க முடியாது, வேலையும் செய்ய முடியாது.

கிடைத்த வேலையை நிலைக்கச் செய்ய அதற்காக சில தனித்திறமைகள் தேவை. அந்த விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

தொடர்ந்து கற்றுக் கொள்வது

உங்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தந்திருப்பது உங்கள் திறமை என்பது உண்மைதான். அதே நேரத்தில் வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்தில் நீங்கள் அதே திறமையுடன் மட்டும் இருந்தால் நீடித்து நிற்க முடியாது. அதற்காக நாள்தோறும் புதிய விஷயங்கள், தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் உங்களை பிறரிடம் அடையாளப்படுத்திக் காட்டும், மற்றவர்களில் இருந்து பிரித்து தனித்தன்மையை விளக்கும். போட்டிகளை சமாளித்து உங்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.

பணிவும், தாழ்வு மனப்பான்மையும்

அடுத்ததாக வேலை செய்யும் இடத்தில் பணிவு அவசியம். மேலதிகாரிகள், உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் என்று எல்லோர் இடத்திலும் பணிவு காட்டுங்கள். சிலர் உங்களைவிட தகுதி அதிகம் உடையவராக இருப்பார்கள். தகுதி குறைந்தவர்கள் கூட உங்களை வேலை வாங்கும் பொறுப்பில் இருக்கலாம். அப்படிப்பட்ட நிலையில் தகுதி அதிகமானவரோடு உங்களை ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ளக்கூடாது. உயரதிகாரியிடம் பணிவு காட்டாமல் கண்ணியக் குறைவாகவும் நடந்து கொள்ளக்கூடாது.

நீங்கள் எவ்வளவு பணிவுடன் நடந்து கொள்கிறீர்களோ அவ்வளவு முன்னேற்றம் விரைவில் வந்து சேரும் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.

உடன் வேலை செய்வோரை புரிந்து கொள்ளுங்கள்

உடன் பணிபுரிபவர்களை புரிந்துகொள்வது வேலைச் சூழலை எளிமையாக்கும். நாம் செய்யும் வேலையோடு நெருங்கிய தொடர்பு உடையவர்கள் அவர்கள். மற்றவர்களை புரிந்துகொள்வது என்பது சிரமமான விஷயம்தான். இருந்தாலும் அவர்களை புரிந்து கொண்டுவிட்டால் பலவகையிலும் நமக்கு உதவிகரமாக இருப்பார்கள். வேலை சம்பந்தமான பிரச்சினைகள், சிரமமான காலகட்டங்களில் பல யுக்திகளை உங்களுக்கு தந்து உதவுவார்கள்.

உடன் பணிபுரிவோரை புரிந்து கொள்வதற்கு கூச்சமின்றி பேசும் திறமை இருக்க வேண்டும். அவர்களுக்கு தேவை ஏதேனும் ஏற்பட்டால் தட்டிக்கழிக்காமல் செய்யுங்கள். அதிகாரி, போட்டியாளர், கீழ் பணி செய்பவர் என்ற ஏற்றதாழ்வு பாராமல் இயல்பாக பேசிப் பழகுங்கள். நாளடைவில் எல்லோரும் நண்பர்களாகி விடுவார்கள்.

தகவல் தொடர்பு- ஒத்துழைப்பு

நாம் செய்யும் பணி பெரும்பாலும் மற்றவர்களுடன் சேர்ந்து செய்யும் கூட்டு முயற்சியை சார்ந்ததாகவே இருக்கும். அப்படி இருக்கும்போது ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து செயல்படுவது மிகவும் அவசியம். சில சமயம் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் சேர்ந்து பணி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அத்தகைய சூழலில் ஒத்துழைக்காமல் இருப்பதோ அல்லது ஒருவர் மற்றவரை குறை சொல்வதோ இருவர் மீதான கண்ணோட்டத்தையும் வேறு திசைக்கு கொண்டு சென்றுவிடும். வேலை இழப்பு, பகை போன்ற சிக்கலான நிலைக்குத் தள்ளிவிடும். எனவே பணியில் ஒத்துழைப்பு என்பது விருப்பு வெறுப்பின்றி இருக்க வேண்டும்.

அதேபோல ஒவ்வொரு பணி பற்றிய தகவல் பரிமாற்றங்களும் இருக்க வேண்டும். உங்களை அடுத்து தொடர்ச்சியாக பணி செய்ய வருபவருக்கு முடித்த பணிகள், செய்ய வேண்டிய பணிகள் குறித்த தகவல்கள் தெரியப்படுத்தப்பட வேண்டும். இது தவிர இயல்பான பேச்சுப் பரிமாற்றங்களும் இருந்தால் நல்ல பயன் தரும்.

முற்போக்கு சிந்தனையும், பேச்சுத் திறனும்

வேலையை பெற்றுத் தருவதில் பேச்சுத்திறமையும், முற்போக்கு சிந்தனையும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதேபோல வேலையை தக்க வைத்துக் கொள்ளவும் இவை அவசியம். பேச்சுத் திறன் நல்ல நட்பு வட்டாரத்தோடு, வாடிக்கையாளர்கள் வட்டத்தையும் விரிவுபடுத்தும். வேலை சிறக்கும், வியாபாரம் அதிகரிக்கும். இடையிடையே கலகலப்பாக பேசுவது உங்களையும், சுற்றி இருப்பவர்களையும் உற்சாகப்படுத்தும். சுறுசுறுப்பாக பணி செய்யத் தூண்டும்.

அதேபோல முற்போக்கு சிந்தனையும் போட்டிகளை சமாளிப்பதிலும், தொழில் முன்னேற்றத்துக்கும் இரும்புத் தூண்போல இருந்து உதவி புரியும். இந்த திறமை களை நீங்கள் பெற்றிருந்தால் வேலையில் உயர்ந்த நிலைக்கு வரமுடியும்.

மேற்கண்ட விஷயங்கள்தான் வேலையை தக்க வைத்துக் கொள்வதற்கும், உங்களின் முன்னேற்றத்துக்கும் கைகொடுக்கும். தேவையற்ற விஷயங்களை வேலை நேரத்தில் பேசிக் கொண்டு இருப்பது, வீட்டு பிரச்சினைகளை வேலை நேரத்தில் குழப்பிக் கொள்வது, வீட்டு வேலைகளை அலுவலகத்துக்கு கொண்டுவருவது, அலுவலக வேலையை வீட்டுக்கு கொண்டு வருவது போன்றவை தவிர்க்க வேண்டியவை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

No comments: