Wednesday, July 15, 2009

இலங்கைத் தமிழர் - வரலாற்றுச் சுவடுகள் (32)


இலங்கைத் தமிழர்களுக்கு தனி சுதந்திர நாடு
"தமிழ் ஈழம் வேண்டும்"

வரலாற்றுப்
புகழ் பெற்ற வட்டுக்கோட்டை தீர்மானம் - 14.5.1976

************************************************************

லங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு ("தனி ஈழம்'') வேண்டும் என்று, இலங்கைத் தமிழர் தலைவர் செல்வநாயகம் தலைமையில், வட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேறியது. இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், அதற்கு மாநில சுயாட்சி வேண்டும் என்று `இலங்கைத் தமிழர்களின் தந்தை' என்று போற்றப்படுகிற செல்வநாயகம் போராடி வந்தார். இது குறித்து பிரதமர்கள் பண்டாரநாயகா, திருமதி பண்டாரநாயகா ஆகியோருடன் ஒப்பந்தங்களும் செய்து கொண்டார். இந்த ஒப்பந்தங்கள் பயனற்றுப்போயின. தமிழர்களுக்கு எதிராக சிங்களர்களின் அட்டூழியங்கள் தொடர்ந்தன.

இதனால் மனம் நொந்த செல்வநாயகம், "தனி நாடு பெற்றால்தான் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழமுடியும்'' என்ற முடிவுக்கு வந்தார். இதை அறிவிப்பதற்காக அவர் ஒரு மாநாட்டை கூட்டினார். வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள பண்ணாகம் என்ற ஊரில் 1976 மே 14-ந்தேதி இந்த மாநாடு நடந்தது. செல்வநாயகத்தின் பிரதம சீடரான அமிர்தலிங்கம் பிறந்த ஊர் பண்ணாகம்.

இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில், வட்டுக்கோட்டை மாநாடு மிகவும் முக்கியமானதாகும். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பெருந்திரளான மக்கள் இந்த மாநாட்டுக்கு வந்திருந்தனர். குறிப்பாக, இளைஞர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. "தமிழர்களுக்கு தனி மாநிலம்'', "மாகாண சபை'', "மாநில சுயாட்சி'' முதலான தத்துவங்களில் தமிழ் இளைஞர்கள் சலிப்படைந்து விட்ட காலகட்டம் அது. "தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும். சிங்களர் அடக்கு முறையில் இருந்து மீள அதுதான் வழி'' என்று அவர்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.

எனவே, வட்டுக்கோட்டை மாநாட்டுக்கு வந்த தமிழ் இளைஞர்கள், "தமிழ் ஈழம் வேண்டும்'', "தனி நாடு பற்றிய அறிவிப்பை வெளியிடுங்கள்'' என்று குரல் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

மாநாட்டுக்கு செல்வநாயகம் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் கூறியதாவது:- "தமிழர்களுக்கு தனி மாநிலம் அமைத்து, சுயாட்சி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். அதை சிங்கள அரசுகள் கேட்கவில்லை. ஐக்கிய இலங்கையில் தமிழர்கள் தன்மானத்துடன் வாழ்வதற்கு செய்த முயற்சிகள் தோற்றுவிட்டன. இந்நிலையில், தமிழர்களுக்கு என்று தனி சுதந்திர நாடு கோருவதை தவிர வேறு வழி இல்லை.'' இவ்வாறு செல்வநாயகம் கூறியபோது, மாநாட்டில் கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். "தமிழ் ஈழம் வாழ்க'' என்று முழக்கமிட்டனர்.

தொடர்ந்து, "வட்டுக்கோட்டை பிரகடனம்'' என்று வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும் தனி நாடு தீர்மானத்தை செல்வநாயகம் முன்மொழிந்தார். மு.சிவசிதம்பரம் வழிமொழிந்தார். அந்தத் தீர்மான வாசகம் வருமாறு:- "ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுள்ள, மதசார்பற்ற சோசலிச தமிழ் ஈழத்தை அமைப்பதற்கு நாம் எம்மை அர்ப்பணிப்போம். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு இதுவே பாதுகாப்பானதாக அமையும்.'' இந்தத் தீர்மானம் வாசிக்கப்பட்டதும், கூடியிருந்த இளைஞர்கள் "தமிழ் ஈழம் வாழ்க'', "தமிழ் ஈழத்தை அடைந்தே தீருவோம்'' என்று குரல் எழுப்பினர்.

இந்த தீர்மானத்தை அடுத்து, "தமிழர் கூட்டணி''யின் பெயரை "தமிழர் விடுதலை கூட்டணி'' என்று மாற்றத் தீர்மானிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளராக அமிர்தலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இலங்கையின் வரலாற்றையும், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள்தான் என்பதையும் விளக்கி சொற்பொழிவாற்றினார்.

பின்னர் அவர் கூறியதாவது:- "இலங்கைக்கு இங்கிலாந்து சுதந்திரம் வழங்கியபோது, தமிழர்களுக்கு தனி நாடு வழங்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. "சிறுபான்மை மக்களுக்கு பாதகமான சட்டங்களை நிறைவேற்றக் கூடாது'' என்று கூறி, முழு நாட்டையும் சிங்களரிடமே ஒப்படைத்து விட்டனர். சிங்களர்கள், தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாக ஆக்கிவிட்டனர். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குக்கூட, எந்த அரசாங்கமும் செவிசாய்க்கவில்லை. எனவே, இழந்துவிட்ட அரசுரிமையைப் பெற தமிழ் ஈழம் ஒன்றுதான் வழி என்று, இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். சுதந்திரத் தமிழ் ஈழத்தை அடைந்தே தீருவோம்.'' இவ்வாறு அமிர்தலிங்கம் கூறினார். அவருடைய பேச்சு, தமிழ் இளைஞர்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் வகையில் அமைந்திருந்தது. மாநாடு முடிந்ததும், அமிர்தலிங்கத்தை தோளில் தூக்கிக்கொண்டு இளைஞர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

இது நடந்து ஒரு வாரத்துக்குப்பின், தமிழ் ஈழம் பற்றிய துண்டு பிரசுரங்களை விநியோகிக்க, செல்வநாயகமும் அமிர்தலிங்கமும், மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி பிரமுகர்களும், யாழ்ப்பாணம் பஸ் நிலையம் அருகே கூடினர். பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

அப்போது, ஆயுதம் தாங்கிய போலீசார் ஜீப்களில் வந்தனர். "உங்களை கைது செய்யும்படி எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறது. எங்களுடன் வாருங்கள்'' என்று, அமிர்தலிங்கத்திடம் போலீஸ் அதிகாரிகள் கூறினர். "என்னையும் கைது செய்யுங்கள்'' என்று செல்வநாயகம் கூறினார். "நீங்கள் எங்களுக்குத் தேவை இல்லை'' என்று, போலீஸ் அதிகாரி சொன்னார். அமிர்தலிங்கம், வி.என்.நவரத்தினம், கே.பி.ரத்தினம், கே.துரை ரத்தினம், எம்.சிவசிதம்பரம் ஆகியோரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இவர்களுடன் சென்ற செல்வநாயகத்தை போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர்.

அமிர்தலிங்கத்தின் மீதும் மற்றவர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. தேசத்துரோகம் செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. நெருக்கடி கால சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கோர்ட்டில் இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நெருக்கடி கால சட்டம் முறைப்படி பிரகடனம் செய்யப்படவில்லை என்றும், அந்த சட்டப்படி அமைக்கப்பட்ட கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கும் செல்லாது என்றும், அமிர்தலிங்கத்தின் தரப்பிலும், மற்ற தலைவர்களின் தரப்பிலும் வாதாடப்பட்டது. இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, அமிர்தலிங்கத்தையும், மற்றவர்களையும் விடுதலை செய்தனர். இந்தத் தீர்ப்பு பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

'இலங்கைத் தமிழர்களின் தந்தை' செல்வநாயகம் மறைவு - நாளை

நன்றி தினத்தந்தி


No comments: