Monday, July 13, 2009

இலங்கைத் தமிழர் - வரலாற்றுச் சுவடுகள் (30)

போலீசாரிடம் சிக்காமல் பிரபாகரன் தப்பினார்
காட்டில்
இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி
***************************************************

யாழ்ப்பாணம் மேயர் துரையப்பாவை சுட்டுவிட்டு காரில் தப்பிச்சென்ற பிரபாகரனும், அவருடைய நண்பர்களும், நீர்வேலி என்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டு, ஆளுக்கொரு திசையில் நடந்து சென்றனர். பிரபாகரனைத் தவிர மற்ற மூவரும், பிறகு பஸ்களில் ஏறி வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர். பிரபாகரன் தன் குடும்பத்தைப் பிரிந்து வந்து வெகு காலம் ஆகியிருந்தது. எனவே, அவர் நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று தங்கினார். எதுவுமே நடக்காதது போல் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டார். மறுநாள் காலை நண்பர் எழுந்து பார்த்தபோது, பிரபாகரனைக் காணவில்லை. 'அவசரமாகப் புறப்பட்டுப் போய்விட்டார் போலிருக்கிறது' என்று நண்பர் நினைத்தார்.

மறுநாள் காலை பத்திரிகைகளில் துரையப்பா கொலை பற்றிய செய்தி, முதல் பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது. இச்செய்தி, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. துரையப்பா, இலங்கை அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக இருந்தார். அவரையும், குமாரசூரியரையும் வைத்து, தமிழர்களுக்கு மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்கலாம் என்று பிரதமர் திருமதி பண்டாரநாயகா எண்ணியிருந்தார். இந்நிலையில் துரையப்பா கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியால், அவர் தாங்க முடியாத அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார்.

"துரையப்பாவை கொலை செய்தவர்களை உடனே கண்டுபிடித்து கைது செய்யுங்கள்'' என்று, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். "தமிழர் கூட்டணி'' யின் தூண்டுதலின் பேரிலேயே, சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இக்கொலையைச் செய்திருக்க வேண்டும் என்று சி..டி. போலீஸ் கருதியது. குறிப்பாக, அமிர்தலிங்கத்தின் மீது அவர்களுடைய சந்தேகப் பார்வை விழுந்தது. உண்மையில், போராளிகள் எவரும் வன்முறையில் ஈடுபடாமல் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை அமிர்தலிங்கத்திடம் செல்வநாயகம் ஒப்படைத்து இருந்தார். அதற்காக, போராளிகளை அமிர்தலிங்கம் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். இதனால்தான், போலீசார் அமிர்தலிங்கத்தின் மீது சந்தேகப்பட்டார்கள்.

தமிழர் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். எந்த துப்பும் கிடைக்கவில்லை. எனினும், பிரபாகரன் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தார். துரையப்பா கொலையில் தனக்குத் துணையாக இருந்த மூவரிடமும், "உங்கள் வீட்டில் தங்கியிருக்காதீர்கள். தலைமறைவாக இருங்கள்'' என்று கூறினார். பிரபாகரனின் எச்சரிக்கைப்படி நடக்காமல், அந்த நண்பர்கள் அலட்சியமாக இருந்தனர். அதன் விளைவாக, ஆகஸ்ட் 21-ந்தேதி கிருபாகரனும், செப்டம்பர் 19-ந்தேதி கலாபதியும் அவர்களுடைய வீடுகளில் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் சித்ரவதை செய்ததில், அவர்கள் நடந்ததையெல்லாம் அப்படியே கூறிவிட்டனர். பிரபாகரனின் பெயர் வெளிஉலகுக்கு தெரிந்தது. அவரைப் பிடிக்க நாலாபுறமும் போலீசார் அனுப்பப்பட்டனர்.

பிரபாகரன் எப்படி இருப்பார் என்று போலீசுக்குத் தெரியாது. அவர் தந்தை வீட்டுக்குச் சென்று சோதனை போட்டபோது, படம் எதுவும் கிடைக்கவில்லை. ஏனென்றால், வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் தன்னுடைய போட்டோக்களை எல்லாம் கிழித்து எறிந்து விட்டார். அவர் அக்காவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட ஒரே ஒரு படத்தில் மட்டும் அவர் இருந்தார். சிறுவனாக இருந்தபோது எடுக்கப்பட்ட படம் அது. அதை வைத்து பிரபாகரனை பிடிக்க போலீசார் முயன்றனர்.

ஆனால், பிரபாகரன் வவுனியா காட்டுக்குள் புகுந்து விட்டார். அந்த அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து விட்டால் தன்னை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று பிரபாகரன் எண்ணினார். அவர் நினைத்தபடியே நடந்தது. பிரபாகரனை தேடும் முயற்சியில் போலீசார் தோல்வி அடைந்தனர்.

வவுனியா நகரில் இருந்து 3 மைல் தூரத்தில் அந்த காட்டுப் பகுதி உள்ளது. தமிழ் ஈழ விடுதலைக்காக தமிழ் இளைஞர்களை ஒன்று திரட்டி, அந்த காட்டுப்பகுதியில் ராணுவப் பயிற்சி அளிக்கத் தீர்மானித்தார், பிரபாகரன். லட்சியத்தில் பிடிப்புள்ள இளைஞர்களாகப் பார்த்து தேர்வு செய்தார். குறிபார்த்து சுடுவதில் பிரபாகரன் வல்லவர். மற்றவர்களும் இதேபோல் குறிபார்த்து சுடவேண்டும் என்று விரும்பி, அதற்கேற்றவாறு பயிற்சி அளித்தார். துப்பாக்கிகளும், குண்டுகளும் தேவைப்பட்டன. அவற்றை வாங்க பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்தார்.

போலீசார் தேடி வருவதால், பொதுமக்களிடம் சென்று நிதி திரட்ட முடியாது. எனவே, அரசு வங்கியை கொள்ளையடிப்பது என்று பிரபாகரனும், அவர் நண்பர்களும் முடிவு செய்தனர். புத்தூர் என்ற இடத்தில் உள்ள அரசு வங்கியை அவர்கள் பல நாட்கள் கண்காணித்தனர். வங்கி எத்தனை மணிக்குத் திறக்கப்படுகிறது, எத்தனை மணிக்கு மூடப்படுகிறது என்பதை எல்லாம் நோட்டம் விட்டனர். வங்கிக்குள் புகுந்து, பணத்தை எப்படி கைப்பற்றிக் கொண்டு வருவது என்று தெளிவாக திட்டம் வகுத்தார்.

1976-ம் ஆண்டு மார்ச் 5-ந்தேதி. வங்கி திறந்ததும், பிரபாகரன் அவருடைய நண்பர்களுடன் உள்ளே நுழைந்தார். வங்கி அதிகாரிகளை, துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். எல்லோரும் பயந்துபோய் இரண்டு கைகளையும் தூக்கினார்கள். அவர்கள் அனைவரையும் மானேஜர் அறைக்குள் தள்ளி கதவைத் தாழிட்டார். வங்கியில் இருந்த ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கத்தையும், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் பிரபாகரனும், அவர் நண்பர்களும் அள்ளி மூட்டையாகக் கட்டினார்கள். மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்கள். ஐந்தே நிமிடத்தில் இவ்வளவும் நடந்து விட்டது.

பிரபாகரன் இந்த பணத்தில் ஒரு பகுதியை வல்வெட்டித்துறையில் உள்ள கோவிலுக்கு வழங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்தார். மீதிப்பணத்தில் துப்பாக்கிகளும், குண்டுகளும் ரகசியமாக வாங்கப்பட்டன. "தமிழ் ஈழம் அடையவேண்டுமானால், சிறிய ராணுவக் குழுவால் முடியாது. சிங்கள ராணுவத்தை எதிர்த்து போராடக்கூடிய அளவுக்கு பெரிய ராணுவத்தை உருவாக்க வேண்டும்'' என்று பிரபாகரன் எண்ணினார். பலநாள் சிந்தனைக்குப் பிறகு, அவர் மனதில் ஒரு திட்டம் உருவாயிற்று.

"புதியத் தமிழ்ப்புலிகள்" - நாளை
நன்றி தினத்தந்தி

No comments: